எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க அரசிற்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். பின்னர் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியில் மீண்டும் இணைந்தாலும் அவரது பழைய பதவி வழங்கப்படவில்லை. இதேபோல எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்களுக்கும் பழைய பதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் இரண்டு தரப்பினரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டி எஸ்.பி.வேலுமணியை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி.வேலுமணியின் தீவிர ஆதரவாளர்களான கோவை மண்டல ஐ.டி விங் துணைச் செயலாளர் ரியோஸ்கான், மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சசிகுமார், பொள்ளாச்சி நகர ஐ.டி. விங் இணைச் செயலாளர் அருண்குமார் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இது எஸ்.பி. வேலுமணி தரப்பினரை கொதிப்படையச் செய்துள்ளது.
இது குறித்து ரியோஸ்கான் கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி தனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக அ.தி.மு.க-வை குடும்ப கட்சியாக மாற்றிவிட்டார். இதனை தட்டிக் கேட்டதால் எங்களது பதவிகளை பறித்துள்ளார். தேர்தலின் போதே அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்ற எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் காரணமாக யாரையும் சேர்க்கவில்லை. ஒருவேளை அவர்களை சேர்த்திருந்தால், அ.தி.மு.க இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலை உருவாகியிருக்கும். கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த, சிறை சென்று வந்தவர்களை எல்லாம் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
தனது பதவியை காப்பாற்ற வேண்டுமென்ற பயம் காரணமாக பொதுக்குழுவை கூட்டாமல் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மகன் வாழ்க என்று சொல்பவர்களுக்கு மட்டுமே பதவி தருகிறார். யார் கூறுவதையும் அவர் மதிப்பதில்லை. தனது மகன் பேச்சை கேட்டு செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அ.தி.மு.க தொண்டர்கள் எல்லாம் த.வெ.க-விற்கு செல்கிறார்கள். பதவி பறிக்கப்பட்டாலும் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக எங்களது பயணம் கடைசிவரை தொடரும்” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

