Ban NEET Vs Fair NEET:`நீட் தேர்வு திருத்தமா அல்லது முழுமையான ரத்தா?- போராட்டம் செல்லும் பாதை என்ன?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. கடந்த 20-ம் தேதி, `தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல்துறை தடியடி நடத்தியது. இந்தப் போராட்டத்தில் டெல்லி காவல்துறை மற்றும் கலவரத் தடுப்பு பிரிவினரின் ஆணி அடிக்கப்பட்ட லத்திகள், கற்கள் நிரப்பட்ட லாரி, பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் எனக் கொடூரமான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து டெல்லி போராட்டம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியது. திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான உணவு டெலிவரிகள் வந்து குவிவதே இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவைப் பிரதிபலிக்கிறது.
அதன் அடிப்படையில், சென்னை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில், CJP ஆதரவாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சம்மேளனம் (DYFI) மற்றும் இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இரவு, பகல் பாராமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் BAN NEET Vs NEET FAIR என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. அதாவது டெல்லியில் போராடும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதை முறைப்படுத்தி சரியாக நடத்த வேண்டும் எனக் கேட்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் மாணவர்களின் போராட்டம் நீட் தேர்வையே நீக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்கின்றனர்.
எனவே, ஒட்டுமொத்தமாக மாணவர்கள் போராட்டம் என்றாலும், இரண்டு போராட்டங்களின் இலக்கும் வேறு வேறாக இருக்கிறது என்ற விவாதம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. அதனால் இது குறித்து விளக்கம் கேட்க SFI-யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தமிழிடம் பேசினோம்.

அவர், ``தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்பது ஏதோ இப்போது திடீரெனத் தொடங்கிய ஒன்று அல்ல. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் (Ban NEET) என்பதே மாணவர் அமைப்புகளின் முதன்மையான கோரிக்கை. அனிதாவின் மறைவுக்குப் பிறகு இது தமிழ்நாட்டில் தீவிரமடைந்தது. நீட் தேர்வு அறிவியல் பூர்வமானது அல்ல. தமிழ்நாட்டில் மட்டுமே முதன்முதலில் தீவிரமாகத் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம், இன்றைக்குத்தான் இந்தியா முழுவதும் பரவி வலுப்பெற்றுள்ளது.
டெல்லி போராட்டம் காரணமாக ஒருவேளை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினாலும், அல்லது அங்கிருக்கும் போராட்டம் தணிந்தாலும் தமிழ்நாட்டின் நீட் எதிர்ப்புப் போராட்டம் ஓயாது என்றே கருதுகிறேன். ஏனெனில், ஒரு அமைச்சர் மாறினாலும் அதே பா.ஜ.க அரசு அல்லது அதே என்.டி.ஏ (NTA) முகமைதான் தேர்வை நடத்தப்போகிறது. பயிற்சி மையங்களின் ஆதிக்கமும் தொடரவே செய்யும். எனவே, அமைச்சர் ராஜினாமா என்பதுடன் பிரச்னை முடிந்துவிடாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதி இலக்கு என்பது நீட் தேர்வை முழுமையாகப் ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வை மட்டுமல்ல, NTA அமைப்பையே கலைக்க வேண்டும். இதற்காக அனைத்து அமைப்புகளுடனும் இணைந்து Ban NEET கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவதே தமிழ்நாட்டின், குறிப்பாக மாணவர்களின் தெளிவான நிலைப்பாடு." என உறுதியான குரலில் தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக திமுக-வைச் சேர்ந்த மருத்துவர் யாழினியை தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``டெல்லியில் நடைபெற்று வரும் நீட் தொடர்பான போராட்டம் என்பது நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் (Ban NEET) என்பதற்காக அல்லாமல், தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் (Accountability) என்பதற்காக நடத்தப்படுகிறது. மாறாக, தமிழ்நாட்டின் நீண்டகாலக் கோரிக்கை `நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே.
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ்வழியில் படித்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட/எளிய சமூக பின்னணி கொண்ட மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாகவே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அனந்தகிருஷ்ணன் கமிட்டி மூலமும், மு.க. ஸ்டாலின் ஏ.கே. ராஜன் கமிட்டி மூலமும் நீட் தேர்வால் ஏற்படும் சமூகவியல் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளை முறைப்படி சுட்டிக்காட்டியுள்ளனர். நீட் முறையால் பயிற்சி மையங்களின் ஆதிக்கம் அதிகரித்து, பணக்காரர்கள் மட்டுமே மருத்துவராகும் நிலை உருவாகும். அதனால் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பே பாதிக்கப்படும் என்பதுதான் கமிட்டிகள் கொடுத்த எச்சரிக்கை.
டெல்லியில் மாணவர்கள் போராட்டக்களத்தில் ஏந்தியிருந்த பதாகைகளிலும், கனிமொழி போன்ற தமிழ்நாட்டிலிருந்து போராட்ட களத்தில் பங்குகொண்ட தமிழ்நாட்டின் தலைவர்களும் நீட் தேர்வு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோணத்தில்தான் உரையாற்றினார்கள். தமிழ்நாட்டின் நிலைபாடு, கமிட்டிகள் கொடுத்த முழுமையான தகவல் உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். டெல்லி போராட்டம் ஒருவேளை ஒன்றிய அமைச்சர் ராஜினாமாவுடன் முடிவுக்கு வந்தாலும், நீட்டிற்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்டம் முடியாது. முன்பெல்லாம் இடஒதுக்கீடு போராட்டங்களில் வட இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே புரிதல் வேறுபாடு இருந்தது. அதன்பிறகுதான் அதன் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கினார்கள்.
அது போல, நீட் விஷயத்திலும் தற்போதுதான் வட இந்திய மாணவர்களுக்கு இதன் உண்மையான பாதிப்பு புரியத் தொடங்கியுள்ளது. அதனால், இந்தச் சூழலே இந்திய அளவிலான மற்ற மாநிலங்களுக்கும் நீட்டின் கட்டமைப்பு ரீதியான தவறுகளையும் சமூக நீதிப் பாதிப்புகளையும் எடுத்துரைப்பதற்கான சரியான தருணமாகும். எனவே, தமிழ்நாடும், தமிழ்நாட்டின் மாணவர்களும் இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் நீட் தேர்வு இந்தியா அளவில் விவாதத்துக்கு வந்திருப்பதே மாணவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த முதற்படி வெற்றி என்றே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

