பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வாலிபர்; போலீஸிடம் சிக்கியது எப்படி?
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் கக்கோடு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் மகன் தனுஷ் (22). ஹோட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமாகப் படித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.
இவரது இன்ஸ்டா ஐடியில் இருந்து ஆபாச படம் ஒன்றைத் தவறுதலாக ஒரு நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளார். அந்த ஆபாசப் படத்தில் இருந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் இதுகுறித்து தனுஷிடம் கேட்டதுடன், அவரது செல்போனை வாங்கி பார்த்துள்ளனர்.
அதில் இரணியல் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து இன்ஸ்டாவில் இதற்காக உருவாக்கப்பட்ட சில குழுக்களில் பகிர்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சில விழாக்களின்போது செல்போனில் புகைப்படங்கள் எடுப்பதை வாடிக்கையாகக்கொண்ட தனுஷ், அந்தப் புகைப்படத்தில் உள்ள பெண்களின் முகத்தை மட்டும் வைத்து அதை ஏஐ செயலி மூலம் ஆபாசமாகச் சித்திரித்து போலியாக உருவாக்கப்பட்ட இன்ஸ்டா குழுக்களில் பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலின் உத்தரவின்படி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனுசைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை ஸ்கிரின்ஷாட் எடுத்து அதை ஏஐ மூலமாக மார்பிங் செய்து, போலி இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவேற்றம் செய்து பெண்களுக்குக் களங்கம் ஏற்படுத்தி உள்ளார்.
இவர்மூலம் பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இன்ஸ்டாவில் ஆபாசக் குழுக்களில் இயங்கி வந்துள்ளார் தனுஷ். அதில் உள்ளவர்கள் மார்பிங் செய்த பெண்களின் புகைப்படங்களை இவருக்கு அனுப்பி உள்ளனர். அதற்கு பதிலாக தனுஷ் பல பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் இருந்து மட்டும் அல்லாது பல விழாக்களின்போது தனுஷ் எடுத்த பெண்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்யத் தொடங்கிவிட்டார். அந்த இன்ஸ்டா குழு குறித்து விசாரித்தால், அதில் இயங்கும் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
