சென்னை அணியிலிருந்து ப்ளெம்மிங் விலக காரணமாக இருந்த அந்த 3 விஷயங்கள்! - விரிவான அலசல்
18 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணித்த பயிற்சியாளர் ப்ளெம்மிங் அவரது பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். இது ப்ளெம்மிங்காக எடுத்த முடிவல்ல. அணி நிர்வாகமும் ப்ளெம்மிங்கும் இணைந்து எடுத்த முடிவு. ஆக, அணி நிர்வாகம் ப்ளெம்மிங் சேவை போதுமென நினைத்துவிட்டது என்றே எடுத்துக் கொள்ள முடியும்.
18 ஆண்டுகளாக அணியோடு பயணித்தவரை வெளியேற்றும் முடிவை சென்னை அணி எதனால் எடுத்தது?
ஐ.பி.எல் இல் வேறெந்த அணியிலுமே ஒரு பயிற்சியாளர் இத்தனை ஆண்டுகளாக ஒரே பொறுப்பில் இருந்ததில்லை. ப்ளெம்மிங் இத்தனை ஆண்டு காலம் சென்னை அணியில் நீடித்ததற்கு காரணம் தோனிதான்.
தோனி டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு சென்னை அணிக்குள் வருகிறார். இந்திய கிரிக்கெட்டில் தோனி வைத்ததுத்தான் சட்டம் எனும் நிலையே இருந்தது. அந்த அளவுக்கு உச்ச புகழில் இருக்கும் ஒரு வீரரை ஒரு கேப்டனை வேலை வாங்கும் இடத்தில் ஒரு பக்குவமான ஆள் மட்டுமே இருக்க முடியும்.
அதாவது, தோனியின் முடிவுகள் எதிலும் மூக்கை நுழைக்காமல் தடை சொல்லாமல் அவருக்கு ஆமோதிப்பவராக இருந்தால் மட்டுமே அணி சூழல் நன்றாக இருக்கும். இந்த யோசனையில்தான் ப்ளெம்மிங்கை சென்னை அணி கோச் ஆக்கியது. அணி நிர்வாகம் எதிர்பார்த்ததை ப்ளெம்மிங் செய்தார். எப்போதும் தோனிக்கு குறுக்கே நிற்கமாட்டார். கோச்சான ப்ளெம்மிங்குக்கும் சூப்பர் பாஸ் தோனிதான்.
அதற்காக ப்ளெம்மிங் ஒன்றுமே செய்யவில்லை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற வீரர்களின் ஆட்ட அணுகுறையை ஒழுங்குப்படுத்துவது, அணிக்குள் ஒரு உற்சாக மனநிலையில் அவர்களை வைத்துக் கொள்வது, அணியை ஒரு குடும்பம் போல பாவிக்க வைத்தது போன்றவற்றில் ப்ளெம்மிங்கின் பங்கு அளப்பரியது.
தோனியோடு ஒத்துப்போய் இருவரும் ஒருவரை ஒருவரை Complement செய்து கொண்டதால்தான் சென்னை அணியால் 5 கோப்பைகளை வெல்ல முடிந்தது. எப்போது தோனி கேப்டன் பதவியிலிருந்து இறங்கினாரோ அப்போதே ப்ளெம்மிங்கின் கோச்சிங்கின் மீது எக்கச்சக்க கேள்விகள் எழத் தொடங்கிவிட்டது. தோனி கேப்டனாக இருக்கும் போது களத்தில் எல்லா வேலைகளையும் அவரே செய்துவிடுவார். ஆனால், தோனியின் இடத்தில் ருத்துராஜ் வரும் போது அங்கே அவருக்கு பயிற்சியாளரின் உதவி அதிகம் தேவைப்படுகிறது.

தோனியின் அணிக்கு பயிற்சியாளராக இருந்த சமயத்தை விட ருத்துராஜின் அணிக்கு பயிற்சியாளராக இருக்கையில் ப்ளெம்மிங் அதிகமான பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பவுண்டரிக்கு வெளியே இருந்து கேப்டன்சி செய்ய வேண்டியிருந்தது.
ஆனால், ப்ளெம்மிங்கின் அணுகுமுறையும் சிந்தனையும் பழமைவாய்ந்தது. நவீன டி20 க்களுக்கு ஏற்ற பரபரப்பான வியூகங்கள் அவரிடம் இல்லை. மேலும் டி20 க்களுக்கு ஒரு இளம் அணியை கட்டமைக்க வேண்டும் என்கிற புரிதலையும் அவர் தாமதமாகத்தான் கண்டடைந்தார். ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் இளம் வீரர்களை பயிற்சி கொடுத்து மெருகேற்றுவதற்காக அணியை நடத்தவில்லை எனுமளவுக்கு காட்டமாகவெல்லாம் பேசியிருந்தார்.
ப்ளெம்மிங்கை பொறுத்தவரை டி20 யை ஓடிஐயின் குறுகிய வடிவமாகவே பார்த்தார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள் பார்த்து ஆட வேண்டும். பின்னர் பவர்ப்ளேயில் அதிரடி. இடையில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப் பில்டிங். கடைசியில் மீண்டும் அதிரடி. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆடப்பட்ட இதே பாணியின் மீதுதான் ப்ளெம்மிங் இப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

அதனால்தான் ஹார்ட் ஹிட்டர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்காமல், ஒரு மாதிரியாக கலவையாக அணியை தேர்வு செய்து வைத்திருக்கிறார். பழைய சிந்தனையோடும் பழைய அணுகுமுறையோடும் சென்னை அணியால் மற்ற அணிகளோடு போட்டியே போட முடியவில்லை. விளைவு, தொடர்ந்து 3 சீசன்களாக சென்னை அணி ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப் பெறவில்லை.
தோனி கிட்டத்தட்ட ஓய்வை எட்டிவிட்டார். இனி, தோனிக்கு பிறகான ஒரு நவீன அணியை கட்டியமைக்க வேண்டும். அதற்கு ப்ளெம்மிங் சரியான ஆப்சனாக இருப்பாரா இல்லையா என்பதுதான் சென்னை அணியின் முன்பிருந்த கேள்வி.
கடந்த மூன்று ஆண்டு நிகழ்வுகளின்படி ப்ளெம்மிங்கை தாண்டி யோசிக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு சென்னை அணி நிர்வாகம் வந்திருக்கிறது. அதனால்தான் அந்த முடிவை மரியாதையான முறையில் ப்ளெம்மிங்கிடமும் தெரியப்படுத்தி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக வைத்திருக்கிறது.
டி20 யின் நவீன வடிவம் கேட்கும் அணுகுமுறையை நம்பி, இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மனப்பாங்கை கொண்டிருக்கும் ஒரு நபரைத்தான் சென்னை அணி பயிற்சியாளராக தேடக்கூடும்.
அது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

