நீட் தேர்வு: நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை அவமானப்படுத்த வேண்டாம் - மோடியைச் சாடிய ராகுல்

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு (ஜூலை. 23)பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

"வினாத்தாள் கசிவில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையிலான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தும்.

வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி

வெள்ளிக்கிழமை நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும். வினாத்தாள் கசிவு என்பது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் வேதனைக்குரியது.

நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டு எழுந்தவுடன் அரசு துரிதமாகச் செயல்பட்டது. குற்றவாளிகள் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்" என்று வீடியோவில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதனை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார். "தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை. நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை அவமானப்படுத்த வேண்டாம்.

டெல்லி மாணவர்கள் போராட்டம்
டெல்லி மாணவர்கள் போராட்டம்

டெல்லியில் மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்காக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று ராகுல் காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.