டெல்லி அரசு மருத்துவமனையில் சட்டவிரோத காவலில் இருக்கும் சோனம் வாங்சுக்? - என்ன சொல்லப்படுகிறது?
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலக வேண்டும் என்று இந்திய செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட 21 நாள்கள் ஆகிவிட்டன.
அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று சோனம் வாங்சுக் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று சோனம் வாங்சுக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
"ஜூலை 20
சுதந்திரத்திற்கான இரண்டாவது போராட்டம்!
அச்சமற்ற பாரதம், அநீதியற்ற பாரதம்!
அநீதியிலிருந்து விடுதலை! (வினாத்தாள் கசிவு போன்ற அநீதிகளுக்கு எதிராக)
அச்சத்திலிருந்து விடுதலை! (எனது சட்டவிரோத காவலுக்கு எதிராக)
இந்தியாவின் 2-வது சுதந்திரப் போராட்டம்!
நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி!
தயவுசெய்து இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டு இதனைப் பெரும் வெற்றியாக்குங்கள்!
சப்தர்ஜங் சட்டவிரோத காவலிலிருந்து..."
தான் அரசு மருத்துவமனையில் இருப்பதை சட்டவிரோத காவல் என்று குறிப்பிட்டிருக்கிறார் சோனம் வாங்சுக்.
சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலியும் சட்டவிரோத காவல் என்று குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
"சப்தர்ஜங் அரசு மருத்துவமனை மீதான எனது நம்பிக்கையை நான் முழுமையாக இழந்துவிட்டேன்.
சோனம் வாங்சுக்கின் பொட்டாசியம் அளவு 2.9 ஆகக் குறைந்துவிட்டதாகவும், அது ஆபத்தானது மற்றும் உயிருக்கே உலைவைக்கக் கூடியது என்றும் மருத்துவமனை எங்களிடம் கூறியது.
ஆனால், தங்களின் பொது சுகாதார அறிக்கையில் உண்மையான அளவைக் குறிப்பிடாமல், "பொட்டாசியம் அளவு குறைந்து வருகிறது" என்று மட்டும் தங்களுக்குச் சாதகமாக மழுப்பலாகக் குறிப்பிட்டிருந்தனர்.

சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்கும், பலமுறை கோரிக்கை விடுத்ததற்கும் பிறகு, இரவு 10:30 மணிக்கு அவருடைய இரத்த மாதிரிகளை எடுக்க அவர்கள் எங்களை அனுமதித்தனர். அப்போது, ஒரு தனியார் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்தபோது, பொட்டாசியம் அளவு 3.5 ஆக இருந்தது, இது முற்றிலும் இயல்பான அளவாகும்.
நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்ட போதிலும், அவரை டிஸ்சார்ஜ் செய்யவோ அல்லது எங்களது விருப்பப்படி ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றவோ மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
நாங்கள் இருக்கும் தளத்தில் சுமார் 30 போலீசாரும், மருத்துவமனை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் எங்களது நடமாட்டம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது மருத்துவ சிகிச்சை அல்ல. இது ஒரு சட்டவிரோத காவல்.
சோனமிற்கு ஏதேனும் நேர்ந்தால், அதற்கு மருத்துவமனை நிர்வாகமும் அரசாங்கமும் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, சோனமின் உடல்நிலை மேலும் மோசமடைவதற்குள் அவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு அனுமதி கோரி, இன்று அவசர விசாரணை நடத்தக் கோரி நான் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளேன்.
தங்களுக்குப் பிடித்தமான ஒருவருக்கு எங்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்காக எந்தவொரு குடும்பமும் இந்த அதிகார அமைப்போடு போராட வேண்டிய நிலை வரக்கூடாது".
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


