Vishal: இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்... - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?
நடிகர் விஷால் தற்போது இயக்குநராக மகுடம் படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த மீட்டிங் பற்றியும், அங்கு சக நடிகர்களை அவர் சந்தித்தது பற்றியும், நடிகர் சங்கக் கட்டடம் திறப்பு பற்றியும் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "நடிகர் சங்க அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் எனது திரையுலகக் குடும்பத்தைச் சந்தித்தேன். எங்களது நீண்ட நாள் கனவான, அந்தப் பாரம்பர்யமிக்க தென்னிந்திய நடிகர் சங்க (SIAA) கட்டடத்தின் இறுதிக்கட்டப் பணிகளுக்காக ஒட்டுமொத்தக் குழுவும் முழு வீச்சில் தயாராக உள்ளது.
அவர்கள் அனைவரையும் சந்திக்கும் போதெல்லாம் எப்போதும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும்.
View this post on Instagram
பல கட்டப் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள், தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் பல தடைகளைக் கடந்து, நாம் நினைத்ததை நிஜமாக்கிக் காட்டுவதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.
ஆம், அந்தப் பெருமிதமான தருணத்தை நோக்கி நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அது மிகத் தொலைவில் இல்லை. இறைவனின் அருள் நிலைக்கட்டும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மாணவர்களிடையே விஷால் உரையாற்றினார். அப்போது அவர் கூடிய விரைவில் நடிகர் சங்கக் கட்டடம் திறக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


