7ஜி ரெயின்போ காலனி : காதலின் வலிமை! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 10

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!

கதிர் எனும் ஓர் இளைஞன் கல்லூரிக்குப் போகாமல் கட்டடித்துவிட்டு, நண்பர்களோடு தியேட்டருக்குச் செல்லுகிறான். தியேட்டரில் ரவுடித்தனம் செய்கிறான். பால் பூத்தில்கூட பெரியோர்களிடம் பொறுக்கித்தனமாக நடந்துகொள்கிறான். சிக்னல்களில் நிற்கும் கார்களின் மீது பைக் சாவியால் கோடு போடுகிறான். ஒழுங்காகப் படிக்காமல் 12 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறான். கொஞ்சமாவது பொறுப்பு, கொஞ்சமாவது பயம், கொஞ்சமாவது உழைப்பு -இவற்றோடு முயற்சித்துப் பார்த்துவிட்டு பெயிலாகியிருந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், எதுவுமே இல்லாமல் ஃபெயிலாகிவிட்டு, அதற்காகக் கொஞ்சம் வருத்தமும் இல்லாமல் எப்படி இவனால் இப்படி சாப்பிட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று ஆதங்கப்பட்டு, அவனைக் கண்டிக்கிறார் அப்பா. அவருக்கு மட்டும் அல்ல, பார்வையாளர்களான நமக்கும் அவன் மீது அப்படியான ஆத்திரம்தான் வருகிறது.

7ஜி ரெயின்போ காலனி | `சினிஸ்கோப் 10

அவன் வசிக்கும் காலனிக்கு அனிதா என்னும் வடநாட்டுப் பெண் புதிதாகக் குடிவருகிறாள். தொடக்கத்தில் அவளுடன் வம்புக்குப் போகும் கதிர், கொஞ்ச நாட்களிலேயே அவள் மீதான பாலியல் மயக்கத்தில் அவளைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணோ அவனை அருவருப்பாகவே பார்க்கிறாள். அதைக்கூட அவன், காதல் பார்வை என்று எண்ணிக் கொள்கிறான். அவனுடைய நண்பர்கள் அதைச் சுட்டிக்காட்டும்போதுகூட அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறான். எப்படியாவது டிகிரி சர்டிபிகேட் மட்டும் வாங்கி விட்டால், வேலைக்குப் போய் கார், வீடு என்று செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பவனின் புரிதலும், முதிர்ச்சியும் எந்த அளவில் இருக்கும்? இப்படித்தான் இருக்கும்!

முதல்முறையாக கதிர், அனிதாவிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறான். அதற்காக அவன் தேர்ந்தெடுக்கும் இடம், நெருக்கடியான நகரப்பேருந்து. அந்தக் கூட்டத்தில் வைத்துக் காதலைச் சொல்ல முயற்சிக்கிறான். அப்போதுகூட மிகவும் நம்பிக்கையோடு, ‘நம்ம இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்த உடனேயே புடிச்சுப் போச்சு! அப்புறம் என்ன, ஐ லவ் யூ சொல்ல வேண்டியதுதானே’ என்று அவளை பார்த்துக் கேட்கிறான். ஏற்கனவே வெறுப்பில் இருந்த அனிதா உச்சக்கட்ட கோபம் கொள்கிறாள். அதோடு சூழல் அவன், அவள் மீது தவறாகக் கைவைக்க முயலுகிறான் என்று தவறாகவும் எண்ணும்படி அமைந்துவிடுவதால், அவனைச் செருப்பால் அடித்து போலீசிலும் மாட்டி விடுகிறாள். கொஞ்ச நேரம் கதிருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. நிஜம் அவனது மண்டைக்கு உறைக்கவே நீண்ட நேரம் தேவைப்படுகிறது.

எல்லா விசயங்களிலும் பொறுப்பில்லாமலும், முதிர்ச்சியில்லாமலும் இருக்கிறானே தவிர, ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லை எனில் அதை மதித்திட வேண்டும் என்ற அடிப்படைக் கண்ணியம் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அத்தனை பெரிய அசிங்கத்துக்குப் பிறகும், அவள் மீது எந்தக் கோபமுமில்லாமல் அவன் விலகிப் போக நினைக்கிறான். ஆனால், அதன்பின்னர் கதை மாறுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், அவன் அவனது புரிதலிலிருந்தே, ’அவளது தகுதி எப்படிப்பட்டது. யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் அவள் வாழ்க்கையை எப்படி சிறப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்றொரு அறிவுரை சொல்கிறான். அதில் உண்மை இருக்கிறது. அந்த உண்மைதான் பின்னர், அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நட்பு மலரக் காரணமாக அமைகிறது. அதை நட்பாகவே வைத்திருக்க அனிதா போராடுகிறாள். அதைக் காதலாக்க கதிர் போராடுகிறான். இறுதியில் என்னவாயிற்று என்பது முடிவு.

7ஜி ரெயின்போ காலனி
7ஜி ரெயின்போ காலனி

அனிதா அன்பின் பாற்பட்டு கதிரை நல்வழிப்படுத்துகிறாள். பொறுக்கிகளைக் காதலித்து, அவர்களைக் நல்வழிப் படுத்துவதே தன் கடமை என்றியங்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதாநாயகியைப் போலவே அனிதா தோன்றினாலும், 7 ரெயின்போ காலனியின் அனிதா-கதிரின் உறவும், உணர்வும் அதனினும் மேலானது என்பதை நம்மால் உணரமுடிகிறது. ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்ற பாரதிதாசனே எழுதியிருக்கிறார். அந்தச் சின்ன வித்தியாசத்தால்தான் இந்தப் படம் இன்று வரை பலரின் விருப்பத்தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது.

கதிராக ரவி கிருஷ்ணா நடித்திருக்கிறார். அறிமுகப்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்தப் பொறுப்பற்றத் தன்மை, பொறுக்கித்தனம், அனிதா மீதான ஈர்ப்பு, பின்னர் விரக்தி எல்லாவற்றையும் சரியாகக் கொண்டுவந்திருக்கிறார். அனிதாவாக சோனியா அகர்வால் கண்களாலேயே எரிச்சலையும், வெறுப்பையும், கண்டிப்பையும் கடைசியில் காதலையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகன் முன்னேறுவதிலிருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படையாகக் காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள் குமையும் அப்பா விஜயன் மிகச்சிறப்பான பங்களிப்பு.

படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, செல்வராகவனோடு தொடர்ந்து பல படங்களில் பணியாற்றியவர். நடுத்தர வர்க்கத்து ஹவுசிங் போர்டு காலனியின் அந்த இறுக்கமான சூழலை, அதன் அசல் தன்மையோடு பதிவு செய்தது ஒருபுறமிருந்தாலும், மாண்டாஜ் காட்சிகளைப் படமாக்குவதில், ஹீரோயின்களை குளோஸப் காட்சிகளில் ஓவியங்களைப் போல பதிவு செய்வதில் பெரிய ரசனைக்காரர். இந்தப் படத்தில், சோனியாவை பல காட்சிகளில் தேவதையைப் போலவே பதிவு செய்திருக்கிறார். குருதிப்புனல் படத்தில் தனுஷ் எனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் இந்த அரவிந்த் கிருஷ்ணா என்பது கூடுதல் தகவல்.

செல்வா, யுவன்

செல்வராகவன் -யுவன் சங்கர் ராஜா -நா. முத்துக்குமார் என்ற மேஜிக் கூட்டணியின் மிக முக்கியமான படம் இது. இப்படத்தின் பின்னணி இசை, படத்தின் உணர்வுகளை அப்படியே இன்னொரு தளத்துக்குக் கொண்டுபோனது. கனா காணும் காலங்கள் தீம் கேட்கும்போதே நெஞ்சமெல்லாம் கனத்துப்போகும். முதல் முறையாக கதிர் அனிதாவின் உடல்வனப்பில் ஈர்க்கப்பட்டு நிற்கும் தருணத்தில் ஒரு பாடல் வருகிறது, ’பெண்மையின் மாயம், ரகசியம் பேசும், இது என்ன மாற்றம், அடைமழை வந்தால், குடை என்ன செய்யும்’ - ஒருவிதமான மயக்கும் தன்மையுள்ள, ஆளுமையான இந்தக் குரல் யாருடையது, எங்கோ கேட்டது போல வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்தால், அதைப் பாடியது பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். அப்போது அவருக்கு வயது 72. ’நினைத்து நினைத்துப் பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்...’- என இழப்பின் வலியைப் பாடியது கேகே. ’கனா காணும் காலங்களை’ப் பாடியது ஸ்ரேயா கோஷல்.

7ஜி ரெயின்போ காலனி

படத்தின் தயாரிப்பு, ஸ்ரீ சூர்யா மூவீஸுக்காக ஏ.எம்.ரத்னம். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தனித்தனியே படமாக்கப்பட்டது. இருமொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் திரைக்கதையை எழுதி இயக்கியிருந்தவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன் எனும் அழுத்தமான படத்துக்குப் பிறகான இந்தப்படம் அவருக்கு இரண்டாவது படம். தமிழ் சினிமாவில் இந்த இரண்டு படங்களுமே காதல் வகைமையில் மேற்பூச்சு இல்லாத, செறிவான (Raw & Intense) காதல் உணர்வுகளைப் பதிவு செய்த படங்கள் எனலாம். இப்படத்தின் நாயகன் கதாபாத்திரம் முழுமையாக விவரிக்கப்படுகிறது. அவன் பொறுப்பற்றவனாக, முதிர்ச்சியற்றவனாக இருந்தாலும், முற்றிலும் அப்படியான ஒரு நபரை மிக யதார்த்தமாக இந்தப்படம் காட்சிப் படுத்தியிருக்கிறது. இதற்கு மாறாக அனிதாவின் பாத்திரத்தின் மனவுணர்வுகள் முற்றிலுமாக விளக்கப்படவில்லை. இறுதியில் அவள் ஒரு விபத்தில் இறக்கும் காட்சியும் ஒரு தேர்ந்த திரைக்கதையின் அமைப்பாக இருக்கமுடியாது. ஆனாலும், இயக்குநர் அதை ஒரு லாஜிக்குக்குள் அடக்க விரும்பாமல், ஒரு கவிதையைப் போல சில உணர்வுகளைக் கோர்க்க விரும்பி அப்படியான முடிவை வைத்திருக்கிறார். வழி தவறிச்செல்லும் ஒருவனை ரட்சிக்க வந்த தேவதை போலவே அனிதா படம் முழுதும் ஆங்காங்கே குறியீடுகளால் காட்டப்படுகிறார். இறுதி விபத்தின் போது வெள்ளை நிற உடையிலிருக்கிறாள் அனிதா. பின்னணியில் இறந்த ஏசுவின் உடலை மடியில் ஏந்தியிருக்கும் மேரியின் தோற்றம், மைக்கேல் ஏஞ்சலோ உருவாக்கிய புகழ்பெற்ற சிலையான ’தி பியெட்டா’ அமைந்திருக்கிறது.

7ஜி ரெயின்போ காலனி

ஸ்டாக்கிங் அதாவது பெண்களைத் தவறான கண்ணோட்டத்தோடு பின் தொடர்வது, தொல்லை தருவது, பொய் சொல்வது போன்றன அநாகரிகமான, கீழ்த்தரமான ஒரு செயலாகும். இன்று இந்த விசயத்தில் நாம் ஒரு சமூகமாக எவ்வளவோ மேம்பட்டு வந்திருக்கிறோம். ஆனால், அதைக் காலம் காலமாக நமது தமிழ் சினிமா ரொமாண்டிசைஸ் செய்துவைத்திருக்கிறது. அப்படிச் செய்தாவது பெண்களின் அன்பையும், காதலையும் பெறலாம் எனும் நினைப்பையும், அப்படிச் செய்தால் ஒரு கட்டத்தில் பெண்கள் நம்மைக் காதலிப்பார்கள் எனும் எண்ணத்தையும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தது. சமீபத்தில் வெளியான, கென் கருணாஸ் நடித்த யூத் வரை அது அவ்வப்போது நடந்து கொண்டுமிருக்கிறது. இந்த 7ஜி ரெயின்போ காலனியும் அப்படி ஒரு காரியத்தைத்தான் செய்ததா எனும் விவாதம் படம் வெளியான சமயத்தில் எழுந்தது. ஆனால், 7ஜியின் நோக்கம் ஸ்டாக்கிங்கை ரொமாண்டிசைஸ் செய்வதல்ல என்பதே பலரின் முடிவு. காதலுக்காக ஒரு பெண்ணைப் பின் தொடர்வதை விட, படிப்பையும், திறமையையும் வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் வெல்வதே, ஒரு காதலை வெல்லவும் சரியான வழியாக இருக்க முடியும் என்பதை அவ்வப்போது ஒருசில நல்ல சினிமாக்கள் வந்து சமகாலத்து இளைஞர்களுக்கு நினைவூட்டிச் செல்லும். அவற்றுள் ஒன்றாகவே 7ஜி ரெயின்போ காலனியும் காலத்தால் நினைவுகூரப்படும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.