திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை!
வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை.
தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வழிபட்டனர். அப்படி வேள்விகள் செய்வதற்காகவே புகழ்பெற்ற ஊர் இஞ்சிமேடு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- சேத்துப்பட்டு மார்க்கத்தில் வருவது சின்ன கொழப்பலூர் கூட்டுச் சாலை. இங்கே இடதுபுறமாக பிரியும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு பயணித்தால் இஞ்சிமேடு தலத்தை அடையலாம்.
பாஹுநதி என்ற பெயரில் ஓடும் புண்ணிய நதி செய்யாறு. இது முருகப்பெருமான் கருணையால் உருவான நதி என்பர். இந்த நதிக் கரையில் அமைந்திருக்கிறது இஞ்சிமேடு.
இதற்கு அக்காலத்தில் யக்ஞவேதிகை என்கிற பெயர் உண்டு. பெருமாளே வேதியராக முன் நின்று முதல் யக்ஞத்தை நடத்திக்கொடுத்தார் என்பதால், இங்குள்ள பெருமாள் அருள்மிகு யக்ஞ நாராயணர் என்றே அழைக்கப்பட்டார்.
யக்ஞரட்சகனாக ஸ்ரீராமன் அருள் வழங்க, அவர் கரத்தில் உள்ள ஸ்ரீராம பாணத்தில் ஸ்ரீநரசிம்மம் எழுந்தருளும் அபூர்வ க்ஷேத்திரம் இது. மேலும் நரசிம்மர் இங்கே ஸ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மராக அருள்பாலிப்பதால், திருமணத் தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது இஞ்சிமேடு.
இந்தத் திருத்தலத்தில் பக்தவத்சலனாக, தீனதயாளனாக எழுந்தருளி அடியார்களின் குறைகள் அனைத்தையும் தீர்த்துவைத்து அனுக்கிரகம் செய்துகொண்டிருக்கிறார் வரதராஜப் பெருமாள்.
இந்தப் புண்ணிய பூமியின் பெருமையை உலகறியச் செய்ய திருவுளம் கொண்ட ஸ்ரீராமபிரான், சீதா லக்ஷ்மண சமேதராக இங்கு சேவை சாதிக்கிறார். இங்குள்ள ஸ்ரீராமனின் மூல விக்கிரகம் ஸ்ரீபரத்வாஜ முனிவரின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.
இங்கே, ஸ்ரீராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் ஆகும். ஸ்ரீராமபிரானின் திருச்சந்நிதியில், சிறிய திருவடியாம் அஞ்சனை மைந்தன் அஞ்சலி ஹஸ்தத்தில் ஸ்ரீராமனைத் தொழுதவாறு எழுந்தருளியுள்ளார்.

திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் ஸ்ரீபெருந்தேவித் தாயாா். திருமணத் தடை மற்றும் மகப்பேறு வேண்டும் அன்பா்கள் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து, பெருந்தேவித் தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.
தொடர்ந்து வீட்டில் தாயாரை நினைத்து மனமுருக வேண்டி, நாளுக்கு ஒன்று என மஞ்சளை எடுத்து பூஜையறையில் வைக்கிறார்கள். இந்த வழிபாடு ஆரம்பித்து எண்ணி 48 நாள்களுக்குள் நிச்சயமாக தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக சத்திய சாட்சியமும் கூறுகிறார்கள்.
வேண்டுதல் நிறைவேறியதும் மஞ்சளை மாலையாகத் தொடுத்து வந்து தாயாருக்கு மாலையாகச் சமா்ப்பிக்கின்றனா். இப்படி, தினம்தோறும் தாயாரின் சந்நிதியில் குவியும் மஞ்சள் மாலைகளே அன்னையின் கருணைத் திறனுக்குச் சாட்சி.
இஞ்சிமேடு, புராதன காலத்தில் ஸ்ரீநரசிங்கபுரம் என்றே பூஜிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இத்தலத்தில் ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மராக பேரழகுடனும் பெரும் ஆற்றலுடன் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் சந்நிதியில், தன் தந்தை இரண்யகசிபுவுக்கும் நற்கதி அளிக்கவேண்டும் என்று பிரகலாதன், பெருமாளைத் தொழுதவாறு எழுந்தருளியிருப்பது அற்புதமானத் திருக் காட்சி. ஸ்ரீநரசிம்மரின் திருவடியில் கருடன் எழுந்தருளி இருப்பதும் சிறப்பு.
ஸ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மருக்கு மாதம்தோறும் சுவாதி நட்சத்திர திருநாளன்று ‘சுவாதி மஹா ஹோமம்’ மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் கல்யாண நரசிம்மருக்குத் திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெறுகின்றன.
வெள்ளிக்கவசம் தரித்து, பூக்குவியல்கள் மத்தியில், சிறப்பு அலங்காரத்தில் கோடி சூா்யப் பிரகாசனாகக் காட்சி தரும் நரசிம்மப் பெருமானைக் காணக் கண்கோடி வேண்டும்.

வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வாருங்கள். காரியத் தடைகள் விலகி வாழ்வில் சுபங்கள் கைகூடும். மேலும் சுவாதி நட்சத்திர நாளில் இங்கே நடைபெறும் சுவாதி ஹோமத்தில் கலந்துகொள்ள சகல வரங்களும் கிடைக்கும் என்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான வழிபாட்டில் கலந்துகொண்டு சகல நன்மைகளும் பெறலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


