சக பெண் ஊழியரை குத்திக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - குருகிராம் அதிர்ச்சி
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களாக 25 வயதான ஸ்ரேஷ்ட் மாலிக் மற்றும் இஷாரா அயூபி (இஷிகா என்றும் அழைக்கப்படுபவர்) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இஷாராவை அவரது குடும்பத்தினர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால், பதற்றமடைந்து போலீஸில் புகார் அளித்தனர்.
உடனே விரைந்து செயல்பட்ட போலீஸார் இஷாராவின் மொபைல் போன் இருப்பிடத்தை வைத்து தேடியபோது, அது செக்டார் 55 இல் உள்ள மாலிக்கின் தங்கும் விடுதி (PG) அறையைக் காட்டியது. அங்கு கதவை உடைத்துச் சென்றபோது, இஷாரா பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்தபோது எந்தவொரு அலறல் சத்தத்தையோ அல்லது அசாதாரண சத்தத்தையோ கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அறையெங்கும் சிதறிக் கிடந்த ரத்தக் கறைகள், அயூபிக்கும் தாக்குதல் நடத்தியவருக்கும் இடையே நடந்த கடுமையான உடல்ரீதியான போராட்டத்தை காட்டுகிறது. முன்னதாக அரசு ரயில்வே போலீஸார் (ஜிஆர்பி) டெல்லி கார்ஹி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு மனித சடலத்தை மீட்டனர்.
விசாரணையில், தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட மொபைல் போனை வைத்து, இறந்தவர் ஸ்ரேஷ்ட் மாலிக் என்பதை உறுதி செய்த போலீஸார், கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு சம்பவங்களையும் இணைத்து விசாரணையைத் தொடங்கினர். ஆயுபியைக் கொலைசெய்த பிறகு மாலிக் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இருவருமே வேலைக்காக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து குருகிராமிற்கு குடிபெயர்ந்தவர்கள். மாலிக் சத்தீஸ்கரின் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர், அயூபி உத்தரப்பிரதேசத்தின் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். சம்பவத்திற்கு மூன்று நாள்களுக்கு முன்புதான் அயூபி, மாலிக்கின் தங்கும் விடுதிக்கு குடிபெயர்ந்ததை போலீஸார் கண்டறிந்தனர். அவர்களுக்கு இடையேயான உறவின் தன்மை, கொலை செய்யப்படுவதற்கு முன்பு என்ன நடந்தது மற்றும் முந்தைய தகராறுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் இப்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

