கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்; மீண்டும் நிராகரித்த மத்திய அரசு
கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது மத்திய அரசு.
சென்னையைத் தொடர்ந்து, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கோவையில் 39 கி.மீ. தொலைவிற்கும், மதுரையில் 27 கி.மீ. தொலைவிற்கும் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது.
திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய, மாநில அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் வழங்கியது.
இதையடுத்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதன்படி, மதுரையில் ரூ.11,360 கோடியிலும், கோவையில் ரூ.10,740 கோடியிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கையை மாநில அரசு வாயிலாக, மத்திய அரசிடம் வழங்கப்பட்டது.
ஆனால், 20 லட்சம் மக்கள்தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி, திட்ட அறிக்கைகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த மே மாதம் மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து திட்ட அறிக்கையை அனுப்பியது.
ஆனால் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தும் அளவுக்கு மக்கள்தொகை இல்லை என்றும் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை என்று கூறி, இரண்டாவது முறையாக மத்திய அரசு கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

