Keyne: உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு பெயரும் இருக்கிறது. அது லமின் யமால் அல்ல... அவரது 3 வயது தம்பி கெய்ன் யமால்.

Spains second World Cup title.

போட்டி தோறும் ரசிகர்கள், டிவி கேமராக்கள், சமூக வலைதளங்கள் என அனைவரையும் தனது குறும்பாலும் உற்சாகத்தாலும் கவர்ந்த கெய்ன், இந்த உலகக் கோப்பையின் எதிர்பாராத வைரல் நட்சத்திரமாக மாறியிருக்கிறார். ஸ்பெயின் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் கேமராக்கள் அவரைத் தேட ஆரம்பித்தன. சில ரசிகர்களுக்கு, மைதானத்தில் இருந்த சில வீரர்களைவிட கெய்ன் பரிச்சயமான முகமாகவே மாறிவிட்டார்.

Keyne Yamal with lamine Yamal
இந்த வைரல் பயணம் தொடங்கியது ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில்தான். ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடி "¡Vamos!" என்று ஆரவாரம் செய்த கெய்னின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
Keyne Yamal

அதன் பிறகு காலிறுதியில், மைதானத்தின் பெரிய திரையில் கை அசைத்து, நாக்கை நீட்டி சேட்டை செய்த கெய்னைப் பார்த்து, லமின் யமாலும் அவரது சக வீரர்களும் சிரித்த தருணமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரான்ஸுக்கு எதிரான அரையிறுதிக்குப் பிறகு, தனது அண்ணனை நோக்கி உற்சாகமாக கை அசைத்த கெய்னின் புகைப்படமும் உலகம் முழுவதும் பகிரப்பட்டது.

Keyne Yamal

உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் No.19 ஜெர்சி, Paw Patrol தொப்பி அணிந்து மைதானம் முழுவதும் சுற்றித் திரிந்த கெய்ன், போலீஸ் அதிகாரியின் தொப்பியை அணிந்தும், மற்ற வீரர்களின் குழந்தைகளுடன் பந்தை உதைத்தும் கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலானது.

Keyne Yamal

ஆனால், கெய்ன் இந்த உலகக் கோப்பையில் தோன்றியது புதிதல்ல. யூரோ 2024 Champion பட்டத்தை ஸ்பெயின் வென்றபோதும், போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் வந்து தனது அண்ணனுடன் கொண்டாடியிருந்தார். பார்சிலோனா போட்டிகளிலும் அடிக்கடி தோன்றும் கெய்ன், போட்டி முடிந்த பிறகு யமாலுடன் சேர்ந்து மைதானத்தில் பந்தை உதைத்து விளையாடிய தருணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன.

"சமையலறையும் படுக்கையறையும் ஒன்றாக இருந்த சிறிய வீட்டில்தான் நான் வளர்ந்தேன். ஆனால், இன்று எனக்குக் கிடைக்காத குழந்தைப் பருவம் என் தம்பிக்குக் கிடைக்கிறது. என் அம்மாவும், என் தம்பியும் சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பதுதான் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது," என்று யமால் கூறியிருக்கிறார்.
மேலும், "என் தம்பி எனக்கு எல்லாமே. அவர் என் மகனைப் போன்றவர்," என்றும் நெகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
keyne yamal with Lamine yamal

2026 உலகக் கோப்பையில் ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ளப் போவது ஸ்பெயினின் சாம்பியன் பட்டத்தை மட்டுமல்ல; தனது குறும்பாலும், புன்னகையாலும், அண்ணன் மீதான அன்பாலும் உலகையே கவர்ந்த குட்டி ரசிகன் கெய்ன் யமாலையும் தான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.