புதுக்கோட்டை: `வராத குடிநீருக்கு வரி மல்லிகைப்பூ, அல்வா, காலிக்குடம்... திமுக கவுன்சிலர் போராட்டம்!
புதுக்கோட்டை மாநகராட்சியின் 42-வது வார்டுக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மக்களுக்குக் குடிநீரே வழங்காத நிலையில், வராத அந்த தண்ணீருக்கு மாநகராட்சி நிர்வாகம் வரி விதித்துள்ளதை கண்டித்து, அந்த வார்டின் திமுக மாமன்ற உறுப்பினர் கவிவேந்தன் ( ஜூலை-10) நடைபெற்ற மாமன்ற கூட்டத்திற்கு மல்லிகைப்பூ மாலை அணிவிக்கப்பட்ட காலிக்குடத்துடனும், மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாக அல்வாவுடனும் வருகை தந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் கவிவேந்தனை தொடர்பு கொண்டு பேசினோம்.
"மல்லிகைப் பூ அல்வா ஏன்?"
"எங்கள் வார்டில் உள்ள அசோக் நகர் பகுதியில் சுமார் 15 ஆண்டுகளாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது தொடர்பாக அம்ரூத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்தாலும், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் மெத்தன போக்கால் பணிகள் இன்னும் முழுமையடையாமல் ஆமை வேகத்தில் நகர்கின்றன.
இது ஒருபுறமிருக்க, வராத குடிநீருக்கு மக்களுக்கு வரி விதிப்பு வந்திருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராத நிலையில், மக்கள் வரியை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத்தான் இந்தப் போராட்டம்.
மாநகராட்சி நிர்வாகம் மக்களின் காதில் பூ சுற்றி தொடர்ந்து அல்வா கொடுப்பதை நிறுத்திவிட்டு, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே நேரத்தில் இந்த வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நூதனப் போராட்டத்தை முன்னெடுத்தேன்."
ஏமாற்றும் அதிகாரிகள்:
"குடிநீர் பிரச்னை தொடர்பாக நான் மேயரிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறேன். மேயர் அவர்களும் உடனே அதிகாரிகளை அழைத்து பணிகளை செய்யுமாறு உத்தரவிடுகிறார். இதற்காகப் பல கூட்டங்களையும் அவர் நடத்தியுள்ளார். ஆனால், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் சிலர் மேயரின் உத்தரவுகளைச் செயல்படுத்துவதில்லை; வேண்டும் என்றே பணிகளைத் தாமதப்படுத்தி மேயரையே ஏமாற்றி வருகிறார்கள். மேயர் ஒரு பெண்ணாக இருப்பதாலும், அவரது மென்மையான போக்கைப் பயன்படுத்திக் கொண்டும் அதிகாரிகள் அவரது கவனத்திற்கே விஷயங்களைக் கொண்டு செல்லாமல் மறைக்கிறார்கள்."
மாமன்ற கூட்டத்திற்கே வந்த எம்.எல்.ஏ:
"இந்த குடிநீர் தட்டுப்பாடு குறித்து தொகுதி எம்.எல்.ஏ-விடமும் நான் நேரில் கோரிக்கை மனு அளித்திருந்தேன். உடனடியாக அவரும் அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தார். அதுமட்டுமன்றி, வார்டில் ஏன் பணிகள் இவ்வளவு மெதுவாக நடக்கின்றன என்று கேள்வி எழுப்பி, பணிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவதற்காக எம்.எல்.ஏ-வே நேரடியாக ஒருமுறை மாமன்ற கூட்டத்திற்கே வந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்" என்றும் கவுன்சிலர் கவிவேந்தன் குறிப்பிட்டார்.

இந்த நூதன போராட்டத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து அவசர கூட்டம் நடத்தப்படும் என்றும், வார்டு பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் உறுதி அளித்துள்ளனர்.
மாநகராட்சி மேயர், தொகுதி எம்.எல்.ஏ மற்றும் போராட்டக் களத்தில் குதித்த மாமன்ற உறுப்பினர் என மூவருமே திமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், மக்கள் பிரச்னைக்காக திமுக உறுப்பினரே இந்த நூதன போராட்டத்தை நடத்தியது புதுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


