MGR ரெபரன்ஸ்; அரசியல் அட்டாக்; வெறுப்பரசியலின் பின்னண!- ஜனநாயகன் யாரையெல்லாம் அட்டாக் செய்கிறது?

நீண்ட காத்திருப்புக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது முதல்வர் விஜய்யின் ஜனநாயகன். விஜய் கட்சி ஆரம்பித்த பிறகே ஜனநாயகன் படத்தின் சூட்டிங் தொடங்கியது. அதனால் ஆரம்பத்திலிருந்து ரிலீஸ் வரைக்குமே படத்தை சுற்றி அரசியல் சர்ச்சைகள் சுழன்று கொண்டே இருந்தன.

ஒருவழியாக படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்துக்குள் என்னென்ன அரசியல் குறியீடுகளெல்லாம் ஒழிந்திருக்கிறது? ஜனநாயகன் விஜய் யாரையெல்லாம் அட்டாக் செய்கிறார்?

(Spoilers Ahead)

Vijay

படத்தின் டைட்டில் கார்டிலிருந்தே அரசியல் நெடி வீசத் தொடங்கிவிடுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை பார்த்து முதல்வர் விஜய் ஒரு சைகை செய்திருப்பாரே? அந்த சைகையோடு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி விஜய் என்றுதான் டைட்டில் கார்டே போடுகிறார்கள்.

பார்த்தீர்களா...சட்டப்பேரவையில் ஷூட்டிங் செய்கிறார்கள் என்ற விமர்சனம் உண்மையாகிவிட்டது என உடன்பிறப்புகள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

எம்.ஜி.ஆர் ரெபரென்ஸ்கள்

விஜய்யின் அறிமுக காட்சியில் தீப்பற்ற எம்.ஜி.ஆரும் விஜய்யும் ஒரே பிரேமில் காட்டப்படும் காட்சி, எம்.ஜி.ஆர் தங்கமே தளபதி எனக் கூறி சாட்டையை கொடுக்கும் காட்சி, நாண் ஆணையிட்டால்... பாட்டை பாடி விஜய் சாட்டையை சுழற்றும் காட்சி என படம் முழுவதும் எக்கச்சக்க எம்.ஜி.ஆர் ரெபரென்ஸ்கள்.

Vijay
Vijay

அரசியல் அட்டாக்

இரண்டாம் பாதி முழுவதுமே மற்ற கட்சிகளை அட்டாக் செய்து விஜய்க்கு பொலிட்டிக்கல் இமேஜை ஏற்றும் காட்சிகளே நிறைந்திருந்தது. ஆளுங்கட்சி ஒன்றின் பவர்புல் மாவட்டச் செயலாளராக பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் வருகிறது. விஞ்ஞான ஊழல் தாத்தாவுக்கு அப்புறம் அப்பா, அப்பாவுக்கு அப்புறம் நானு, எனக்கு அப்புறம் என் புள்ள... குறுநில மன்னர்கள் என இந்த கதாபாத்திரம் பேசும் வசனமும் இந்த கதாபாத்திரத்தை நோக்கி மற்றவர்கள் பேசும் வசனமும் மறைமுக அரசியல் அட்டாக்குகளே.

கடந்த ஆட்சியில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணமும் அதிமுக ஆட்சியின் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை பிரதிபலிக்கும் காட்சிகளும் முக்கிய சீக்வென்ஸாக இடம்பிடித்திருக்கிறது.

இந்தியாவில் வெறிப்பரசியல் எப்படி தூண்டப்படுகிறது? சமூகவலைதளங்களின் வழி அதற்கான வேலைகளை அரசியல் கட்சியினர் எப்படி செய்கின்றனர் போன்றவையும் விரிவாக காட்டப்படுகின்றன. கோவில்களை வைத்து சில கட்சிகள் செய்யும் அரசியல்களையும் உள்குத்தாக சாடியிருக்கின்றனர். வெறுப்பரசியல் குறித்து விஜய்யே சில பன்ச்களையும் பேசி, இதையெல்லாம் நாம்தான் க்ளீன் செய்ய வேண்டுமென திரையிலிருந்தே தன் ரசிகர்களுக்கு அழைப்பும் விடுக்கிறார்.

Vijay
Vijay

TVK

இவ்வளவு அரசியல் நியாயம் பேசும் படத்தில் சில இடங்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாகவும் இருந்தது. தளபதி வெற்றி கொண்டான் பெயரை TVK என சுருக்கி ஒரு தவெகவை நினைவுப்படுத்தியிருக்கிறார்கள். சென்சார் கை வைத்ததால் TVK என பேசப்படும் இடங்களெல்லாம் மியூட் ஆகியிருக்கிறது. ஜனநாயகன் என பெயர் வைத்ததற்காக ஜெயிலில் இந்திய ஜனநாயகம் எனும் புத்தகத்தோடு விஜய் அறிமுகமாவது, ஜனநாயகத்தையும் ஒண்ணும் பண்ண முடியாது. எங்க ஜனநாயகனையும் ஒண்ணும் பண்ண முடியாது என போஸ்டர் பன்ச்களுக்கு டஃப் கொடுக்கும் அரசியல் பன்ச்களெல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸாகவே இருந்தது

பெண்கள் பாதுகாப்பு, மலைவாழ் மக்களின் உரிமை, வெறுப்பரசியலுக்கு எதிரான பிரசாரம் என மிகத் தெளிவாக சில விஷயங்களை பேசும் விஜய்யின் கதாபாத்திரம், காக்கிச் சட்டையில் ரத்தம் தெறிக்க வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அ.வினோத் கமர்ஷியல் மீட்டர்களை தாண்டி சமூக நோக்கோடு கதையை அணுகக்கூடிய இயக்குநர், படத்தை ஒப்புக்கொள்கையில் விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். இருவருக்குமே ஒரு போலீஸ் கதாபாத்திரம் குற்றவாளிகளை வெட்டி வீசுவதை போல காவல் வன்முறையை க்ளோரிபை செய்து காட்சிகளை வைப்பது உறுத்தவே இல்லையா என்றும் தோன்றுகிறது.

Vijay
Vijay

விஜய் தனது அரசியல் பன்ச்கள் மூலம் தனக்கு எதிராக நிற்கும் கட்சிகளை பல இடங்களில் மறைமுகமாக சாடுகிறார். விஜய் யாரை குறிப்பிட்டு அந்த வசனங்களை பேசுகிறார் என்பதை அவரது ரசிகர்களும் மிகத் தெளிவாக புரிந்து கொண்டு தியேட்டர் அதிரும் அளவுக்கு ஆர்ப்பரிக்கின்றனர். திரையின் வழி தான் நினைப்பதை ரசிகர்களுக்கு கடத்தும் யுக்தி விஜய்க்கு முழுமையாக கைகொண்ட கலையாக இருக்கிறது. சினிமா, அரசியல் இரண்டிலுமே அவரின் வெற்றிக்கு இந்தப் புரிதல் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.