குமரி: கனிமவள லாரிகளுக்கு கட்டுப்பாட்டை நீக்கக் கோரி மறியல்; லாரி டிரைவர்கள் மீது கேரள போலீஸ் தடியடி
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்வதால் சாலை விபத்துக்கள் அதிகரித்தன.
அதிவேக லாரிகளால் விபத்து மூலம் மரணங்கள் அதிகரித்ததால், கனிமவள லாரிகளுக்கு குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கட்டுப்பாடுகளால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இந்தத் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கனிமவள லாரி ஓட்டுநர் சங்கம் சார்பில் நேற்று தமிழக கேரள எல்லை பகுதியில் இருந்து தங்கள் லாரிகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லாரிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதை ஒட்டி தமிழக கேரள எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் பாதுகாப்புக்காகக் கூடுதலாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இது போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பாதுகாப்பிற்காகக் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே போராட்டம் நடத்த லாரிகளோடு தமிழக கேரள எல்லை பகுதியில் குவிந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வாக்கு வாதம் செய்தனர்.
இந்தத் தடை காரணமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாகவும் மூன்று மாதங்களுக்கு மேலாக கனிம வள வாகனங்கள் கேரள செல்லாத காரணத்தால் பைனான்ஸ் மாத தவணை கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், நான்கு வழி சாலை பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து விடும் வரை இதே சூழ்நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கேரள எல்லை பகுதியான இஞ்சிவிளை பகுதியில் நிறுத்திவிடப்பட்டிருந்த லாரிகளோடு ஊர்வலமாகச் செல்ல முயன்றவர்களை தமிழக-கேரள போலீஸார் இணைந்து தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டகாரர்கள் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே லாரியை நிறுத்திவிட்டு கேரள மாநில எல்லைக்குட்பட்ட பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குமரி - கேரள சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பேருந்துகளில் பயணம் செய்த பொதுமக்கள் பாதி வழியிலேயே இறங்கி நடந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு இடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களைத் தாக்க முயன்றதாக போலீஸார் குற்றம்சாட்டினர். மூன்று மணி நேரத்திற்கு மேலாகப் போராட்டம் நீடித்து வந்ததைத் தொடர்ந்து கேரள போலீசார் போராட்டகாரர்களை விரட்டி அடித்து குமரி எல்லை பகுதியான களியக்காவிளை பகுதிக்குக் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் கேரள போலீஸார் தாக்கி விரட்டி அடித்தனர். இதையடுத்து தமிழக எல்லை பகுதிக்கு வந்த போராட்டகாரர்களை குமரி மாவட்ட போலீஸார் பாதுகாத்தனர்.
இதையடுத்து கேரள போலீஸார் திரும்பிச் சென்றனர். குமரி மாவட்ட போலீஸார் போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


