கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின்  மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான  மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி  பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே கவுண்டன் சாவடி அருகேயுள்ள புதுப்பதி கிராமத்தை  சேர்ந்த 75 வயதான முதியவர் நடராஜ், இன்று காலை 6 மணியளவில் காலை கடனை கழிக்க அருகில் உள்ள ஓடைப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒற்றை யானை நடராஜை துரத்தி வந்து தாக்கியதில் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவரின் அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து சத்தம் எழுப்பி யானையை விரட்டினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த வனப்பணியாளர்கள் உதவியுடன் நடராஜ் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் நடராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நடராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.