`ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு! அன்பே சிவம்: நிகழும் உரையாடல்! | ஆதி தாமிரா | `சினிஸ்கோப் 06
சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் இல்லாதவர்கள் என்று இப்போதைய ஜென்-சி தலைமுறையை பற்றி நம்மில் சிலருக்கு ஒரு குறை இருக்கிறது அல்லவா, அது போன்ற ஒரு புதிய தலைமுறை இளைஞனாக, இந்த நூற்றாண்டின் தொடக்கக் காலகட்டத்தின் சாட்சியாக இருக்கிறான் அன்பரசு.
அகமாகவும், புறமாகவும் வாழ்க்கை தந்த அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு, தாண்டி வந்த முதிர்ச்சியடைந்த ஒரு நபராக இருக்கிறார் நல்லசிவம்.
காதல், மோதல், டூயட், வில்லன் என எல்லாமும் இந்தப் படத்தில் இருந்தாலும், அன்பே சிவம், இந்த இருவருக்குமான ஒரு பெரிய உரையாடலாகவே அமைந்திருந்தது.
எல்லாத் தலைமுறைகளுமே, அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளிடம் தங்களுடைய அனுபவம், முதிர்ச்சி, சமூகம் சார்ந்த அரசியல் விழிப்புணர்வு போன்றவற்றைப் பேச விரும்புகின்றன, கற்றுத்தர விரும்புகின்றன. அந்த வேட்கையின் வெளிப்பாடாகவே இந்தப் படம் இருந்தது எனலாம்.
கேளிக்கையைத் தாண்டி சினிமாக்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல், கருத்து சார்ந்த இப்படியான உரையாடலை ஏற்படுத்துவது. அதைத் தமிழில் செய்த மிகச்சில முக்கியமான படங்களுள் ஒன்று அன்பே சிவம் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது!
மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கிக் கிளம்பும் நல்லசிவத்துக்கும், அன்பரசுவுக்கும் கடும் மழை காரணமாக, விமானம் ரத்தானதால் பயணம் தடைபடுகிறது. இருவரும் தற்செயலாக விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள்.
நல்லசிவம் ஒரு தொழிற்சங்கவாதி. ஒரு கேஸ் விசயமாக கொல்கத்தா வந்தவர், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய நஷ்டஈட்டுக் காசோலையை எடுத்துக்கொண்டு சென்னைக்குப் பயணிக்கிறார்.
அன்பரசுவுவோ தன் கல்யாணத்துக்கே சரியான நேரத்தில் சென்னை சென்றுசேர முடியுமா எனுமளவுக்கு பெரிய நெருக்கடி. விடுதி அனுபவம், டாக்ஸி பயணம், உள்ளூர் பேருந்துப் பயணம் என்று இருவரும் நொந்து நூலாகி, வார்த்தைகளால் ஒருவரையொருவர் உரசிக்கொண்டபடி, இருவரும் ஒன்றாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக இருவரும் சென்னை செல்லக்கூடிய ஒரு ரயிலைப் பிடிக்க, ஒரு ஸ்டேஷனை வந்தடைகிறார்கள். அங்கே ரயிலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அன்பரசுவும், நல்லசிவமும் பேசிக் கொள்கிறார்கள்.
”பணம் கொடுத்தாக் கூட வசதி கிடைக்காத மோசமான நாடு இது” என்று சலித்துக் கொள்கிறான் அன்பரசு.
அதற்குப் பதிலாக,
”பணம் கொடுத்தா எது வேணா, எப்ப வேணா கிடைக்கும்னு நினைக்கிற உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரைக்கும் இந்த நாடு இப்படித்தான் இருக்கும்” என்கிறார் நல்லசிவம்.
அதில் காயம்பட்ட அன்பரசு, நல்லசிவத்தைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு உடைந்து போன சோவியத் யூனியனையும், கம்யூனிசத்தையும் கேலி செய்கிறான். பொதுவாக எதற்கும் கோபம் கொள்ளாத நல்லசிவம், இதற்கு சற்று எரிச்சலாகி,
“கம்யூனிசத்தைப் பற்றியெல்லாம் உங்ககிட்ட பேசக்கூடாது. முக்கியமா நீங்க அதைப் பத்திப் பேசக்கூடாது”
“ஏன், ஏன் அதைப் பத்தி நான் பேசக்கூடாது?”
“சொன்னாத் தாங்குவீங்களா? பிகாஸ்… யு ஆர் அ செல்ஃபிஷ் கூலி”
“எக்ஸ்க்யூஸ்மி”
”வெளிநாட்டுக் கம்பெனிகள் சம்பாதிக்கிறதுக்காக, டூத்பேஸ்ட், கூல்டிரிங், சோப்பு இதையெல்லாம் டிவியில கூவிக்கூவி விக்கிற கூலிதானே நீங்க?”
”அது என்னோட பிசினஸ்”
”ஆமா, பிசினஸ் பிசினஸ்னு இப்படி எல்லாத்தியும் வித்துட்டீங்கன்னா என்ன பண்றது? இப்பவே அவன் மஞ்சள், பாசுமதி எல்லாம் தன்னோடதுங்கிறான். அவன் காசு குடுக்கிறான்கிறதுக்காக நீங்க பாட்டுக்கு குனிஞ்சு குனிஞ்சு இப்படி சலாம் போட்டுக்கிட்டேயிருந்தா உங்களுக்கு இருக்கிறது முதுகுத்தண்டா, ரப்பர்துண்டான்னு சந்தேகம் வருதுல்ல”
இத்தனை மூர்க்கமான விமர்சனத்தை அதுவரை தன் வாழ்க்கையிலேயே சந்தித்திருக்காத அன்பரசு இதில் மிகவும் காயப்பட்டுப் போகிறான். அதை எப்படி எதிர்கொள்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை.
“ரொம்பப் பர்சனலா போறய்யா நீ. உன் மூஞ்சியையும் முகரக்கட்டையையும் வைச்சுக்கிட்டு, கை கால் வேற விளங்கல, உனக்கு பயங்கரமான திமிருதான்யா”
என்கிறான்.
அதற்கு சிவம் சிரித்தபடி,
“இது மட்டும் பர்சனல் இல்லையா?”
“ம்ம்… நீதானே பர்சனலா ஆரம்பிச்ச?”
“ஓகே, நாந்தான் ஆரமிச்சேன், நானே முடிக்கிறேன். ஒன்னு சொன்னா கோவிச்சுக்காம கேட்டுக்குறீங்களா? ஃபாரோஸ், பிரமிடு கட்டுனப்ப கல்லு சுமந்த அடிமைகளுக்குச் சமானம் நீங்கள்லாம்! மல்டிநேஷனல் கம்பெனிக்காரங்க தூக்கிப்போடுற எலும்புத்துண்ட…”
“பொறுக்கித் திங்கிற நாயிங்கன்றியா?” என்று ஆத்திரம் தாங்காமல் நல்லசிவத்தை முகத்திலேயே குத்திவிடுகிறான் அன்பரசு. நல்லசிவத்தின் மூக்கில் ரத்தம் தென்படுகிறது.
திணறியபடியே,
“…எலும்புத்துண்டுக்காக காத்திருக்கிற அடிமைகள்னு சொல்லவந்தேன்”

”ரெண்டும் ஒன்னுதான் மிஸ்டர் சிவம்!”
என்று பதறி, விடாமல் நம்மை விமர்சிக்கிறானே இந்த ஆள் என்ற கோபம் ஒருபுறம், அதற்காக நாம் இப்படி தாக்கிவிட்டோமே எனும் சுயகோபம் மறுபுறம் என குழம்பி நிற்கிறான் அன்பரசு.
இந்தக் காட்சியின் தொடர்ச்சியாக, அந்நேரத்தின் இளம் பார்வையாளர்களின் மனதில் என்னென்ன கேள்விகளெல்லாம் தோன்றியிருக்கும்?
கம்யூனிசம் (Communism) என்றால் என்ன?
ஜனநாயகம் (Democracy), குடியரசு (Republic), சர்வாதிகாரம் (Dictatorship) -இவற்றின் ஏற்றத்தாழ்வுகள் என்னென்ன?
ஏன் சோவியத் யூனியன் பிளவு பட்டது? அப்படியானால் கம்யூனிசத்திலும் சிக்கல்கள் உள்ளதா?
உலகமயமாக்கல் என்றால் என்ன? பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பின்னாலிருக்கும் பொருளாதாரம் எப்படிப்பட்டது? அவற்றுக்காக நாம் வேலை பார்ப்பது தவறானதா?
மஞ்சள், பாசுமதியின் ரைட்ஸ் எல்லாம் நம் விவசாயிகள் விளைவிக்க முடியாதபடி கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? அவற்றைப்போல இன்னும் எதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம்?
ஃபாரோஸ் என்பவன் யார்? எகிப்தின் பிரமிடுகள் எப்படிக் கட்டப்பட்டன? இப்படி இந்த ஒரு காட்சியே இப்படியான பல கேள்விகளை நமக்குள் ஏற்படுத்தியதென்றால், மொத்தப் படமும் ஏற்படுத்தியக் கேள்விகள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்!
இந்தப் பயணத்தின் முடிவில் அன்பரசு, இந்த வாழ்க்கையின் மீதான, சமூகத்தின் மீதான ஓர் அழகான புரிதலை, ஒரு நேசத்தை கண்டடைவான்.
அவனைப் போலவே நாமும்!
நல்லசிவமாக கமல்ஹாசன், முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தைச் செய்திருந்தார். நல்லா எனும் துடிப்பான கம்யூனிஸ்ட் போராட்டக்காரராக பிளாஷ்பேக்கில் வருகிறார்.
பாலாவுடன் காதலில் விழுந்து, இறுதியில் ஒரு மிக மோசமான பேருந்து விபத்தில் சிக்கி, நூலிழையில் உயிர்பிழைக்கிறார். மரணத்தை விளைவிக்கும் மோசமான காயம் என்றால் எப்படி இருக்கும் என்ற பதற்றத்தை விளைவித்தது மறக்கமுடியாத அந்தக்காட்சி.
பின்னர் அதன் பின்விளைவுகளாக முகத்தழும்பு, குட்டையான ஒரு கால், கண்பார்வைப் பாதிப்பு ஆகியன இருந்தாலும், கொள்கை விலகல் இல்லாமல் தொடர்ந்து ஒரு தொழிற்சங்கவாதியாகப் பயணிக்கும் வலுவான பாத்திரம் அது.

முன்பாகவே இந்தியன், அவ்வை சண்முகி போன்ற படங்களில் பிராஸ்தடிக் மேக்கப்பை அவர் சிறப்புற பயன்படுத்தியிருந்தாலும், இந்தப் படத்துக்கான மேக்கப் அவரை விபத்திலிருந்து மீண்ட ஒரு சிவமாக முற்றிலுமாக மாற்றியிருந்தது. மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், மகாநதி, இந்தியன், ஹேராம் போன்ற படங்கள் கமல்ஹாசனின் ஃபைனஸ்ட் நடிப்பு வெளிப்பட்ட படங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த வரிசையில் சேர வேண்டிய முக்கியமான படம் இந்த அன்பே சிவம்!
கமலுக்கு இணையான பங்களிப்பாக இருந்தது மாதவனுடையது. ’அன்பை எனக்குப் புடிக்காது, மை நேம் இஸ் அர்ஸ்’ என்ற பிடிவாதம், ’திருடனையெல்லாம் நான் இதுவரை பார்த்ததே இல்லை தெரியுமா?’ எனும் அப்பாவித்தனம், ‘ஐ நோ ஒலகம், ஐ நோ பீப்பிள்’ என்று கமலோடு மல்லுக்குப் போவது, இறுதியில் நடக்கும் நிகழ்வுகளால் மெல்ல மெல்ல ஏற்படும் அவரது மனமாற்றம் என அன்பரசுவாக ஒரு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாதவன்.

பாலசரஸ்வதியாக கிரண், கந்தசாமியாக நாஸர் மற்றும் சந்தானபாரதி, யூகிசேது, உமா ரியாஸ், இளவரசு என்று பலரும் நடித்திருந்தார்கள். ஒவ்வொரு சின்னச்சின்ன காரெக்டர்களுக்கும் மனதில் நிற்கும்படியான காட்சிகள் அமைந்திருந்தன.
பிளாஷ்பேக்கில், தொழிற்சங்கத் தோழர்களுள் ஒருவராக வருவார் உமா ரியாஸ். அவர் கமல்ஹாசனை ஒருதலையாகக் காதலிப்பதை நாம் மெலிதாக உணரமுடியும். கமல்ஹாசனும், கிரணும் சண்டையிட்டு, பின் சமாதானமாவதாக வரும் தியேட்டர் ஆபரேட்டர் ரூம் காட்சியில் அவர்கள் சமாதானமாவதில் மற்றவர்கள் எல்லோரும் மகிழ, உமா ரியாஸ் மட்டும் எதையோ இழந்தவர் போல நிற்பதைக் காணமுடியும்.
ஆனால், முதலில் தியேட்டரில் வெளியான வெர்ஷனில் அது சார்ந்த காட்சிகள் எதுவும் இருக்காது. நாம் நினைத்தைப் போலவே, கமலிடம், உமா தன் மனதைத் தெரிவித்துக் கண்கலங்கும் ஓர் அழகான காட்சி, விடுபட்டுப் போன காட்சியாக பின்னாளில் யூடியூபில் வெளியானது. இப்போதைய ஓடிடி வெர்ஷன்களில் இந்தக் காட்சி இடம்பெற்றிருக்கிறது.
‘ஆளை வைச்சி அடிச்சி, காரைக் கொண்டு இடிச்சி காதலைச் சொன்னாதான் உங்களுக்கெல்லாம் புரியமாய்யா? சொப்பு வாயை வைச்சிக்கிட்டு –நல்லா, நல்லா- என்று எனக்குக் கொஞ்சத் தெரியலையே’ என்று கலங்கி நிற்கும் இடம், உமா ரியாஸின் நடிப்பு ஒரு சோறு பதம்!
ஆர்தர்.ஏ.வில்சன், இந்தப் படத்தின் ஒளிப்பதிவைச் செய்திருந்தார். முன்னதாக பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் அவர் வேலை செய்திருந்தாலும், மிகுந்த அழகுணர்ச்சியோடு எடுக்கப்பட்டிருந்த அன்பே சிவம் அவரது கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
பெரும் ஆலமரங்கள் சூழ்ந்திருக்கும் ஓர் இடத்தில், கமல், சிறு கற்களை தன் முன்னால் தேங்கியிருக்கும் மழைநீரில் எறிந்தபடியே, மாதவனிடம் தன் கதையைச் சொல்லும் காட்சி, ஓர் ஓவியமாக இப்போதும் மனதில் நிற்கிறது. போலவே இறுதியில் வரும் பிரமிப்பூட்டிய ரயில் விபத்து படமாக்கப்பட்ட விதமும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
இசையமைப்பாளர் வித்யாசாகர். ஓவியக் கலைஞரான பாலா, தங்கள் அலுவலகத்துக்காக ஒரு சுவரோவியம் வரைய, நல்லாவை கமிட் செய்து அழைத்துப்போகிறார். அத்தனை ரசமான இடத்தில் வருகிறது, ‘பூ வாசம் புறப்படும் பெண்ணே, நான் பூ வரைந்தால்’ எனும் பாடல்.
வைரமுத்துவின் வரிகளைப் பாடியது விஜய் பிரகாஷ் மற்றும் சாதனா சர்கம். ‘இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும், அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும், அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா, மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா’ என்ற இதயத்தைத் தைக்கும் வரிகளோடு ஒலிக்கும் அன்பே சிவம் தீம் பாடலின் இசையும் குறிப்பிடத்தக்கது.

அன்பே சிவத்தின் படத்தொகுப்பாளர் சாய் சுரேஷ். லஷ்மி மூவி மேக்கர்ஸுக்காக படத்தைத் தயாரித்திருந்தது முரளிதரன், சாமிநாதன், வேணுகோபால் ஆகியோர்.
கதை, திரைக்கதையை எழுதியிருந்தது கமல்ஹாசன்.
வசனத்தை எழுதியிருந்தது ஓவியர் மதன். படத்திலும் மதன் ஒரு காட்சியில் கேமியோ ரோலில் வருகிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியான வசனங்கள் இந்தப் படத்தின் முக்கியமான பலமாக அமைந்திருந்தன.
இறுதியில், நல்லசிவத்தின் குணத்தை முழுதுமாகப் புரிந்துகொண்டு அவர்பால் ஈர்க்கப்படுகிறான் அன்பரசு. அவருக்கு யாருமில்லை என்பதைத் தெரிந்துகொண்டு அவரைத் தன் அண்ணனாக ஏற்க விரும்பி, உரிமையோடு தன்னோடு வந்துவிடும்படி அவரைக் கேட்கிறான். ’இந்த அன்பை ஏன் முன்னாடியே சொல்லவில்லை’ என்று நல்லசிவம் கேட்கும் போது, அன்பரசு சொல்கிறான்,
“இதென்ன காதலா, அசிங்கமா திரும்பத் திரும்பச் சொல்லிகிட்டிருக்கிறதுக்கு? யூ ஷுட் அண்டர்ஸ்டேண்ட் மேன்!”

படத்தை இயக்கியிருந்தவர் சுந்தர்.சி. முழுமையான கமர்ஷியல், காமெடிப் படங்களின் அடையாளமாக இருக்கும் சுந்தர்.சியிடமிருந்து இப்படி ஒரு படத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தப் படம் கமர்ஷியலாக போதுமான வரவேற்பைப் பெறவில்லை எனும் கோபத்தை அவர் பல இடங்களில் பதிவு செய்திருந்தாலும், அதற்கு முன்பும், பின்பும் இப்படியான அடையாளங்களைக் கூட அவர் படங்களில் நம்மால் பார்க்க முடிந்ததில்லை.
தன் பெண் கல்யாணத்தைக் காரணமாக வைத்து, தொழிலாளர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வாங்கி, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டானே எனும் நோக்கத்தில் நல்லசிவத்தைக் கொல்ல, தன் உதவியாளனை அனுப்புகிறார் கந்தசாமி. கடவுள் நம்பிக்கை கொண்ட அவன், தன் பிள்ளையை இழந்த வலியில், இதுவரை முதலாளிக்காகச் செய்த பாவங்களெல்லாம் போதும் என்று மனதை மாற்றிக்கொண்டு நல்லசிவத்தைக் கொல்லாமல் விடுகிறான். தப்பித்துப்போய்விடும்படி சொல்லிவிட்டு,
“உங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கு சாமி நம்பிக்கை இருக்கு தம்பி, இதுக்கு மேலயும் என்னால தப்பு பண்ணமுடியாது”
“எனக்கும் இருக்கு”
“எந்த சாமி?”
அவனை நோக்கியே கையை நீட்டுக்கிறார் நல்லசிவம்.
“நானா?”
“ஒருத்தனைக் கொல்ல வந்துட்டு, மனசை மாத்திகிட்டு, மன்னிப்பும் கேட்கிற மனசு இருக்கே, அதான் கடவுள்”
“மனசை மாத்திகிட்டேன், ஆனா சாமியெல்லாம் இல்ல தம்பி”
“அப்படியெல்லாம் நம்பிக்கையில்லாம நாத்திகம் பேசாதீங்க! ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு! நம்புங்க!”
என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார் நல்லசிவம்.
அதுவேதான் இந்தப் படம் சொல்லும் செய்தி! அதற்காகத்தான் இன்றும் இந்தப்படம் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
அதை நாமும் நம்புவோம்!
(தொடரும்)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

