Train: ``விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்.! - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘Train’. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், ``இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சவால்களைத் தாண்டி ஒரு திரைப்படத்தை எடுத்து, அதைத் திரையரங்கு வரை கொண்டு வந்து சேர்ப்பதே ஒரு மிகப்பெரிய சாதனை, அதுவே ஒரு சூப்பர் ஹிட் வெற்றிக்குச் சமம்.

என்னுடைய எல்.ஐ.கே திரைப்படத்தில் மிஷ்கின் சார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர் இந்தப் படத்தில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.

Train டீசர் வெளியீடு

அன்பானவர்

அதன் பிறகு, ஒரு அவசர சூழலில் நள்ளிரவு 10 மணிக்கு அவருக்கு மெசேஜ் அனுப்பி, மறுநாள் படப்பிடிப்பிற்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துத் தரக் கேட்டேன். எவ்விதத் தயக்கமும் இன்றி, உடனடியாக வந்து நடித்துக் கொடுத்தார். எப்பொழுதெல்லாம் எனக்கு ஒரு வழிகாட்டியோ, மென்டரோ தேவையோ அப்போதெல்லாம் அவரது அலுவலகக் கதவுகள் எனக்காகத் திறந்திருக்கும்.

அந்த அளவிற்கு அன்பானவர் அவர்.

விஜய் சேதுபதி சார் இல்லை என்றால் நானும் ரௌடிதான் என்ற படம் சாத்தியமாகி இருக்காது, நான் யார் என்றே யாருக்கும் தெரிந்திருக்காது. போடா போடி தோல்வி அடைந்து நான் சோர்ந்து போயிருந்த காலத்தில், எனக்குப் போன் செய்து, நான் பீட்சா பட ஹீரோ பேசுறேன், உங்க அடுத்த படத்துல நான் தான் ஹீரோ என்று நம்பிக்கை கொடுத்தவர் அவர்.

கமர்ஷியல் படங்களைத் தாண்டி, புதிய சிந்தனைகளுடன் வரும் வித்தியாசமான கதைகளை இயக்குநர்கள் எடுப்பதற்கு விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களின் ஆதரவு மிகவும் முக்கியம். இன்று தமிழ் சினிமாவின் பல முக்கிய இயக்குநர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு விஜய் சேதுபதி சார் கொடுத்த ஆதரவே காரணம்." என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.