வரலாற்றுச் சின்னமாக அழகுற காட்சியளிக்கும் எல்லீஸ் மதகுகள் (16 கண் பாலம்) கட்டுமானம் | அணை ஓசை 27
காவிரி-மேட்டூர் அணைத்திட்டத்தில் கட்டுமான பணி செய்யும்போது தற்காலிகமாக ஆற்றிலிருந்து நீர் வெளியேற்றம் செய்வதற்கு ஆரம்ப காலங்களில் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரின் மூலம், அதன் ஆற்றலை பயன்படுத்தி நீர் மின்சக்தி தயார் செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஆரம்ப காலத்தில் "கர்னல் எல்லீஸ்" வடிவமைத்த திட்டப்படி 24 அங்குலம் கொண்ட நான்கு குழாய்களை அணையின் சுவற்றில் இடக்காக பதித்து அந்த நீரின் விசையில், குறைந்த அழுத்தமுள்ள "டர்பைன்களை" (Turbines) இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்ட எலக்ட்ரிக் ஜெனரேட்டர் (மின் ஆக்கி) இயங்க வைத்து மின்சாரம் தயாரிப்பது என்பதாகும்.
மேலும், இதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தைக் கொண்டு அணை கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் விளக்குகள் (Lighting) மற்றும் இயந்திரங்களை இயக்குவதற்கு பயன்படுத்தும் திட்டமும் இருந்தது. இது தேவைக்கு போதுமானதாக இருக்காது என்ற புரிதலும் அப்போது ஏற்பட்டது.
1928 ல் நீர்மின்னாக்கத் திட்டத்தின் தலைமைப் பொறியாளரை இதில் இணைத்து, பைக்காரா நீர் மின் திட்டத்தின் வடிவமைப்பு போல பெரிய அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மேற்கொண்டு திட்டமிடப்பட்டது.
பிரிட்டிஷ் அரசின் ஆணைப்படி தலைமைப் பொறியாளர் மேட்டூருக்கு வருகை புரிந்து, காவிரி-மேட்டூர் திட்ட தலைமை பொறியாளர் திரு. முல்லிங்ஸ் அவர்களுடன் கலந்துரையாடினார்.
மேட்டூர் அணை ஆரம்பத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்து பாசன வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும், பாசனத் தேவை இல்லாத காலங்களில் வெகு சொற்பமாகவே நீர் திறந்து விடப்பட வேண்டும் என்ற திட்டம் இருந்தது. அதே சமயம் திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு மின் உற்பத்தி செய்து அந்த மின்சாரத்தை வருடம் முழுவதும் கட்டுமானப் பணிக்கு உபயோகிக்கும் வழி குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.
பாசன வசதி தேவைப்படாத காலங்களில், ஆற்றில் குடிநீருக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடி என்ற அளவில் இருக்கும் போது மின் உற்பத்திக்கு மிகக் குறைந்த அளவு நீரே கிட்டும்! இவற்றைக் கணக்கில் கொண்டு விரிவான திட்டம் தீட்டப்பட்டது.
மேஜர் ஹோவார்ட் (Major Howard) என்ற மின்துறை தலைமை பொறியாளர் தயாரித்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது மிகவும் பயனுள்ள திட்டமாக மாறியது. அதன்படி 102 அங்குல குழாய்கள் பதிக்கப்பட்டு, அவை அடைபடாமல் இருக்க பெரும் இரும்பு வலைகள் பொருத்தப்பட்டு, நீர் வெளியேற்றத்தை அளந்து கண்காணிக்க அலாரம் பொருத்தப்பட்டு, அங்கே ஒரு பொறியியல் சாகசம் நிகழ்த்தப்பட்டது எனலாம்!
இந்த மின் நிலையம் காவிரி ஆற்றின் மையம் (CORE RIVER) எனலாம். இங்கு 4 அலகுகள் கொண்ட மின் நிலையங்கள் ஒவ்வொன்றும் 40 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்கும் திறன் கொண்டவை.
இந்த நீர் நிலைய பயன்பாட்டுக்கு முக்கியமாக தேவைப்படும் கிரேன் 50 டன் திறனைக் கொண்டதாக கண்டறியப்பட்டது. இதன் அப்போதைய விலை 2560 பிரிட்டிஷ் பவுண்ட் (POUNDS)! 1930-ம் ஆண்டு நவம்பர் மாதம் நீர் மின் குழாய்கள் பதிக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழாய்களைக் கொண்டு வர மற்றும் அனைத்து பொருட்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் டிராம்வே லைன் அணையின் இடது புறக்கரையிலிருந்தும், அங்கிருந்து அணை சுவற்றின் நடுப்பகுதி மற்றும் இன்ன பிற பகுதிகளுக்கும் தேவையான அளவு "டிராம்வே" ரயில் இருப்புப் பாதை நிர்மாணிக்கப்பட்டது.
1931-ம் வருடம், மார்ச் மாதம் பகுதி வேலைகளும், முழுவதுமாக அதே வருடம் ஜூன் மாதம் வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. அதுவரை ஒட்டுமொத்தமாக நீர் மின் சக்தி பெற ஏதுவான இரும்பு குழாய்கள் பிளான்ஞ் (Flange) மற்றும் இதர இரும்பு சம்பந்தப்பட்ட வேலைகள் 900 டன்கள் சமமான எடைக்குச் செய்து முடிக்கப்பட்டது. குழாய்கள் பதித்து முடித்த பிறகு அதற்கு மேலே கான்கிரீட் போடப்பட்டது. இந்த குழாய்கள் மற்றும் இதன் பதிப்பு வேலைகளுக்கு மட்டும் தனியாக 8 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
100 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து நீரின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழக மக்கள் நாம் பயன்படுத்தி வருகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கடந்து காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் மேலும் 4 அலகுகள் கொண்ட நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அங்கு நிறுவப்பட்டது. இதற்கு நீர்த்தேக்கத்திலிருந்து சீத்தாமலையை குடைந்து சுரங்கம் வழியாக தற்போதைய அணையின் இடதுபுற ஓரத்தில் இந்த மின் நிலையம் நிறுவப்பட்டு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
அணை கட்டும் போது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட மின் நிலையம் பழைய பவர் ஹவுஸ் எனவும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு கட்டப்பட்ட மின்நிலையத்தை புதிய பவர் ஹவுஸ் என்றும் அழைக்கிறார்கள்.
பழைய பவர் ஹவுஸ் நிலையத்திலிருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் இருந்து பார்க்கும்போது அதுவும் முழுமையான உற்பத்தி சமயத்தில் பார்க்கும்போது அது ஒரு கண்கொள்ளாக்காட்சியாக விருந்தளிக்கும். சீதா மலை - பாலமலை என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே பிரம்மாண்ட பள்ளத்தாக்கில் சுமார் 5 கி.மீ தூரத்துக்கு ஒரே நேர்க்கோட்டில் கரைபுரண்டு ஓடும் காவிரியை காண இரு கண்கள் போதா!
பாசன வசதிக்கான மதகுகளின் இடங்கள் குறிக்கப்பட்டு அணையின் 2 இடங்கள் தெரிவு செய்யப்பட்டது. பாசனக் கால்வாய்களின் வழியாக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகபட்சமாக விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி என்ற அடிப்படை அளவில் கால்வாய்களின் அகலம் மற்றும் ஆழம் கணக்கிடப்பட்டது. அணைக்கு மறுபுறம் (தெற்கு) கால்வாய் வெட்டப்பட்ட இடங்கள் மிகுந்த கற்பாறைகள் நிறைந்தவையாக அமைந்திருந்தன.
உயர் மட்ட கால்வாய் (High level channel) எனப்படும் வலது பக்கக் கால்வாய் தோண்டும் பணி 1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பித்து 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. முழுவதுமாக இதற்கான செலவு ரூபாய் 4,43,704 ரூபாய் ஆகும்!
கீழ்மட்டக் கால்வாய் (Low level channel) எனப்படும் இடதுபுறக் கால்வாய் விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி என திட்டமிட்டாலும், 20,000 அல்லது அதற்கு கீழே தான் நீர் திறந்து விட வாய்ப்பு ஏற்படும். ஏனெனில், அணையின் கொள்ளளவு குறைவாக இருக்கும் போது மட்டுமே இதில் பாசனத்திற்கு நீர் திறக்கும் நிலை ஏற்படும். தேக்கி வைக்கப்பட்ட அணையில் இருந்து மிக அதிக அழுத்தம் கொண்ட நீர் வெளியேறும் போது மதகுகளில் இருந்து ஒரு வினாடிக்கு 50 - 60 அடி நீர் வேகமாக வெளியேறும். இந்த வேகத்தை கட்டுப்படுத்த ஹைட்ராலிக் ஜம்ப் (Hydraulic jump) எனப்படும் "நீர் துள்ளல்" அமைப்பு மதகுகளில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் அமைக்கப்பட்டது. இயற்கையாக அமைந்த பாறைகள் போன்று தோன்றினாலும் அவை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
கீழ்மட்ட கால்வாயை வெட்டுவதற்கு 1931-ம் வருடம் மே மாதம் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1932 -ம் வருடம் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டது. இதற்குண்டான மொத்த செலவு ரூபாய் 3,83,160/-.
கால்வாய்களை வெட்டும்போது தோண்டி எடுத்த மண்ணை எங்கு வெளியேற்றுவது என்பது பெரிய கேள்வியாக இருந்தது. அணைச் சுவற்றின் தெற்கு பக்கம் (இப்போது பூங்கா உள்ள பகுதி) முழுவதும் சுமார் 10 அடி உயரத்துக்கு கால்வாய் வெட்டும் போது கிடைத்த மண்ணை இட்டு நிரப்பினார்கள். மேலும் அணை திட்டத்தில் எங்கெங்கு பள்ளம் உள்ளதோ அங்கு நிரப்ப மண் பயன்படுத்தப்பட்டது. கால்வாய் ஆற்றுடன் இணையும் "டெயில் எண்ட்" (tail end) எனப்படும் வால் பகுதியில் ஆற்றிலும் கொட்டப்பட்டது.
இது போன்று ஆற்றில் கொட்டப்பட்ட மண் பெரும்பாலும் 1932 மற்றும் 1933-ம் வருடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் காவிரி ஆற்றோடு கரைந்து அடித்துச் செல்லப்பட்டது ஒரு கெடுவாய்ப்பாக அமைந்தது.
கால்வாய் வெட்டப்படும் போது கிடைத்த கற்கள் சீரமைக்கப்பட்டு, கால்வாயின் பக்கவாட்டு சுவர் எழுப்ப கட்டிட வேலை செய்யப் பயன்படுத்தப் பட்டது. இதில் வெட்டி எடுக்கப்பட்ட மண் மற்றும் கற்களை முழுமையாக அப்புறப்படுத்த 3 டிராம்வே ரயில் இன்ஜின் மற்றும் 250 லாரி டிரக்குகள் பயன்படுத்தப்பட்டன.
இந்தக் கால்வாய் அமைக்கும் பணியில் கல் உடைக்கும் தொழிலாளர்களால் தங்கள் கைகளால் உளி மற்றும் சுத்தியல்களை வைத்து உடைத்து எடுக்க இயலாத நிலை ஏற்பட்டது. காரணம் , அந்த அளவுக்கு கடினப் பாறைகள் பல இடங்களில் அமைந்திருந்தன. எனவே, இதை வெட்டி அப்புறப்படுத்த காற்றழுத்த துரப்பணக் கருவி (Pneumatic drills) மற்றும் பெரிய சுத்திகள் (Jack Hammers), மேலும் துளையிட்டு வெடி வைத்து தகர்க்கும் கருவிகள் போன்ற முறைகளில் இதன் குவியல்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்தக் கால்வாய் அமைக்கும் பணி மிகப் பெரும் சவாலாக அமைந்தது. மனித - இயற்கை மோதலில் எப்போதும் இயற்கை மனிதனை விட ஒரு படி மேலே என்ற நிலை தான் ஏற்படுகிறது. இங்கேயும் அப்படித்தான் நடந்தது. சவால்களை படிக்கட்டுகளாக மாற்றி இலக்கை நோக்கி தொடர்ந்து பயணித்தனர். செய்த வேலைகளை இப்போது கண்ணுறும் போது, அப்போது மேட்டூர் அணையை கட்டிய பொறியாளர்கள், பெரிதும் பாராட்டுக்குரியவர்கள் என்று மனதார வாழ்த்த தோன்றும்.
வரலாற்றுச் சின்னமாக அழகுற அமைந்த மேட்டூர் அணையின் அழகியலை தனித்துவமாக பறைசாற்றும் ஓர் இடத்திற்கு நாம் இப்போது வந்துள்ளோம்! 16 கண் பாலம் என்று வழக்கில் கூறப்படும் 16 மதகுகளை கொண்ட உபரி நீர் வெளியேறும் அமைப்பின் பாலத்தின் மீதுதான் நாம் இப்போது நின்று கொண்டிருக்கிறோம். இது குறித்து தொடரின் முற்பகுதியில் சுருக்கமாக நாம் கண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இங்கிருந்து அணையின் நீர்த் தேக்கத்தை காணும் போது எதிரில் இருப்பது கடலா? என்ற சந்தேகம் அனைவருக்கும் ஏற்படும். ஆம்! பரந்து விரிந்த தண்ணீரின் எல்லைகள் உங்கள் கண்களை விட்டு அகல மறுக்கும்.
உபரி நீர் வெளியேற்றத்திற்கு ஆரம்ப காலத்தில் காவிரி ஆற்றின் இடது கரையில் கர்னல் எல்லீஸ், (Royal Engineer) அப்போதைய மெட்ராஸ் மாகாண பொதுப்பணித்துறை சூப்பரின்டெண்டன்ட் இன்ஜினியராக இருந்தவர் வடிவமைத்த இடம். பின்னாளில் அணையின் இடம், மாறுதலுக்கு உட்பட்டாலும் சுமார் ஒரு மைல் தூரம் ஆற்றின் வடக்கு நோக்கி தள்ளப்பட்டு கட்ட ஆரம்பித்து இருந்தாலும் இந்த உபரி நீர் வெளியேற்ற இடம் மாறவில்லை.

இந்த இடம் அணையின் இடது புற வாக்கில் மலைப் பகுதியை சார்ந்து கணக்கிலடங்கா உபரி நீரையும் வெளியேற்றும் விதமான அமைப்பில் நீர் பாதை அமைந்து தொட்டில் பட்டி என்ற கிராமம் ஓரமாக பாய்ந்து மூன்று மைல் தூரம் கடந்து சென்று மீண்டும் காவிரி ஆற்றில் கலந்து விடுமாறு அமைப்பைப் பெற்றிருந்தது. சிற்சில இடங்களில் அமைந்திருந்த பெரிய குன்றுகளைத் தவிர நீரோட்டத்திற்கு தகுந்த வாகு (அமைப்பு) இங்கே இருந்தது.
உபரி நீர் வழிந்தோடத்தக்க அளவில் மதகுகளுக்கு ஏற்றவாறு மதகுகளின் அடிமட்ட அளவு + 770 அடி MSL என்ற அளவுக்கு குறைவாக வரும்படி அந்த நீர் பாதை சரி செய்யப்பட்டது. இந்த உபரி நீர் மதகுகள் அமைக்கும் பணி நடந்த இடத்தில் கீழ்கண்ட முக்கிய நான்கு வித பணிகள் நடைபெற்றன.
1. உபரி நீர் வெளியேற்றத்துக்கு தேவையான அளவு அங்கிருந்த மலையை வெட்டி உயரத்தை குறைப்பது. ஆம், மலையை வெட்டினார்கள்!
2. மதகுகளின் கதவுகளை ஏற்றி இறக்குவதற்கு தக்க அளவில் இந்த வெளியேற்றப் பகுதியில் தூண்களை அமைத்து அதில் கதவுகளை பொருத்தி இவற்றுக்கு மேலாக பாலம் அமைப்பது.
3. 60 அடிக்கு 20 அடி அளவிலான கதவுகளைப் பொருத்தி அதை இயக்கும் வகையில் வேலை மேடையை நிர்மாணிப்பது.
4. மதகுகளின் கீழ்புறம் கற்களை வைத்து நீளவாக்கில் சுவர் எழுப்பி, நீருக்கு கவசம் போல வழிந்தோடும் அமைப்பை நிறுவுதல்.
ஆரம்ப கால திட்டமிட்டபடி 40 அடி அகலத்தில் 25 அடி உயர நீர் வெளியேறும் பாதைகள் அமைக்கவும் அதற்காக 1,71,99,000 யூனிட் அளவுக்கு கற்களும், மண்ணும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதற்கான செலவு ரூபாய் 9,12,000/- பிடிக்கும் என்றும் உத்தேசமாக மதிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், 60 அடி அகலத்தில் 16 வெளியேறும் பாதைகள் என்று மாற்றியமைக்கப்பட்டு வெட்டி எடுத்த கல் மற்றும் மணல் குவியல்கள் 1,50,00,000 யூனிட்டுகளாக குறைந்து செலவு மீதமானது! மொத்தம் 10,71,000/- ரூபாய்க்கு வேலை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தும், இதற்கான மொத்த செலவு ரூபாய் 4 லட்சத்திற்கும் குறைவானதாகவே ஆனது! இதில் வெட்டி எடுக்கப்பட்ட ஏராளமான கற்கள் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்பட்டன.
மேலும் ஆரம்ப காலத்தில் "கர்னல் எல்லீஸ்" வினாடிக்கு 1,20,080 கன அடி என்ற அளவில் உபரிநீர் வெளியேற்றத்துக்கு இந்த அமைப்பை வடிவமைத்திருந்தாலும், அதிகபட்ச அளவாக விநாடிக்கு 2,50,000 கன அடி வெளியேற்றுத்தைத் தாங்கும் அளவுக்கு இறுதி வடிவம் தரப்பட்டது. ஆனால், 1924-ல் ஏற்பட்ட வெள்ளம் இந்த மதிப்பீடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை தந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். காரணம், 1924-ல் , விநாடிக்கு 4,56,000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம் பதிவானதால், இந்த எல்லீஸ் மதகுகளின் அமைப்பை மேலே குறிப்பிட்ட படி மாற்றி 60 அடி அகலம் 20 அடி உயரம் என்ற கதவுகள் 16 எண்ணிக்கையில் இறுதி செய்யப்பட்டு கட்டப்பட்டது.
இந்த காவிரி - மேட்டூர் அணை திட்டத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்று கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும். ஆரம்ப கால திட்டத்திலிருந்து ஒவ்வொரு சமயத்திலும் கிடைக்கும் அனுபவங்கள் மற்றும் உண்மையான தரவுகளை வைத்து, வடிவமைப்பை தேவைக்கேற்றவாறு மாற்றி இந்த அணையை சிறப்பானதொரு திட்டமாக பொறியாளர்கள் வடிவமைத்திருக்கிறார்கள் என்பதே!

இந்த "எல்லீஸ் பாலம்" நேர்கோட்டில் வரும்படி கட்டி இருந்தால் 500 அடி நீளமாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக வளைவானதொரு அமைப்பைக் கொண்டு வடிவமைத்ததில் அதன் மொத்த நீளம் 800 அடியாக அமைந்தது. இதனால் ஆற்றில் உபரி நீர் வெளியேற போதுமான அளவு அதிகமாக நீளம் கிடைத்தது அதிகப்படியான ஒரு பயன்.
அணையின் தற்போதைய அதிகபட்ச உயரம் + 801 MSL. தேவைப்படின் இன்னும் 10 அடி உயரம் அணைச்சுவற்றின் உயரத்தை அதிகமாக எழுப்பலாம். அப்படி எழுப்பப்படும் சமயத்தில் உபரி நீர் வெளியேறும் எல்லீஸ் பாலத்தின் மேல் புற வளைவு சரியாக முழுகும் அளவு என்பதாக கணக்கிட்டு இந்த பாலத்தின் மீது சாலை போடப்பட்டது. இந்த பாலத்தை தாங்கும் தூண்கள், சாலையின் மீதுள்ள சுவர் போன்றவை கான்கிரீட் மூலம் போடப்பட்டுள்ளது. இதன் உறுதி தன்மைக்கு ஈடு இணை இல்லை என்றே கூற வேண்டும்!

இந்த சிறப்புமிக்க எல்லீஸ் பாலத்தை கட்டி முடிக்க இரண்டு கான்ட்ராக்டர்கள் வசம் வேலை பணிக்கப்பட்டது. சாம்பசிவம் பிள்ளை மற்றும் ராமசாமி கவுண்டர் என்பவர்களே அவர்கள்! சுர்க்கி கலவை வைத்து பூச்சு வேலையை இவர்கள் செய்ய, தேவையான சிமெண்ட் மற்றும் மணல் போன்ற பொருட்களின் சப்ளை இந்தத் திட்டத்தின் துறையின் மூலம் அளிக்கப்பட்டது. கான்கிரீட் வேலைகள் துறையின் மூலமாகவே செய்யப்பட்டது ஒரு சிறப்பு கவனம் பெறும் அம்சமாகும்.
1929-ம் வருடம், ஜூலை 15ஆம் தேதி அன்று இந்த பாலத்தின் வடக்கு புறத்தில் முதன்முதலாக வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நினைவுத்தூண் 1929-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி அப்போதைய மெட்ராஸ் கவர்னர் (பொறுப்பு) Sir.Norman Marjoribanks அவர்களால் நிறுவப்பட்டது.
இதன் ஒட்டுமொத்த வேலை 1931 ஜூன் மாதம் 20-ம் தேதி முடிவுற்றது. உபரி நீர் வெளியேறும் எல்லீஸ் பாலப்பகுதி கட்டி முடிக்க மொத்தம் இரண்டு வருடங்கள் ஆனது என்பதாகப் புரிந்து கொள்ளலாம்.
அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் இதுபோன்றதொரு வடிவமைப்பில் பாலம் (OPEN SPANDREL TYPE OF RIBBED ARCH BRIDGE) இதுவே முதலாவதாகும்! அதன் அழகைக் காண கண் கோடி வேண்டும். அருகில் நின்று பார்த்தாலும், தூரத்தில் நின்று ரசித்தாலும் இந்த பாலத்தின் வடிவமைப்பு பார்ப்பவர் கண்களை கவரும் வண்ணம் அமைந்திருக்கிறது. இன்றளவும் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுக்கும் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் மீது போடப்பட்ட சாலையின் அகலம் 18 அடி. 800 அடி ஆரத்தில் (Arch) சாலை மீது செல்லும்போது அணையில் தேக்கி வைக்கப்பட்ட நீரினைப் பார்த்துக் கொண்டே செல்லலாம் என்பது தனிச்சிறப்பு! கடல் போல் விரிந்த நீர்த்தேக்கத்தை காண கண்கள் இரண்டு காணா!
இந்த எல்லீஸ் பாலத்தின் மேற்குப் புறத்தில் அமைக்கப்பட்ட சாலையின் மேல் "டிராம்வே" ரயில் பாதையும் அமைக்கப்பட்டது. ஒரே சமயத்தில் சாலையில் வாகனங்களும், "டிராம்வே" ரயிலும் பயணிக்க இயலும்படி அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
மதகுகள், கதவுகள் மற்றும் தேவையான அனைத்து இயந்திர பாகங்கள் போன்றவைகளை நிர்மாணிக்க டெண்டர் கோரப்பட்டு M/s.GLENFIELD AND KENNADY என்ற இங்கிலாந்து நிறுவனம், இந்த வேலையில் மிகவும் அனுபவம் மிக்கவர்களாக இருந்ததால் அவர்கள் வசம் பணி செய்து முடிக்க ஒப்படைக்கப்பட்டது. மெட்ராஸ் பொதுப்பணித்துறை மற்றும் சுவிட்சர்லாந்து நிறுவனங்களும் டெண்டரில் போட்டியிட்டன.
கட்டி முடிக்கப்பட்டு 95 வருடங்களுக்கும் மேலாக ஆகியும், இந்த பாலத்தில் பயணிக்கும் போதும், பார்க்கும் போதும் அதன் அழகினை ஒட்டுமொத்தமாக கண்டு ரசிக்க முடியும். ஆனால் இவை கட்டப்படும் போது தீட்டிய திட்டங்கள், சவால்கள் ஒவ்வொரு சிறிய வேலைகளுக்கும் விஞ்ஞான அடிப்படையில் முடிவெடுத்து அவை திறன் வாய்ந்த, தகுதி வாய்ந்த நிபுணர்கள் வாயிலாக தேவையான மாற்றம் செய்து முடிக்கப்பட்டது என்ற இந்த விவரங்களின் பின்புலத்தோடு நோக்கும் போது இந்த அணையின் மதிப்பும் பெருமையும் பொறியாளர்களின் செயல் திறனும் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
பொறியாளர்களின் அசாத்திய செயல் திறனை இதன் மூலம் நன்கு உணர்ந்து கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து சில காலமாக இந்த பாலத்தின் மீது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அணையின் அழகை கண்டு ரசிக்க இந்த "எல்லீஸ் பாலத்துக்கு” அருகில் புதிய வேறொரு பாலம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு அதன் வழியாக பொதுமக்கள் சென்று வரவும், அணயை கண்டு ரசிக்கவும் முடியும்.
ஒரு முறை சென்று கண்டு ரசியுங்கள் நண்பர்களே!
காவிரி நன்னீர் சிறப்பு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


