நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்து; சிலிண்டர் வெடித்ததில் தீயை அணைத்தவர்கள் உட்பட 10 பேர் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகையன் (51) விவசாயி. இவர் மனைவி செல்வி (41), இவர்களது மகள் அபிநயா 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வீட்டின் முன்பகுதியில் கீற்றுக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சமையல் செய்து வந்துள்ளனர். மூவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் கீற்றுக்கொட்டகையில் தீ பிடித்து எரிந்துள்ளது.

தீ விபத்து

தூக்கத்தில் இருந்த மூவரும் கண் விழிக்க கீற்றுக் கொட்டகை எரிவதைக் கண்டு அலறியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை வெளியே மீட்டனர். மேலும் அங்கிருந்த பொருள்களை எடுத்து தீயை அணைக்க முயன்றனர். இந்த படபடப்பில் சமையலுக்காகப் பயன்படுத்திய காஸை கவனிக்கவில்லை. இந்நிலையில் தீயில் காஸ் வெடித்துச் சிதறியது.

இதில் முருகையன் மனைவி செல்வி, மகள் அபிநயா, தீயை அணைக்க முயன்ற அப்பகுதியைச் சேர்ந்த காசிநாதன், ராஜசேகர், பழனிவேல், வேம்பையன், கலையரசி, புவனேஷ், செல்வராஜ், காளியம்மாள் உள்ளிட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தீ பற்றி எரிந்த வீடு

சம்பவ இடத்தில் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக், எஸ்.பி சுந்தரவதனம், வல்லம் டி.எஸ்.பி காயத்ரி உள்ளிட்டோர் பார்வையிட்டனர். விபத்து குறித்து திருவோணம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சையில் இருப்பவர்களில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் ரேவதி நேரில் பார்வையிட்டு நலம் விசாரித்தார். தீயை அணைக்கச் சென்றவர்கள் உட்பட காஸ் வெடித்ததில் படுகாயமடைந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.