`ஒரு சேலை முடிச்சுக்கு ₹10 கிடைக்கும் - பட்டுச் சேலைகளுக்கு உயிர் கொடுக்கும் இளம்பிள்ளை பெண்கள்!

சேலம் மாவட்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பவர்லூம் தறிகளின் ஓசையும் பட்டுச் சேலைகளின் ஜொலிப்பும்தான். குறிப்பாக, இளம்பிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டுச் சேலைகள் தினமும் தயாராகி, தமிழகம் தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தத் தொழிலில், தறியில் இருந்து இறங்கும் சாதாரணத் துணிக்கு ஜும்கி ஸ்டோன்கள் ஒட்டுவது, கைமுடிச்சுகள் போடுவது தொடங்கி, வாடிக்கையாளர்களின் கைகளை அடையும் முன் அதை அழகாக விசிறி வடிவில் மடித்துத் தயார்படுத்தும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் கைவண்ணம் இருக்கிறது.

குறைந்த கூலி மற்றும் உடல் வலிகளைத் தாண்டி, குடும்பத்தின் பொருளாதாரத்திற்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடும் இவர்களின் உழைப்பு பெருமைக்குரியது. அந்தப் பெண்களின் வாழ்வியலையும் உழைப்பின் கதையையும் பார்ப்போம்...

ஜும்கி ஸ்டோன்கள்: பொறுமையும் நுணுக்கமும் நிறைந்த முதல் அடி!

"காலை எட்டு மணிக்கு வேலை ஆரம்பிச்சா, சில நேரம் ராத்திரி பத்து, பதினொரு மணி வரைக்கும்கூட வேலை பண்ணுவோம். தீபாவளி, பொங்கல், முகூர்த்த சீசன் நேரங்கள்ல நிறைய வேலைகள் இருக்கும்; அந்த சீசன்ல ₹15,000 வரைக்கும்கூட சம்பாதிக்க முடியும். ஆனா, மத்த நாள்கள்ல வாரத்துக்கு மூணு, நாலு நாள்கள் மட்டும்தான் வேலை இருக்கும்.

அந்த டைம்ல ஒரு நாளைக்கு ₹300-லிருந்து ₹400 வரைக்கும் சம்பாதிக்க முடியும்" என்கிறார், இளம்பிள்ளையைச் சேர்ந்த பெண் தொழிலாளி உமா.

நீளமான மர மேசைகளின் மீது பட்டுச் சேலைகளை முழுவதுமாக விரித்து வைத்து, அதன் டிசைனுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜும்கி ஸ்டோனையும் மிகுந்த பொறுமையுடன் ஒட்டும் பணி மிக நுணுக்கமானது.

ஜும்கி ஸ்டோன்களை ஒட்டுவதற்கு இரண்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. முதல் முறையில், ஒவ்வொரு ஜும்கி ஸ்டோனையும் கையால் எடுத்து, டிசைனுக்கு ஏற்ப பசை தடவி ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டுகின்றனர்.

இரண்டாவது முறையில், அந்த டிசைன்களுக்கு ஏற்பத் தனித்தனி அட்டைகள் இருக்கும். அந்த அட்டைகளின் மீது ஜும்கி ஸ்டோன்களைப் போட்டு, அதன் மீது ஸ்டிக்கரை ஒட்டி எடுப்பார்கள். பிறகு, அந்த ஸ்டிக்கரைச் சேலையின் டிசைன்களுக்கு ஏற்ப அதன் மீது வைத்து, அயர்ன் பாக்ஸின் வெப்பத்தின் மூலமாக அந்த ஜும்கி ஸ்டோன்களைப் பதிப்பார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு ஸ்டிக்கரை அகற்றியவுடன், ஜும்கி ஸ்டோன்கள் சேலையின் டிசைனுக்கு ஏற்ப அழகாகப் பதிந்துவிடும்.

ஒவ்வொரு சேலைக்கும் பயன்படுத்தப்படும் ஜும்கி ஸ்டோன்களின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சேலையின் டிசைன், பார்டர் மற்றும் வேலைப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து ஜும்கி ஸ்டோன்களின் எண்ணிக்கை மாறுபடும். அதனால், இந்தப் பணிக்கான கூலியும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும் சேலையின் முழு அழகும் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பணியில் பெண்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுகின்றனர்.

அழகு சேர்க்கும் கைமுடிச்சுகள்!

"எனக்கு 35 வயசாகுது. கடந்த 15 வருஷமா இந்த வேலைதான் பண்ணிட்டு இருக்கேன். பட்டுச் சேலை, பொன்னாடை ஓரங்கள்ல முடிச்சு போடுறதுதான் என்னோட வேலை. வீட்டுல இருந்தபடியே இந்த வேலையைச் செய்து குடும்ப வருமானத்துக்கு உதவி பண்றேன்," என்கிறார் கோகிலா.

பட்டுச் சேலை மற்றும் பொன்னாடைகளின் ஓரங்களில் முடிச்சு போடும் பணி முற்றிலும் கைகளால் மட்டுமே செய்யப்படுகிறது. பொன்னாடைக்கு ₹2 வரை கூலி கிடைக்கும் நிலையில், பட்டுச் சேலையின் வேலைப்பாட்டைப் பொறுத்து ₹10 முதல் ₹15 வரை கூலி வழங்கப்படுகிறது. சேலையின் நேர்த்தியை உறுதிப்படுத்தும் இந்தப் பணியை பல பெண்களும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே செய்து வருகின்றனர்.

ரசிக்க வைக்கும் விசிறி மடிப்புகள்!

சேலையின் அனைத்து வேலைப்பாடுகளும் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்களின் கைகளை அடையும் முன் அதை அழகாக மடித்துத் தயார்படுத்தும் பணி தொடங்குகிறது. நீளமான மடிப்பு மேசையில் இரண்டு பேர் இணைந்து, எந்தச் சுருக்கமும் இன்றி கைகளாலேயே விசிறி வடிவங்களில் நேர்த்தியாக மடிக்கின்றனர். இந்தப் பணியைச் செய்வதற்காக ஒரு சேலைக்கு ₹15 முதல் ₹20 வரை கூலி வழங்கப்படுகிறது.

கைக்கொடுக்கும் குடும்ப உறவுகள்!

இந்தத் தொழில் பெண்களின் தனிப்பட்ட உழைப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த குடும்பத்தின் கூட்டு முயற்சியால் மட்டுமே வெற்றிகரமாக இயங்குகிறது.

"இது என்னோட வேலை மட்டும் இல்ல; எங்க குடும்பத் தொழில் மாதிரி. பள்ளி விடுமுறையில குழந்தைகளும் உதவி செய்வாங்க. வீட்டுல இருக்கிற பெரியவங்களும் அவங்களால முடிஞ்ச வேலையைச் செய்வாங்க.

ஆண்களும் தறிக்கூடங்கள் மற்றும் குடோன்களுக்குப் போய், அங்கிருந்து சேலைகளை வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க; வேலை முடிந்த உடனே அதைத் திருப்பி அந்த ஆலைகளுக்குக் கொண்டு போய் கொடுப்பது போன்ற உதவிகளையும் செய்வாங்க. எல்லாரும் சேர்ந்து பண்றதாலதான் வேலை வேகமா முடியுது" என்று பகிர்கிறார் கோகிலா.

சவால்களும் உடல் வலியும் நிறைந்த மறுபக்கம்!

வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடும் இவர்களின் பயணம் எளிதானது அல்ல. ஜும்கி ஸ்டோன்கள், பசை, டிசைன் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்ந்துள்ளதுடன், மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஆனால், அதற்கேற்ற வகையில் கூலி உயரவில்லை என்பது தொழிலாளர்களின் நீண்டகால ஆதங்கமாக உள்ளது.

மேலும், நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வது, சேலையைத் தொடர்ந்து உற்றுப் பார்த்து நுணுக்கமாக வேலை பார்ப்பது, அயர்ன் பாக்ஸின் வெப்பத்தில் பணியாற்றுவது போன்ற காரணங்களால் கை, கால், முதுகு, இடுப்பு வலி, கண் எரிச்சல் மற்றும் கண் வலி உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை இந்தப் பெண்கள் தினமும் எதிர்கொள்கின்றனர்.

இத்தகைய உடல் வலிகளையும் பொருளாதாரச் சவால்களையும் கடந்து, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பட்டுச் சேலைகளுக்கு இறுதிக்கட்ட அழகையும் மதிப்பையும் சேர்த்து வருகின்றனர் இளம்பிள்ளையின் கைவினைப் பெண்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.