ITR: 3000 பேரைப் பயன்படுத்தி ரூ.357 கோடி மோசடி- வருமான வரித்துறையை மிரள வைத்த உத்தரப்பிரதேசப் பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் திட்டமிட்டு நாடு தழுவிய அளவில் நடத்திய மிகப் பெரிய போலி வருமான வரி மோசடியை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்சி அகர்வால் என்பவர், போலி வரி விலக்கு ஆவணங்கள் மூலம் ரூ.357 கோடி மதிப்பிலான முறைகேடுகளைச் செய்துள்ளார்.

இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சுமார் ரூ.65.5 கோடி அளவிலான போலி வருமான வரி ரீஃபண்டைப் பெற்றுத் தந்துள்ளார்.

மீரட்டில் 225 சதுர அடி குடிசையில் தனது பெற்றோர் மற்றும் தம்பியோடு வசித்து வரும் நான்சி அகர்வால் வீட்டிலிருந்தே இந்த மோசடியை நடத்தியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிறிய நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, வருமான வரித்துறையின் விதிமுறைகளில் உள்ள ஓட்டைகளை அவர் தனக்கு சாதகமாக்கி இம்மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

மோசடி

அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80GGC-ஐ திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்தப் பிரிவின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெற முடியும். அகர்வால் தனது வாடிக்கையாளர்களின் பெயரில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத சிறிய அரசியல் கட்சிகளுக்குப் பெருமளவில் நன்கொடை வழங்கியது போன்ற போலி ஆவணங்களைத் தயாரித்து, அதன் மூலம் பெரும் தொகையை வருமான வரி ரீஃபண்டாகப் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் வாடிக்கையாளர்களைப் பெற தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்கியுள்ளார். அதோடு தனது மோசடி நடவடிக்கையை விரிவுபடுத்த, புதிய வாடிக்கையாளர்களை அழைத்து வரும் நபர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

மேலும், தகுதியற்ற நபர்கள் போலி வருமான வரித் தாக்கல் (ITR) செய்யத் தூண்டியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையின் மீரட் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்தப் பல கோடி ரூபாய் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சோதனையில் ரூ.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.4 கோடி மதிப்பிலான பிக்சட் டெபாசிட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.