``அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது’’ - தவெக மா.செ விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அவர் (வயது 34). இவர், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அவரின் மனுவில், ``கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் என்னை இணைத்துக் கொள்வதற்காக அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய்மோகனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மகளிரணியில் பொறுப்பு கேட்டேன். பிறகு அவர் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தார். நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு இன்ஸ்டாவில் பதில் அளித்துக்கொண்டிருந்தேன். `கட்சியில் பதவி வேண்டுமானால், எனக்கு வீடியோ கால் பண்ணு போதும்’ என்றார். பிறகு, வீடியோ கால் செய்தபோது, ஆடையை விலக்கி காண்பிக்கச் சொன்னார். நான் முதலில் `முடியாது’ என்றேன். பிறகு பேசியதை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வைத்துகொண்டு ஆசைக்கு இணங்கச் சொல்லி மிரட்டினார்.

என்மீது பழைய வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க உதவ முடியுமா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், `கண்டிப்பாக அதனை வழக்கறிஞருக்கு அனுப்பி பார்க்கச் சொல்கிறேன்’ என்று கூறியதோடு, என்னிடமிருந்து கொஞ்சம் பணமும் வாங்கினார். நாள்கள் செல்லச் செல்ல என்னை மீண்டும் மிரட்டத் தொடங்கினார். `உன் வீடியோவை வெளியிட்டுவிடுவேன். நான் சொல்ற இடத்துக்கு வந்து சேர்’ என்று மிரட்டினார். நான் செல்லவில்லை. மீண்டும் என்னை அழைத்தபோது, `மாதவிடாய் நேரம்’ என்றேன். அப்போதும் விடாமல் மிரட்டியதால், அச்சத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றெல்லாம் முடிவு செய்தேன்.

எனவே, என் புகாரின் அடிப்படையில் விஜய்மோகனை கைது செய்ய வேண்டும். ஆளும்கட்சி மாவட்டச் செயலாளர் என்பதால், அவரிடமிருந்து எனக்கும், என் கணவர் மற்றும் என் குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்புகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் அப்பெண். அதிலும், த.வெ.க மாவட்டச் செயலாளர் விஜய்மோகன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார். ஆனாலும், அப்பெண் இதுவரை காவல் நிலையம் சென்று புகார் ஏதும் கொடுக்கவில்லை.

இவரின் குற்றச்சாட்டுகள் பற்றி, த.வெ.க மாவட்டச் செயலாளர் விஜய்மோகனிடமே விளக்கம் கேட்டோம். ``அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; திட்டமிட்டு என்னை சிக்கவைக்க கூட்டுசதி நடக்கிறது. அந்த பெண்ணை நேரில் பார்த்தது கிடையாது. இன்ஸ்டாகிராமில் அந்த பெண்தான் தொடர்ந்து போன் செய்து தொந்தரவு கொடுத்துகொண்டிருந்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருசிலரின் தூண்டுதலாலும், வேறு ஒருவரின் பின்னணியிலும் என்னை ஒழித்துகட்ட பார்க்கிறார்கள்.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு விளாப்பாக்கத்தில் இருந்து ஒரு இளைஞன் கட்சியில் வந்து சேர்ந்தான். அவன் யாருன்றுகூட எனக்குத் தெரியாது. கட்சியில் அந்த இளைஞனை சேர்த்தபோது, இந்த பெண் இன்ஸ்டாவில் என்னை தொடர்புகொண்டு `அவனை கட்சியில சேர்க்காதீங்க. என்னை ஏமாத்திட்டான். அவன்மேல கேஸ் கொடுத்துருக்கேன்’ என்றார். `சரி விசாரிக்கிறேன்’ என்று சொன்னபோது, மீண்டும் மீண்டும் அழைத்து என்னை தொந்தரவு செய்தார்.

விஜய்மோகன்

தொடர்ந்து தொல்லை கொடுக்கும்விதமாக, வீடியோ கால்கள் செய்ததும் அவர்தான். `நீங்க அழகா இருக்கீங்க. உங்ககிட்ட பேசணும்போல இருக்கு’ என்று மெசேஜ் செய்வது, என்னுடைய போட்டோவை அவருடைய போட்டோவுடன் இணைத்து இன்ஸ்டாவில் ஸ்டோரி போடுவது என அந்த பெண்தான் செய்துகொண்டிருந்தார். ஒருக்கட்டத்தில், அந்த பெண்ணின் மோசமான நடவடிக்கைகள் அதிகமாகவே, நான் அவரைத் தொடர்புகொண்டு என் புகைப்படத்தை `டெலிட்’ செய்ய சொன்னேன். இந்த பதிவுகளை வைத்துக்கொண்டுதான் கடந்த வாரம் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ தாஹிராவை சந்தித்து என் மீது குற்றம் சுமத்தினார். அப்போது தகவல் தெரிந்து சென்றபோதுதான் முதன்முறையாக அந்த பெண்ணை நேரில் பார்த்து `நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க மா’ என்று அறிவுறுத்தலோடு கண்டித்தேன்.

இந்த நிலையில்தான் எனக்கெதிராக செயல்படும் சில நபர்களுடன் சென்னை சென்று என்மீது புகாரளித்திருக்கிறார். என் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். என்னை பற்றி ராணிப்பேட்டையில் விசாரித்து பாருங்கள். பொதுவெளியில் ஒருவர்கூட என்னை தவறு சொல்லமாட்டார்கள். என் மீதான இந்த புகாரில் துளியளவும் உண்மைத்தன்மை இல்லை என்பதை நிரூபிக்க, கட்சித் தலைமையில் நேரில் விளக்கமளித்த பிறகு, அந்த பெண் மீது காவல்துறையிலும் புகாரளிக்க உள்ளேன்’’ என்கிறார்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.