கரப்பான் பூச்சி: ``என் பேச்சு தவறாகத் திரிக்கப்பட்டுவிட்டது - தலைமை நீதிபதி சூர்யா காந்த் விளக்கம்

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அபிஜித் தீப்கே

தலைமை நீதிபதி சூர்யா காந்த் எங்களை கரப்பான் பூச்சிகள் என்று அழைக்கவில்லை என்றால், நான் இந்தியா வந்திருக்க மாட்டேன். இந்த மிகப்பெரிய இயக்கமும் தொடங்கியிருக்காது. அதற்கு அவருக்கு என் நன்றிகள் என அபிஜித் தீப்கே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் ‘பார் அண்ட் பெஞ்ச்’ (Bar and Bench) ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், ``என் பேச்சு முற்றிலும் தவறான சூழலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்கள் மூலம் சட்டத் தொழிலுக்குள் நுழைந்த நபர்களைப் பற்றிய விவாதத்தின்போதே நான் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினேன்.

நாட்டில் சுமார் 48,000 நபர்கள் கல்லூரிக்கே செல்லாமல், போலிச் சான்றிதழ்கள் மூலம் வழக்கறிஞர்களாக உலா வருகிறார்கள். சட்ட அமைப்பிற்குள் புகுந்து சீர்கேடு விளைவிக்கும் இத்தகைய போலி வழக்கறிஞர்களைப் பற்றியே நான் கரப்பான் பூச்சிகள் எனக் குறிப்பிட்டேனே தவிர, நாட்டின் இளைஞர்களைப் பற்றி அல்ல.

மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மனு ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்று நான் தொடர்ந்து பதிவாளரிடம் கேட்டறிந்தேன்.

சூர்யகாந்த்
சூர்யகாந்த்

ஆனால் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மனுவே தாக்கல் செய்யப்படாத நிலையில், ஒருவர் அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அதனால் தான் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கூறினேன். நீதிமன்றம் அனைவருக்கும் திறந்தே உள்ளது. மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை விசாரிக்க மறுக்கப்போவதில்லை.

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யும் இந்த டிஜிட்டல் காலத்தில், செய்திகளை வெளியிடுவதற்கும் அறிக்கை செய்வதற்கும் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் அவசியம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.