`தாய் மாமன் சீர்; கொத்து புரோட்டா; அதிமுக, திமுக கூட்டணி; மிதுன் வருகை - காயத்ரி ரகுராம் நேர்காணல்

அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலம். அக்கட்சியின் தலைவர்கள் கட்சியை விட்டு விலகி த.வெ.க-வில் அடைக்கலமாகி வருவதோடு, கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் வீசி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க நிலை மற்றும் த.வெ.க அரசியல் குறித்தான கேள்விகளோடு அ.தி.மு.க மகளிரணி துணைச்செயலாளர் காயத்ரி ரகுராமிடம் நமது கேள்விகளை முன்வைத்தேன்...

"அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கைகளால்தான் அ.தி.மு.க தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதாக கட்சியிலிருந்து விலகுவோர் குற்றம் சாட்டுகிறார்களே?"

"இன்றைக்கு அதிகார சுவைக்காக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வெளியேறுவோர், தங்களை வளர்த்து ஆளாக்கி அமைச்சராக்கி அழகு பார்த்த கட்சிக்கு எதிராகப் பேசுவதும் எடப்பாடியாருக்கு எதிராகப் பேசினாலும் இரண்டும் ஒன்றுதான். பதவி ஆசைக்காக இப்படி கட்சிக்கு விரோதமாக பேசுபவர்கள்... நன்றி கெட்டவர்கள்!

கடந்தகாலத்தில் எத்தனையோ தோல்விகளை சந்தித்துவந்த பா.ஜ.க இன்று நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறதுதானே! கட்சி தோல்வி அடைகிறது என்றால், அதற்கு ஒவ்வொரு தொண்டருமேகூட பொறுப்பேற்க வேண்டும்தான். எடப்பாடியாரைப் பொறுத்தவரை கட்சியில் தன்னோடு பல ஆண்டுகளாக பயணித்துவருகிற அனைவரையுமே சகோதரர்களாகவே பார்க்கிறார். அதனால்தான் அவரிடத்தில் சர்வாதிகாரத்தனம் வெளிப்படவில்லை.

ஆனால், அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி த.வெ.க-வுக்குச் செல்லும் சிலர் எடப்பாடியாரின் தலைமைப் பண்பையே கேள்விக்குள்ளாக்குகின்றனர். உண்மை என்னவென்றால், அதிர்ஷ்டத்தால் விஜய் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டாலும் அவரது செயல்பாடுகள் ஒரு கட்சியின் தலைவராகவோ அல்லது முதல்வராகவோ முதிர்ச்சியை வெளிக்காட்டவில்லை. காரணம் எம்.ஜி.ஆர் அளவுக்கான தலைமைத்துவம் விஜய்யிடம் இல்லை."

"த.வெ.க ஆட்சியில் லஞ்சம், ஊழலுக்கு இடமில்லை என்று சொல்லிவருவதோடு அதை செய்தும் காட்டி வருகிறார் முதல்வர் விஜய். ஆனால், அவருக்கு தலைமைப் பண்பு இல்லை என குற்றம் சாட்டுகிறீர்களே?"

" த.வெ.க ஆட்சியில் லஞ்சம், ஊழல் இல்லை என முதல்வர் விஜய் பேசும்போதே, த.வெ.க ஊராட்சி மன்றத் தலைவர் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதான செய்தி வீடியோவாகவே வெளிவருகிறது.

காயத்ரி ரகுராம்

தாய்மாமன் சீர் என்ற பெயரில், 750 கோடி ரூபாயில் தங்க மோதிரத்துக்கு டெண்டர் விடுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன், அரசு கஜானா காலியாக இருக்கிறது என்று சொன்னவர்கள், இப்போது எந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டு, 750 கோடி ரூபாயை எடுத்துக் கொடுக்கப் போகிறார்கள்?

ரீல்ஸை நம்பித்தான் இன்றைய ஆட்சியே நடக்கிறது. ஜெகதீஷ், விஷ்ணு ரெட்டிதான் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள். த.வெ.க எனும் கட்சியை ஜான் ஆரோக்கியசாமியும், புஸ்ஸி ஆனந்தும்தான் நிர்வகிக்கிறார்கள். இப்படியிருந்தால், ஆட்சி எப்படி நடக்கிறது, ஆட்சியில் என்ன நடக்கிறது என்ற தகவல்கூட முதல்வரை எப்படிப் போய் சென்றடையும்? கவுன்சிலரில் ஆரம்பித்து எம்.எல்.ஏ-வரை யாருடனும் தொடர்பில் இல்லாத இந்த முதல்வரை எப்படி தலைமைத்துவம் மிக்கவர் என்று சொல்கிறீர்கள்?

அட அதெல்லாம் விடுங்க... கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் என்று மூன்றாம் தர பேச்சாளர்களைப் போல் மேடைதோறும் பேசிவருகிறார். ஒரு முதல்வருக்கு உண்டான மாண்போடு அவர் என்றைக்குப் பேசப்போகிறார்? ஷார்ட்ஸ் எடுப்பது, வண்டி ஓட்டிப் பார்ப்பது என சினிமா ஸ்டைலிலேயேதான் இப்போதும் நடந்துகொள்வார் முதல்வர் விஜய். ஆக, முதல்வரே இப்படி ரீல்ஸ் மோடில்தான் இருக்கிறார்."

"இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால்கூட தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்ல தலைவர் அல்ல” என்கிறாரே வைகைச் செல்வன்?"

"எடப்பாடியார் சுயநலமிக்கவராக இருந்திருந்தால், இன்றைக்கு அவர் மீது பழிபோடக்கூடியவர்களுக்கும் அவர்கள் சிபாரிசு செய்தவர்களுக்கும் 2026 தேர்தலில் போட்டியிட சீட்டே கொடுத்திருக்க மாட்டார். ஆக, கட்சியில் உள்ள எல்லோரையும் சுதந்திரமாக வைத்திருந்தவர், விருப்பு வெறுப்பின்றி அனைத்துத் தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டவர் எடப்பாடி."

காயத்ரி ரகுராம்

"அப்படியென்றால், அ.தி.மு.க-வின் தொடர் தோல்விகளுக்கு யார்தான் காரணம்?"

"அ.தி.மு.க-வில் ஆங்காங்கே உட்கட்சி சதியினால் பிரச்னைகள் ஏற்பட்டதே தவிர, வாக்குகள் எங்கேயும் சிதறிப்போகவில்லை. அதனால்தான் ஒரு கோடியே 4 லட்சம் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு அப்படியே கிடைத்திருக்கிறது. தி.மு.க-வின் சிறுபான்மையின வாக்குகள் மற்றும் வி.சி.க-வின் வாக்குகள்தான் முழுமையாக த.வெ.க-வுக்குப் போயிருக்கிறது."

"தி.மு.க-வுக்கும் ஒரு கோடியே 20 லட்சம் வாக்குகள் கிடைத்திருக்கின்றனவே?"

"கடந்த தி.மு.க ஆட்சியில் அதிகாரிகள்தான் ஆட்சி நடத்தினார்கள். அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காதுகளுக்கே தகவல்களை கொண்டுபோய் சேர்க்காமல் இருட்டடிப்பு செய்தார்கள். கட்சியிலும்கூட தி.மு.க தொண்டர்களுக்கு மதிப்பளிக்காமல், அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். இந்த காரணங்களினால்தான் 2026 தேர்தலில் தி.மு.க தோற்றுப்போனது."

"அ.தி.மு.க - தி.மு.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது என அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களும் சொல்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் முன்பு அங்கம் வகித்த கட்சிகளும் சொல்கின்றன. ஆனால், இப்போதும்கூட இந்த விவகாரத்தை எடப்பாடி மறுத்திருக்கிறாரே?"

"அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடியாரோ அல்லது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினோ இப்படியொரு கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நேரடியாக பேசவில்லை. அப்படியிருக்கும்போது இவர்களுடன் இருப்பவர்கள் ஏதேனும் பேசியிருந்தால், அதை எப்படி இவ்விரு கட்சிகளின் முடிவாக எடுத்துக்கொள்ள முடியும்?

காயத்ரி ரகுராம்

அடுத்ததாக, தொங்கு சட்டசபையை இப்போதுதான் தமிழகம் பார்க்கிறது. த.வெ.க-வுக்கு வாக்களித்தவர்கள் எண்ணிக்கையைவிடவும், த.வெ.க-வுக்கு எதிராக வாக்களித்தவர்களின் சதவிகிதம்தான் அதிகம். இந்த சூழ்நிலையில், த.வெ.க-வுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சிகள் ஒன்று சேர்ந்துகூட ஆட்சி அமைத்துவிட முடியும் என்ற கணக்கே மக்கள் மத்தியில் பேசுபொருளாகி வருகிறது. அப்படியொரு நிலை வந்தால், தங்களுக்கு சிக்கலாகிவிடும் என பயப்படும் ஆளுங்கட்சியினரே இதைப் பூதாகரப்படுத்தி மக்கள் மத்தியில் இப்படியொரு பொய்ச்செய்தியைப் பரப்பி வருகின்றனர்."

"தி.மு.க - அ.தி.மு.க தலைமைக்கு வேண்டிய இளைய தலைமுறையினர்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர் என்ற செய்திகளும் இருக்கிறதுதானே?"

"அது தவறான செய்தி. தி.மு.க, அ.தி.மு.க என இவ்விரு கட்சிகளின் தலைவர்களுமே தமிழ்நாட்டை ஆண்டவர்கள். அப்படியிருப்பவர்கள் தங்கள் கட்சிக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை அடுத்த தலைமுறையின் மூலம் எடுத்துச்சென்றார்கள் என்று சொல்வதே தவறான குற்றச்சாட்டாகவே பார்க்கிறேன்!"

காயத்ரி ரகுராம்

"அ.தி.மு.க-வை தன் குடும்பத்தின் பிடிக்குள் கொண்டுவரத் திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிசாமி என சி.வி.சண்முகம் நேரடியாகவே குற்றம் சாட்டினார்தானே?"

"தன் குடும்பத்தினரை கட்சிக்குள் கொண்டுவரவேண்டும் என அவர் திட்டமிட்டிருந்தால், அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதே கொண்டுவந்திருப்பார்; அமைச்சராகவும் ஆக்கியிருப்பாரே! அப்போதே செய்யாதவர், எதிர்க்கட்சியாக இருந்துவரும் இந்தச் சூழலிலா கொண்டுவரப் போகிறார்...? இதிலிருந்தே இது பொய்க் குற்றச்சாட்டு என்று தெரியவில்லையா!"

" அ.தி.மு.க-வுக்குள் புதிய ரத்தம் பாய்ச்ச மிதுன் வருகை அவசியம் என கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமியே கூறினாரே?"

"அது கே.பி.முனுசாமி என்ற தனிப்பட்ட ஒருவரது விருப்பம்... கருத்து. நலம் விரும்பியாக அந்தக் கருத்தை அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், என் மகன் அரசியலுக்குள் வரமாட்டார் என எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார். அதுதான் கட்சியின் அதிகாரபூர்வ கருத்து!"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.