“அப்பா லோடுமேன், அம்மா கூலி தொழிலாளி!” - CWG வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டியின் நெகிழ்ச்சி பயணம்
“வெள்ளி பதக்கம் வாங்கியது சந்தோஷம்தான்… ஆனா தங்கத்தை தவறவிட்டுட்டோமேன்னு இன்னும் வருத்தமா இருக்கு. என்னோட அடுத்த இலக்கு ஒன்றுதான்… இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லணும்!”
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள கோவில்பட்டியைச் சேர்ந்த பளுதூக்குதல் வீரர் ராஜா முத்துப்பாண்டி பேசும்போது, அவரது குரலில் வெற்றியின் மகிழ்ச்சியை விட இன்னும் பெரிய கனவின் துடிப்பே அதிகமாக இருந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி என்றாலே ஹாக்கி, கபடி போன்ற விளையாட்டுகளுக்குப் பெயர் பெற்ற ஊர். அந்த ஊரில்தான் ராஜா முத்துப்பாண்டியும் வளர்ந்தார். பள்ளிப் பருவத்தில் அவரும் கபடிதான் விளையாடத் தொடங்கினார். அவரது மாமா சர்வதேச கபடி வீரர். “அவர் தான் என்ன முதன்முதலா ஜிம்முக்கு கூட்டிட்டு போனார். அப்பதான் பளுதூக்கும் விளையாட்டு மேல ஆர்வம் வந்துச்சு. அங்க இருந்து கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி எடுத்துட்டு தேசிய அளவுல போட்டிகளில் விளையாட ஆரம்பிச்சேன்,” என்று தனது பயணத்தை நினைவுகூர்கிறார்.ராஜா முத்துப்பாண்டி
12 வயதில் பளுதூக்குதல் பயிற்சியை தொடங்கிய ராஜா, இன்று இந்தியாவின் முன்னணி வீரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தனது பயிற்சியாளர் கபீரை அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். “மயிலாடுதுறையைச் சேர்ந்த என்னோட கோச் கபீர் சார் தான் என்னை நம்பி நிறைய பயிற்சி கொடுத்தார். அதுக்கப்புறம்தான் தேசிய அளவில் என்னோட முதல் பதக்கம் கிடைச்சது,” என்கிறார்.
ஆனால், இந்த வெற்றிப் பயணத்தின் பின்னால் இருக்கும் குடும்பத்தின் கஷ்டங்கள்தான் அவரது கதையை இன்னும் வலிமையாக்குகின்றன.
“என்னோட அப்பா தீப்பெட்டி தொழிற்சாலையில் லோடுமேனா வேலை பார்க்கிறார். அம்மாவும் அதே தொழிற்சாலையில் கூலி வேலை செய்றாங்க. அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. அவங்கள இன்னும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நானும் பெருசா எதையும் எதிர்பார்க்க மாட்டேன்,” என்று பேசும் போது அவரது குரலில் பெற்றோரின் உழைப்புக்கான மரியாதை வெளிப்படுகிறது.
தனது விளையாட்டு செலவுகளுக்காக முடிந்தவரை தானே சம்பாதித்ததாகவும், தேவைப்பட்டால் கடன் வாங்கிக்கூட போட்டிகளில் பங்கேற்றதாகவும் அவர் கூறுகிறார். “எனக்கான செலவுகளை நானே பார்த்துப்பேன். முடியலன்னா கடன் வாங்கியாவது சமாளிச்சிருக்கேன். என்னோட அண்ணனும் பளுதூக்குதல் போட்டிகளில் விளையாடியவர். இப்போ முழுமையாக எனக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்கார். கடந்த எட்டு வருடங்களாக ஒரு தனியார் நிறுவனத்தின் ஊக்கத்தொகையால்தான் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடிஞ்சது,” என்கிறார்.
காயங்களையும், பொருளாதார சவால்களையும் கடந்து ராஜா முத்துப்பாண்டி இந்த நிலையை அடைந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான முழங்கை காயத்தால் அறுவை சிகிச்சை செய்து நீண்ட காலம் போட்டிகளில் இருந்து விலகியிருந்தாலும், மனம் தளராமல் மீண்டும் பயிற்சிக்கு திரும்பி தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தனது திறமையை நிரூபித்தார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவர் 65 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், அதில் முழுமையான திருப்தி இல்லை என்கிறார்.

“வெள்ளி பதக்கம் வாங்குனது சந்தோஷம்தான். ஆனா தங்கத்தை தவற விட்டுட்டோம்னு இன்னும் வருத்தமா இருக்கு. அந்த வருத்தம்தான் என்னை இன்னும் கடினமா உழைக்க வைக்குது,” என்று உறுதியுடன் கூறுகிறார்.
இப்போது அவரது முழு கவனமும் ஒலிம்பிக்கில்தான். “இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வாங்கணும்னுதான் என்னோட பெரிய கனவு. அதுக்கான பயிற்சியை இப்பவே ஆரம்பிச்சுட்டேன். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடக்குற அடுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் அக்டோபர்ல தொடங்குது. எனக்கு சில காயங்கள் இருக்கு. அத சரி பண்ணிட்டு முழுமையாக தயாராகி தகுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வாங்குவேன்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ராஜா முத்துப்பாண்டி.
தீப்பெட்டி தொழிற்சாலையில் லோடுமேனாக உழைக்கும் தந்தையின் மகன், தினக்கூலி தொழிலாளியின் குடும்பத்தில் இருந்து உலக அரங்கில் இந்தியக் கொடியை உயர்த்தி நிற்கும் வீரராக உயர்ந்திருக்கிறார். காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் அவரது பயணத்தின் முடிவல்ல; இந்தியாவுக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற அவரது கனவை நோக்கிய அடுத்த கட்டத்தின் தொடக்கம்தான்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


