ராகுல் vs அமித் ஷா: மாணவர்கள் மீதான வன்முறைக்கு அமித் ஷாதான் காரணமா? - நாடாளுமன்றத்தில் காரசாரம்
நேற்று (ஜூலை 29) நாடாளுமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி vs மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எனக் காரசார விவாதம் சென்றது.
ராகுல் காந்தி vs அமித் ஷா
வினாத்தாள் கசிவு சம்பந்தமாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதற்கு அமித் ஷாதான் காரணம் என்று ராகுல் காந்தி பேசினார். மேலும், நேற்று அமித் ஷா மக்களவைக்கு வராதது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு உடனே பாஜக அமைச்சர்கள் கிரண் ரிஜ்ஜூ, ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக குரல்கள் எழ, அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.
இந்த விவாதத்தால் மக்களவைக்குள் அமளி ஏற்பட, சிறிது நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அமித் ஷா குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், அவருடைய பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் பாஜக தரப்பில் இருந்து குரல் எழுப்பப்பட்டது.
மன்னிப்பு?!
அமித் ஷா மீதான குற்றச்சாட்டிற்கு, "துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவை ஒரு நீதிபதியோ அல்லது கோட்டாட்சியரோ மட்டுமே பிறப்பிக்க முடியும். ஒரு அமைச்சரால் அந்த உத்தரவைக் கொடுக்க முடியாது" என்று பாஜக விவாதம் செய்தது.
இருந்தும், ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க தயாராக இல்லை.
பின் தொடங்கப்பட்ட அவையில் ராகுல் காந்திக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, நேற்று மாலை ராகுல் காந்தி, அமித் ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து பேச செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் ராகுல் காந்தி முன்வைத்த முக்கிய விஷயங்கள்...
"மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதற்குச் சாக்காக, நான் அமித் ஷா பற்றி ஏதோ பேசிவிட்டேன் என்று சொல்கிறார்கள்.
நான் மன்னிப்புக் கேட்டால் தொடர்ந்து பேச அனுமதிக்கப்படுவேன் என்று கூறுகிறார்கள். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நபர்களிடம் நான் ஒருபோதும், எந்தச் சூழலிலும் மன்னிப்புக் கேட்க மாட்டேன்.
நான் புரிந்துகொண்ட வரை இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா. காவல்துறை அல்லது உள்துறை அமைச்சகத்துடன் தொடர்புடைய படைகளால் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அவருடைய உத்தரவு தேவை.
நானே பார்த்தேன்...
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தபோது, அமித் ஷா காவல் அதிகாரிகளைத் தொலைபேசியில் அழைத்து பேசுவதை நானே பார்த்தேன்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு அமித் ஷாவிடமிருந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்ததையும் பார்த்தேன்.
எனவே, வீதிகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
இப்போது இதில் இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளன. முதலாவது, மக்கள் மீது பெல்லட் துப்பாக்கிச் சூடு நடத்துங்கள், ஆணிகள் அடித்த தடிகளால் அடியுங்கள், எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் லத்திகளைப் பயன்படுத்துங்கள் என்று அவரே உத்தரவிட்டிருக்க வேண்டும். அல்லது, இது நடப்பதே அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.

அமித் ஷா குற்றவாளி
இது நடப்பதே தெரியவில்லை என்றால் அவர் தகுதியற்றவர். ஒருவேளை அவர்தான் உத்தரவிட்டார் என்றால் அவர் குற்றவாளி. இதைத் தவிர மூன்றாவது சாத்தியக்கூறே இல்லை.
டெல்லி காவல்துறையும் சரி, விரைவு அதிரடிப் படையும் சரி இரண்டுமே அமித் ஷாவின் கீழ்தான் வருகின்றன.
எனவே, பிரதமருக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்... அமித் ஷாவை பதவியில் இருந்து நீக்குங்கள். உச்சநீதிமன்றத்தின் உயர்மட்டக் குழுவின் கண்காணிப்பில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள்" என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


