Ban NEET போராட்டம்: ``நம்மை மீண்டும் கைகட்டி நிற்க வைக்கும் முயற்சி - இயக்குநர் வெற்றிமாறன்
டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ``நாம் மேற்கொள்ளும் போராட்டம் என்பது வெறும் நியாயமான நீட் தேர்வுக்காக (Fair NEET) இருக்கக் கூடாது. அது நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதற்கான (Ban NEET) போராட்டமாக மாற வேண்டும்.
இதற்கான முன்னெடுப்புகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்து, தொடர்ந்து போராட வேண்டும். என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரில் பார்க்கும் போது, நீட் தேர்வு மாணவர்களுக்குத் தரும் அழுத்தத்தை என்னால் உணர முடிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற, பாடங்களை ஆழமாகப் புரிந்து படிக்கக்கூடிய திறமையான மாணவர்களால் கூட முதல் முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இரண்டாவது முறை எழுதியும், அவர்களது பெற்றோரால் கட்டணம் செலுத்தக்கூடிய வகையிலான மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழலே நிலவுகிறது.
அதேபோல, பள்ளிப்படிப்பை முடித்துவிட்டுப் பல மாணவர்கள் ஓராண்டு காலம் வீடே கதி என அமர்ந்து இத்தேர்வுக்குப் படிக்கும் நிலையைக் காண்கிறோம். நீட் தேர்வின் முதன்மை நோக்கம், நம்மிடமிருந்து மருத்துவக் கல்வியையும் மருத்துவ அறிவையும் முழுமையாகப் பறிப்பதுதான். நம்மை மீண்டும் அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளுவதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். எனவே, நீட் ஒழிப்புக்கான குரலை நாம் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

களத்தில் இறங்கித் தொடர்ந்து போராடும் களப் பணியாளர்களுடனும், செயல்பாட்டாளர்களுடனும் நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். இம்முறை இந்தப் போராட்டம் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டும். நீட் ஒழிப்புக்கான இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நீலம் மாணவர்கள் அமைப்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்பேன். அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை ஒழிக்கக் கைகோர்ப்போம்." எனப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
