40 நிமிட அமைச்சரவை கூட்டம்; கடுமையாக எச்சரித்த முதல்வர் விஜய்! - ஜெர்க் ஆன அமைச்சர்கள்!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு சில கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

CM Vijay

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், கடந்த மாதம் அமைச்சரவை கூட்டம் நடந்த போதே நாம் க்ளீன் கவர்மெண்டை நடத்த வந்திருக்கிறோம். ஊழலற்ற ஆட்சியை கொடுத்து மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டுமென முதல்வர் உறுதியாக கூறியிருந்தார். ஆனால், கடந்த ஒரு மாதத்தில் சில அமைச்சர்களின் மீது கமிஷன் மற்றும் முறைகேடு புகார்களை உளவுத்துறை நோட் போட்டு முதல்வரிடம் கொடுத்திருக்கிறது.

இதனால் அமைச்சர்களை எச்சரிக்கும் தொனியில்தான் முதல்வர் கூட்டத்துக்கே வந்தார். மொத்தம் 40 நிமிடங்கள் கூட்டம் நடந்தது. பட்ஜெட் சார்ந்து முக்கியமான துறைகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவை குறித்து விரிவாக பேசப்பட்டது. உத்தண்டி மேம்பால திட்டத்தின் பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகளையும் முதல்வர் செய்ய சொல்லியிருக்கிறார். இதுபோக நீர்வளத்துறையின் திட்டங்கள் சிலவற்றுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீபமாக சில அமைச்சர்கள் மீது வந்த புகார்களை கண்டு முதல்வர் கொதித்து போயிருக்கிறார். அதனால்தான் லஞ்சம், ஊழல் என எதாவது புகார் வந்தால் பொறுத்துக் கொள்ளமாட்டேன். தெரிந்தவர், தெரியாதவர் என யாராக இருந்தாலும் அமைச்சரவையிலிருந்து தூக்கி வீசி விடுவேன் என கறாராகவே கூறியிருக்கிறார்.

அமைச்சரவை கூட்டம்
அமைச்சரவை கூட்டம்

உத்தரவை மீறி எதாவது நடந்தால் விளைவுகளை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள் எனவும் எச்சரித்திருக்கிறார்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.