PM Shri School: `ஏழு கோடி பேர் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் - சு.வெங்கடேசன்

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பி.எம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அரசு அளித்திருந்த பதிலை தன் எக்ஸ் பக்கத்தில் விரிவான பதிவாக வெளியிட்டிருக்கிறார்.

அவரின் பதிவில், ``கொடுமை! 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம். ஏழு கோடி மக்கள் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது.

பிஎம் ஸ்ரீ திட்டம்

இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் பிஎம் ஸ்ரீ பள்ளியின் புள்ளிவிவரம். மும்மொழி என்பது இந்தி, சமஸ்கிருதத் திணிப்புதான். மாநில மொழி ஊக்குவிப்பு என்பது ஏமாற்று. அமைச்சர் பதிலில் அம்பலம்.

நான் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுக்க எத்தனை உள்ளன? அவற்றில் எத்தனை இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்? என்று கேட்டிருந்தேன்.

அதற்கு பதிலளித்துள்ள கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகளைப் பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் இதுவரை 13,092 பள்ளிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது ஆசிரியர்கள் 1,994 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில மொழிகளுக்கு 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி

பி.எம்.ஶ்ரீ திட்டம் என்பதில் நாங்கள் மும்மொழியை வலியுறுத்துவது இந்திய மொழிகளை, மாநில மொழிகளை வளர்ப்பதற்கே என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் வாய் பந்தல் போட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக அளவில் 6,102 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலேயே மிகக் குறைவான பேர் அதாவது 24,821 பேர் மட்டுமே அதாவது 0.002 சதவீதம் பேர் பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சமஸ்கிருதம் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

இரண்டாவது மொழியாக, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் பேசுபவர்களைச் சேர்த்தால் கூட ஒரு சதவீதம் கூட வரவில்லை. கால் சதவீதமே ஆகும். ஒளியாத பூனையாக இந்தி ஏற்கனவே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 

மேலும், அமைச்சரின் பதிலில் மாநில மொழி என தரப்பட்டுள்ள எண்ணிக்கை அந்தந்த மாநிலத்தின் மொழிகள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. காரணம் மொழி வாரியாக பட்டியல் என்றே பதிலில் தரப்பட்டுள்ளது. வேறு மாநில மொழிகள் எனில் அந்த விவரம் தரப்பட்டிருக்கும். மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மூன்றாம் மொழியாக வரலாம் என்றெல்லாம் இங்கு கதைகளை அவிழ்த்து விட்டார்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

ஆனால் சமஸ்கிருத ஆசிரியர்கள் மத்தியப் பிரதேசத்தில் 1,211 பேர். இது அங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் (944 பள்ளிகள்). ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.  தாய்மொழியைப் பாதுகாத்து வளர்ப்பதுதான் புதிய கல்விக் கொள்கையும், பி.எம்.ஶ்ரீ பள்ளிகளும் என்று பெருமை பேசும் பிரதமர் மோடியின் மும்மொழிக் கொள்கையை இந்தப் புள்ளிவிபரம் முழுமுற்றாக அம்பலப்படுத்திவிட்டது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.