AI NEXUS 2026: ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த உலக சாதனை!

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற AI NEXUS 2026 விழாவில் ஆயிரம் மாணவர்களால் ஆயிரம் ஏஜென்டிக் ஏ.ஐ போட்டுக்கள் 2 மணி நேரத்தில் உருவாக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் நேற்று AI NEXUS 2026 உலக சாதனை விழா தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் குமார் இவ்விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் தங்கம் மேகநாதன், முதல்வர் டாக்டர் எஸ் என் முருகேசன் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களான சுவாமிநாதன் ராகவன், பிரேம் ஆனந்த், சிவராம் சேஷான், மாதங்கினி சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

AI NEXUS 2026 என்ற தலைப்பில் செயற்கை நுண்ணறிவுக்கான உலக சாதனையை படைத்துள்ளனர்.

இரண்டு மணி நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் ஆயிரம் முழுமையான ஏஜென்டிங் ஏ.ஐ போட்டுகளை உருவாக்கினர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் தொடக்க விழாவை அடுத்து AI innovation Expo 2026, Animate with AI 2026, AI marketing Showdown, AI in Academy போன்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இணைய வழி HACKATHON, முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல், செயற்கை நுண்ணறிவு மூலம் அனிமேஷன் தயாரிப்புகளுக்கு பயிற்சி தருதல், ஜெனரேட்டிவ் ஏ.ஐ பயன்படுத்திய நவீன சந்தைப்படுத்துதல் போட்டி, ஆசிரியர்களால் செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் ஆகியவை நிகழ்ந்தது.

அறிவிக்கப்பட்ட உலக சாதனை :-

தொழில்துறை வல்லுநர்கள், சிறப்பு விருந்தினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரின் முன்னிலையில் உலக சாதனை அமைப்பின் கிரிஸ்டோபர் டைலர் கிராஃப்ட் ( RECORDS MANAGER) சர்வதேச விதிமுறைகள் மற்றும் ஆவண சரிபார்ப்புகளுடன் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

அச்சான்றிதழை ராஜலட்சுமி கல்வி நிறுவனர், நிர்வாகத்தின் சார்பில் முதல்வர், டாக்டர் எஸ்.என்.முருகேசன், அமைச்சர் டாக்டர் குமார் முன்னிலையில் பெற்றுக் கொண்டார்.

உலக சாதனை வெற்றிகரமாக படைக்கப்பட்டு அதிகாரபூர்வமாக உலக சாதனை படைக்கப்பட்டது என அறிவித்தனர்.

இவ்விழாவில் AI NEXUS 2026 ஏற்படுத்தும் எதிர்கால நன்மைகள் பற்றி செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் ஆலோசித்தவை:-

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகத் தரத்திலான அறிவும், நடைமுறை அனுபவமும் கிடைக்கும். தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களிடையே புதுமை, ஆராய்ச்சி மற்றும் ஸ்டார்ட்அப் கலாசாரம் வலுப்பெறும். இந்தியாவின் AI திறமைகள் உலகளவில் அங்கீகாரம் பெறும். கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் மேம்படும்.

AI அடிப்படையிலான புதிய தீர்வுகள் மருத்துவம், கல்வி, விவசாயம், போக்குவரத்து மற்றும் அரசு சேவைகள் போன்ற துறைகளில் உருவாகும். தமிழ்நாடு மற்றும் இந்தியா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

உலக முதலீடுகள், ஆராய்ச்சி திட்டங்கள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் அதிகரிக்க உதவும். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக உருவாக ஊக்கமளிக்கும்.

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகளாவிய AI முன்னேற்றத்திலும் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தும் முக்கிய தளமாக AI NEXUS 2026 அமையும் என நிபுணர்கள் கூறினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்

“ ஒரு தகவல் சொல்லி அனுப்பி இருக்காங்க. உங்களுக்கு பிடித்தவர் சொல்லி அனுப்பியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் சொன்னாரு. இந்த Youngsters, இந்த குழந்தைகள் நமது நாட்டுடைய அசையாத சொத்துக்கள். இங்க படிக்கிற அனைவருக்கும் இங்கேயே வேலை கொடுக்கணும். ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவருக்காக ஒரு உறுதிமொழி எடுப்போமா?”

என்று கூறி மாணவர்களின் நலனுக்காக உறுதிமொழி எடுக்கப்பட்டது. வெற்றி தமிழன் நாடு என்ற AI CITY க்கான ஒரு ஏ வி மாணவர்களின் முன்னே ஒளிபரப்பப்பட்டது. இது அவருடைய எதிர்கால விஷன் என்றும் கூறியிருந்தார்.

மேலும் உலகத்திலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். AI NEXUS 2026 என்ற உலக சாதனைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பேசியவை:-

ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் உலகளாவிய சாதனையைப் படைத்து மிகச் சிறப்பான பணியைச் செய்துள்ளது. இந்த AI உச்சி மாநாடு அனைவருக்கும் ஒரு விழாவாக அமைந்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டை செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அதில் ₹1.5 டிரில்லியன் பொருளாதார இலக்கை அடையும் நோக்கமும் இடம்பெற்றுள்ளது.

இன்று, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டின் AI இலக்கை ஆதரிப்பதற்கும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

இதற்காக ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி 1997 ஆம் ஆண்டு 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று அது 15,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மிகப்பெரிய கல்வி நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதில் சுமார் 3,000 மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான படிப்புகளில் பயின்று வருகின்றனர்.

AI NEXUS 2026 என்பது ஒரு நாள் நிகழ்வு அல்லது ஒரு உலகச் சாதனை மட்டுமல்ல. இது இந்தியாவின் அடுத்த தலைமுறை AI புதுமையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கமாகும்.

இதன் தாக்கம் வரும் ஆண்டுகளில் கல்வி, தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.