எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை இவருடைய போராட்டத்தின் நோக்கம்.

புது டெல்லி ஜந்தர் மந்தரில் இவர் போராட்டம் தொடங்கி 19 நாள்கள் ஆகியும் இவரது போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

டெல்லி உயர் நீதிமன்றம்

பொதுநல வழக்கு

நாளுக்கு நாள் இவரது உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. இவர் 19 நாள்களில் கிட்டத்தட்ட 9 கிலோ எடை இழந்திருக்கிறார்.

மத்திய அரசு தனது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால், உண்ணமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் சோனம் வாங்சுக்.

இதனால், இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் கட்டாய உணவு அளித்து உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தனர்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு...

"அரசின் அறிவுறுத்தல்களின்படி, சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து அரசு மருத்துவர்கள் தினசரி அடிப்படையில் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்களின் ஆலோசனையைப் பொறுத்து, வாங்சுக்கின் மோசமடைந்து வரும் உடல்நிலையைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் எடுக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

எந்தவொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது. அதைக் காப்பாற்ற அரசு அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நாங்கள் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்.

சொலிசிட்டர் ஜெனரலின் இந்தத் தாராளமான நிலைப்பாட்டைப் பாராட்டும் அதே வேளையில், வாங்சுக்கின் மருத்துவ மற்றும் உடல்நிலையை தினசரி அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்குமாறு உத்தரவிடுகிறோம்"

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.