காக்க காக்க : காவலின் காதல்! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 07

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!

கேங்ஸ்டர் சேது செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்கு தனது குழுவினருடன் வருகிறான். காவல்துறை மிகக் கடுமையான நெருக்கடி தந்து கொண்டிருப்பதால், ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறான் அவன்.

முதலில் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் இடம் திரிசூலம் ஸ்டேஷன் என்று இருந்ததை செங்கல்பட்டு என்று அவன் மாற்றியதும்கூட அந்த நெருக்கடியின் காரணமாகத்தான். ஆனால், அதையும் மோப்பம் பிடித்து போலீஸ் அவனைப் பின் தொடர்ந்து வந்து பொதுமக்களோடு கலந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் மறைவாக செய்துகொள்ளும் சைகை பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சேதுவுக்கு, அவனது மிரட்டலுக்கு ஆளான வாசு என்பவரிடமிருந்து பணத்தைக் கச்சிதமாகப் பெற்றுக்கொண்டு போவதுதான் நோக்கம். அது நடக்கிறது. பணத்தைப் பெற்றுக் கொண்டு பிளாட்பார்மில் திரும்பி நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் சொல்லாமலேயே எந்தச் சிறு சம்பவமும் நடக்காமலேயே சேது தன்னைச் சுற்றி போலீஸ்காரர்கள் சூழ்ந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்துவிடுகிறான்.

காக்க காக்க - டேனியல் பாலாஜி

அவனது விழிப்பான தன்மையும், உள்ளுணர்வும் அவனது நீண்ட அனுபவத்திலிருந்து வந்திருக்கிறது என்பதன் சான்றாக அது இருக்கிறது. ஆனாலும், பயனில்லை. அவனையும், அவனது குழுவினரையும் விரட்டிச் செல்லும், ஏசிபி அன்புச்செல்வன் ஐபிஎஸ் உள்ளிட்ட போலீஸ்காரர்கள், பலரையும் சுட்டு வீழ்த்துகிறார்கள். சேதுவும் அந்த என்கவுண்டரில் கொல்லப்படுகிறான்.

இந்தக்காட்சி அதுவரையில் நாம் பார்த்திருந்த போலீஸ் சம்பந்தமான அத்தனை சினிமாக் காட்சிகளிலிருந்தும் வேறுபட்ட, முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுத்தது. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என அனைத்தும் புதுமையாகவும், ஈர்ப்போடும் இருந்தன. இந்தக் காட்சி மட்டுமல்ல, காக்க காக்க எனும் இந்த மொத்தப் படமும், தமிழின் அதற்குப் பிறகான போலீஸ் படங்கள் மற்றும் ஆக்சன் படங்களின் தன்மையிலேயே ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

அந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, தங்களது முக்கிய இலக்குகள் தகர்க்கப்பட்டன எனும் நிறைவிலிருக்கும் அன்புச்செல்வன் குழுவினருக்கு இன்னொரு புதிய சிக்கல் முளைக்கிறது. மும்பையில் சேதுவை விடவும் பெரிய குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு, அங்குள்ள சிறையிலிருந்து தப்பி சென்னைக்கு வந்திருக்கிறான் சேதுவின் தம்பி பாண்டியா.

அவனது கண்முன்னால்தான் இந்தச் சம்பவமே நடந்திருக்கிறது. அப்படி ஒரு நபர் பின்னணியில் இருப்பதே, அப்போது அன்புச்செல்வன் குழுவுக்குத் தெரியாது. பாண்டியா ஒரு குற்றவாளி மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஒரு சைகோவாகவே இருக்கிறான். போலீஸை அவன் எதிர்கொள்ளும் வழிமுறையே, தனிநபர்களான அவர்களின் தனிப்பட்ட குடும்பம், மனைவி, மக்களைக் குறிவைத்துத் தாக்கி அவர்களைப் பலவீனப்படுத்துவதாகத்தான் இருக்கிறது.

’பயம்னா எனக்கு என்னன்னே தெரியாது. ஏன்னா நான் தனியா இருக்கேன். சமூகநலனுக்காக நான் செய்யும் இந்த வேட்டை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று ஓரிடத்தில் அன்புச்செல்வன் சொல்கிறான். எனக்கென யாருமில்லை, என்னை யாரை வைத்தும் பயமுறுத்திவிட முடியாது என்பது அதிலிருக்கும் செய்தி. ஆனால், அதைத் தகர்ப்பதைப் போல, எதிர்பாராத விதமாக அவனது வாழ்க்கைக்குள் வருகிறாள் மாயா.

காதலுக்கென்றே ஆன தனித்துவமான படங்களை மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் கிரைம், ஆக்சன், குடும்ப டிராமா, நகைச்சுவை போன்ற பல வகைமையான படங்களிலும் காதல் முக்கியமான பங்காற்றுகிறது.

காதல் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்ட படங்கள் அவ்வளவு எளிதாக சோடை போய்விடுவதில்லை. சமீபத்தில் வெளியான ‘கில்’ எனும் இந்திப்படம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் வெளியான அதிதீவிரமான ஆக்சன் படங்களுள் முக்கியமானது என்று அதைக் குறிப்பிட முடியும். அந்தப் படத்தில் குரூரமான சண்டைக் காட்சிகள் நிறைந்திருந்தன. அந்தப் படத்தில் ஈவிரக்கமின்றி அந்த ஹீரோயினைக் கொல்கிறான் வில்லன். பார்வையாளர்களான நம்மைப் பதற வைத்து, ரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் காட்சி அது.

அதுவரை ஒரு நியாயமான, சட்டத்துக்குட்பட்ட ஒரு போராட்டத்தை நடத்த முயலும் ஹீரோ அதன்பின் அப்படியொரு வெறியாட்டம் ஆடுகிறான். அவனது அதே ரேஜிங்தான் பார்வையாளர்களான நமக்கும் ஏற்பட்டிருக்கிறது. அத்தனை பேரையும் கொன்று குவித்துவிட்டு அவன் ஓயும்போதுதான், நாமும் அமைதியடைகிறோம். அந்த அளவுக்கு நம்மை திரைக்குள் இழுத்துப்போனது அந்தக் காதல்தான்!

காக்க காக்கவிலும், ஒரு பிரமாதமான புதிய தலைமுறைக்காதலைக் கண்டோம் நாம். மாயா தன் காதலை, அன்புவிடன் வெளிப்படுத்தும் காட்சிகள் அற்புதமானவை. அந்த வசனங்கள் நமக்குப் புத்துணர்வூட்டின. ஒரு விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய அன்புச்செல்வனிடம் மாயா சொல்கிறாள்,

”அன்னைக்கு எனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ, வாட்டர் டேங்கர் இடிச்சு யாரோ என்னைத் தூக்கி வீசின மாதிரி போய் விழுந்தேன். தாங்க முடியாத ஒரு பெரிய வலி. திடீர்னு யாரோ என்னை தூக்கிட்டுப் போகிற மாதிரி இருந்தது. அது ஏசிபி அன்புச்செல்வன்! நான் பார்த்தேன். கார்ல உங்க மடியில என்னைப் படுக்க வச்சீங்க. அதை நான் பார்த்தேன். உங்க சட்ட பூரா என்னோட ரத்தம். நான் பார்த்தேன். சீக்கிரமா போங்கன்னு உங்க டிரைவரா அவசரப்படுத்துனீங்க. அது எனக்குக் கேட்டது.

அன்புச்செல்வன், அப்போ நான் பார்த்தேன். நீங்க அழுதீங்க, உங்க கண்ணீரோட ஒரு துளி என் முகத்தில விழுந்தது. ஏன்? அன்புச்செல்வன்… எனக்குப் பதிலா உங்க மடியில வேற யாராவது இருந்திருந்தாலும் உங்க கண்ணுல இருந்து கண்ணீர் வந்திருக்கலாம். மே பி. ஆனா, அங்க எனக்கு பதிலா வேற யாருமில்ல. நாந்தான் இருந்தேன். அன்புச்செல்வன், நான் உங்களைக் காதலிக்கிறேன். ட்ரூலி, மேட்லி, டீப்லி!”

ஆனால், அன்புச்செல்வன் தன் பயம் காரணமாக, அந்தக் காதலை மறுக்கிறான். பொதுவாக வருந்தி அழும் அல்லது சோகமாகவேண்டிய சூழல் அது. ஆனால், மாயா, “உங்களை என்னைக் காதலிக்கச் சொன்னேனா? நான் உங்களைக் காதலிக்கிறேன். என் மனதிலிருப்பதைச் சொன்னேன். தட் சிம்பிள்” என்று கம்பீரமாகக் கடக்கிறாள்.

நமக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவன் அவளால் எப்போதோ ஈர்க்கப்பட்டுவிட்டான். அவனால் இந்தக் காதலிலிருந்து தப்ப முடியாது என்பதை நாம் உணர்கிறோம். போலவே, கொஞ்ச நாட்களிலேயே இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு கடற்கரைச் சூழலில் இருவரும் பேசுகிறார்கள். இப்போது அன்புவின் மனம் கனிந்திருக்கிறது. மாயாவின் தொனி மாறியிருக்கிறது.

“உனக்கு என்ன வேணும் மாயா?”

“நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும். உங்க கூட நான் என் வாழ்க்கையை வாழணும். உங்க கூட இருக்கணும். உங்க கூட சிரிச்சுப் பேசணும். உங்க கூட சண்டை போடணும். உங்க தோளில் சாஞ்சு அழணும். இன்னைக்கு மாதிரி எப்பவுமே உங்க மேல நான் பைத்தியமா இருக்கணும். மூணு குழந்தைகள் பெத்துக்கணும். பாக்குறதுக்கும், பழகுறதுக்கும் அவங்க உங்களை மாதிரியே இருக்கணும். இந்தக் கண்களை நான் பார்த்துக்கொண்டே இருக்கணும். அப்புறம் ஒரு நாள் செத்து போயிடணும்”

இதை விடவும் ஒரு பெண் எப்படி அழகாகவும், உறுதியாகவும் தன் காதலை வெளிப்படுத்திவிட முடியும்? அவ்வளவுதான். அந்த உணர்வை இனியும் யாரால் மறுக்கமுடியும்? அன்புச்செல்வன் அவள் காதலை ஏற்றுக் கொள்கிறான். இந்தச் சூழலில் காதலர்கள் கட்டியணைத்துக் கொள்வதைத்தான் நாம் அதுவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், மகிழ்வின் உச்சத்தில் மாயா கையை நீட்டுகிறாள். அன்புச்செல்வன் அதைப்பற்றி கைகுலுக்குகிறான். காதல் என்பது இத்தனை ஜென்டிலானதும்தான் என்று நமக்கு உறைக்கிறது.

1997-ல் நேருக்கு நேர் படம் மூலமாக அறிமுகமான சூர்யாவுக்கு, ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் நந்தா என்றால், அவரை ஒரு முன்னணி நடிகராக, ஸ்டாராக மாற்றிய சினிமா இந்தக் காக்க காக்கதான்.

இந்தப்படம் முழுதும் தரையில் நிற்காத ஒரு பந்தைப்போன்ற துள்ளலோடு சூர்யா இருந்தார். இறுக்கமான ஒரு காவல் அதிகாரியாகவும், காதலுக்கு முன்னால் இளகி நிற்கும் காதலனாகவும் அவரால் கச்சிதமாக வெளிப்பட முடிந்தது.

ஜோதிகா, சூர்யாவைக் காதலிக்கும் மாயாவாக அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி திரையை நிறைத்தது. அதற்கு அந்தச் சமயத்தில் அவர்கள் நிஜமாகவே காதலித்துக் கொண்டிருந்தது நிச்சயமாக ஒரு காரணமாக இருந்திருக்கும் என்று நம்மால் உணரமுடிகிறது. ஜீவன், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி போன்ற பலரும் நடித்திருந்தனர்.

படத்தின் ஒளிப்பதிவு ஆர்டி. ராஜசேகர். மின்னலே, கஜினி, பில்லா 2 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜசேகர். காக்க காக்க அவரது திரைப்பயணத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது. ‘என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடல் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து காதலிப்பவர்கள் இப்படித் தனியே காரிலோ, ஜீப்பிலோ பயணம் போக வேண்டும் என்று விரும்பினார்கள். படத்தொகுப்பு செய்தவர் அந்தோணி. படத்தை தயாரித்தது, வி கிரியேஷன்ஸ்க்காக கலைப்புலி. எஸ். தாணு.

கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இது இரண்டாவது படம். தனது புதிய அணுகுமுறையால், தமிழ் சினிமாவின் மேக்கிங் ஸ்டைலையே பாதித்தார் என்று சொல்லலாம். இந்தப் படத்தில் வரும் போலீஸ்துறை பற்றிய காட்சிகளின் நம்பகத்தன்மைக்காக ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ், சைலேந்திரபாபு ஐபிஎஸ் போன்ற நிஜ காவல்துறை அதிகாரிகளிடம் விவாதித்து, ஆலோசனை பெற்றிருக்கிறார். தமிழ்ப்படங்களுக்கு மிக அழகான தமிழ்த்தலைப்புகளை வைத்த மிகச்சில இயக்குனர்களில் கௌதமுக்கு முக்கியமான இடம் உண்டு. பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா -இதெல்லாம் கௌதம் தன் படங்களுக்கு வைத்த பெயர்கள்.

போலவே, பாடல்களை அழகுற படமாக்குவதிலும் கௌதமுக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. இந்தப் படத்திலும் பாடல்கள் பெருவரவேற்பைப் பெற்றன. கௌதம், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை எனும் மூவர் கூட்டணி அதைச் சாதித்திருந்தது. இதன் பாடல்கள் அனைத்தையும் பாடலாசிரியர் தாமரை எழுதியிருந்தார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம் போன்ற பல படங்களில் இந்தக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

’உயிரின் உயிரே’ பாடலை கேகே, சுசித்ரா பாடியிருந்தனர். திப்பு, ஷாலினி பாடிய ’என்னை கொஞ்சம் மாற்றி’, பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ’ஒன்றாய் இரண்டா ஆசைகள்’ போன்ற அனைத்துப் பாடல்களும் இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இருந்து கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்தின் பின்னணி இசையை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்பு, பாண்டிச்சேரி லேக்ஹவுஸின் சுவர்களை உடைத்துக்கொண்டு வெளியே விழும் காட்சியில் தொடங்கி, பாண்டியா அன்புவின் ஆதாரத்தின் மீதே கைவைக்கப்போவதான அறிவிப்பை வெளிப்படுத்தும் இடைவேளைக் காட்சியில் பயணித்து, இறுதி வரை படத்தின் பரபரப்பை இசையால் நகர்த்திக் கொண்டுபோனது படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

அதுவரையிலான தமிழ் கமர்ஷியல் சினிமாக்களில், இறுதிக் காட்சியில் வில்லன், நாயகன் தரப்பிலிருந்து அம்மா, காதலி, குழந்தைகளைப் பணயமாகப் பிடித்துக்கொண்டு போவான். மிஞ்சிப்போனால் அவர்களைக் கட்டிப்போட்டு வைத்துவிட்டு, ஹீரோ ஆள், அம்புகளோடு வரும் வரை காத்துக்கொண்டிருப்பான். அவர்கள் மீது ஒரு சிறு கீறலும் விழுந்திருக்காது. ஹீரோவும் தனியாக வந்து பகுமானமாகச் சண்டையிட்டு, நூறு அடியாட்களையும் வீழ்த்தி, கடைசியில் குடும்பத்தைப் பத்திரமாக மீட்டுச்செல்வார்.

இங்கும் பாண்டியா மாயாவையும், ஸ்வாதியையும் கடத்திக் கொண்டுபோய் வைத்துக்கொண்டு, அன்புவை ஓரிடத்துக்கு வரச்சொல்கிறான். நாமும் மேற்சொன்னக் காட்சியை எதிர்பார்க்கிறோம். அந்தச் சிறு குழுவைப் பிடிக்க அன்புச்செல்வன் போலீஸ் படையோடு செல்கிறான். ஆனாலும், பயனில்லை. அவர்கள் போகுமுன்பாகவே ஸ்வாதியின் தலையை வெட்டிக் கொன்ற பாண்டியா, மாயாவையும் அன்புச்செல்வனின் கண்முன்னாலேயே சுட்டுக்கொல்கிறான். இதை நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், நிஜம் இப்படித்தான் இருக்கக்கூடும். ஆனாலும், மாயா காப்பாற்றப்பட்டிருக்கலாம் எனும் ஏக்கம் இன்றளவும் நம்மை அரித்துக்கொண்டுதான் இருக்கிறது.!

(தொடரும்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.