வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!
வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான Hon May Rut Ngoai தீவிலிருந்து புறப்பட்ட அந்தப் படகு, அன் தோய் சர்வதேச துறைமுகத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. துறைமுகத்திற்குச் சற்று தொலைவில், சுமார் 400 மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகப் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அந்தப் படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பிற படகுகளும், வியட்நாம் எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகில் சிக்கியிருந்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகப் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் படகின் உள்பகுதியில் மாட்டிக்கொண்டதால், அவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்து குறித்து வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``விபத்து குறித்த துல்லியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்காகத் தலைநகர் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரில் அவசரக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வியட்நாம் அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன."எனத் தெரிவித்திருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``வியட்நாமின் புக்குவக் தீவு அருகே இந்தியப் பிரஜைகள் பயணித்த படகு விபத்துக்குள்ளான சோகமான செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். இதில் தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நமது தூதரகமும், தூதரகக் கிளையும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. நமது அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``இந்தத் துயரமான சம்பவத்தைக் கேட்டு நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். தங்களின் அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் காணாமல் போனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல், மிகுந்த தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது குடும்பத்தினரின் வேதனையில் நானும் பங்கெடுக்கிறேன்.

தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகளில் சாத்தியமான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் இந்திய அரசும், வெளியுறவு அமைச்சகமும் வியட்நாம் அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வியட்நாமின் ஹா லாங் வளைகுடாவில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாக வொண்டர் சீ என்ற சுற்றுலாப் படகு கவிழ்ந்து 39 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், தற்போது புக்குவக் தீவில் நடந்துள்ள இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

