சரத் பவாரின் MPக்களுக்காக தேசியவாத காங்கிரஸை இணைக்க பாஜக முயற்சி; அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

மகாராஷ்டிராவில் மறைந்த துணை முதல்வர் அஜித்பவார் காலமான பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைக்க சரத்பவார் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அஜித்பவார் உயிரோடு இருந்தபோதே தேசியவாத காங்கிரஸின் இரு அணிகளையும் ஒன்றாகச் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவர் திடீரென இறந்ததால் அத்திட்டம் பாதியில் நின்றது. இப்போது பா.ஜ.க-விற்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் இருக்கும் 8 எம்.பி.க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.

எனவே அஜித்பவார் மனைவி சுனேத்ராபவார் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணிகளை ஒன்றாக இணைக்க பா.ஜ.க முயன்று வருகிறது.

இது தொடர்பாக சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஜெயந்த் பாட்டீல், பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தட்கரே ஆகியோர் ஒன்றாகச் சென்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினர்.

சுனேத்ரா பவார், பார்த்பவார்

இச்சந்திப்பின்போது இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாகப் பேசியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனேத்ரா பவார், அவரது மகன் பார்த் பவாரிடம் சொல்லாமல் நடந்துள்ளது. இரு அணிகளின் இணைப்புக்கு பா.ஜ.கவும் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இரு அணிகளும் இணைந்தால் ஒவ்வொரு அணியிலும் தலா ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க தயாராக இருப்பதாக பா.ஜ.க தலைமை தெரிவித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசிய பிறகு அஜித்பவார் மகன் பார்த்பவார் தனியாகச் சென்று தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது தங்களது கட்சியின் தலைவர்கள் உங்களுடன் என்ன தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று பார்த் பவார் கேட்டார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தன்னுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்த்பவாரிடம் பகிர்ந்து கொள்ள தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துவிட்டார். இதுதொடர்பாக உங்களது தாயாரிடம் பேசிக்கொள்கிறேன் என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டாராம்.

பார்த் பவார் ஆதிக்கம்

கட்சியில் பார்த் பவார் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவது கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அஜித்பவார் பவார் இறந்த பிறகு சரத்பவார் மீண்டும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதற்காகத்தான் இரு அணிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இப்போது பார்த் பவார் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காமல் இரு அணிகளும் ஒன்றாகச் சேர தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு

சரத்பவார் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க கூட்டணியில் சேரும் முடிவில் உறுதியாக இருக்கின்றனர். சரத்பவார் இவ்விவகாரத்தில் இன்னும் உறுதியான ஒரு முடிவை எடுக்காமல் இருக்கிறார்.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் ஒன்று சேருவதை அஜித்பவார் மனைவி சுனேத்ரா பவார் மற்றும் மகன் பார்த் பவார் விரும்பவில்லை என்று கட்சியின் இரண்டாக கட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இரு கட்சிகளும் இணைந்தால் சரத்பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலேயின் ஆதிக்கம் அதிகமாகிவிடும் என்று பயப்படுகின்றனர்.

எனவேதான் இரு அணிகளின் இணைப்புக்கு அஜித்பவார் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்கள் பார்த் பவார், ஜெய் பவார் ஆகியோர் கட்சியின் அதிகாரத்தை குடும்பத்திற்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ள தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதனால் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல் மற்றும் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே ஆகியோர், பவார் குடும்பத்தின் இந்த ஆதிக்கத்தால் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக உணர்கின்றனர். பா.ஜ.க கூட்டணி ஒரு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தப் பதவிக்கு பிரபுல் படேல் மற்றும் பார்த் பவார் ஆகிய இருவருமே போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.