`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

தஞ்சாவூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``காவிரியை நம்பித்தான் நிலத்தடி நீர் உள்ளது. ​சென்னை உட்பட 11 மாநகராட்சிகள், 32 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி நீர் விளங்குகிறது. மேலும், 12 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், 3,500 கனஅடி வீதம்,15 தினங்களுக்கு தண்ணீரை காவிரியில் விடுவிக்க வேண்டும் என்கிற காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ​ஆனால், இன்று வரையிலும் ஒரு சொட்டு தண்ணீர்கூட விடுவிக்கப்படவில்லை.

பி.ஆர்.பாண்டியன்

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு, கர்நாடக அரசு தண்ணீரை திறக்க மறுத்தால், மத்திய அரசிடம் முறையிட்டு, தண்ணீரை திறக்கலாம் என காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் தீர்ப்பில் கூறியுள்ளன. அதனைப் பயன்படுத்தி, காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு உதவியோடு காவிரி நீரை கர்நாடகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும். 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அந்த தீர்ப்பில் வேறு எதுவும் முறையீடுகள் இருந்தால் மாற்றம் காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. ​

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் விஜய் செல்வேன் எனச் சொல்வது தமிழக நலனுக்கு எதிரானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு வரும் போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், கர்நாடகா சென்றுவிட்டு, முதல்வர் விஜய் திரும்பும்போது, கர்நாடக முதல்வர் சிவக்குமாரையும் அழைத்து வந்து காவிரி டெல்டாவில் வறண்டு கிடக்கும் பாசனப் பகுதிகளைப் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேகதாது
மேகதாது

மயிலாடுதுறை எம்.பி சுதாவின் கேள்விக்கு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் அளிக்க முடியாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளனர். ​கடந்த, ஜூன் 24ம் தேதி, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத், நீர்வள ஆணையத்தில் மேகதாது அணைக்காக பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள யோகேஷ் பாட்டன்கர் ஆகிய இருவரையும் சந்தித்து, காவிரி மேலாண்மை ஆணையம் 2022-ம் ஆண்டு, கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட்டது. இதனை மத்திய நீர்வள ஆணையம் நிராகரிக்காமல் இருப்பில் வைத்து இருப்பதால்தான் கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது.

மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேகதாது அணை கட்டுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், அதனை நீங்கள் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கூறினோம். அதனை ஏற்று ஜூன் 29-ம் தேதியே, மேகதாது வரைவு திட்ட அறிக்கையை, கர்நாடகாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மத்திய நீர்வள ஆணையத் தலைவர்களின் செயல்பாட்டை வரவேற்கிறோம். எனவே, இந்த அடிப்படையில், காவிரி குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடைபெறுகிற பணிகள் குறித்து முதல்வர் விஜய் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ​

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

எந்த சூழ்நிலையிலும் காவிரி குறித்து கர்நாடகாவோடு பேச்சுவார்த்தை நடத்துவதை ஏற்க மாட்டோம். அப்படிப் பேச்சுவார்த்தைக்கு செல்வாரேயானால் கர்நாடக தமிழர்களுக்கு யார் பொறுப்பேற்பது? திரும்பும்போது அவர் கர்நாடக முதல்வரை சிவக்குமாரை காவிரி டெல்டா பாசன பகுதிகளை காண்பிப்பதற்கு அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொள்வாரா என்கிற உத்தரவாதத்தை தமிழக விவசாயிகளுக்கு முதல்வர் விஜய் உடனடியாக அறிக்கை மூலமாக வெளியிட வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.