``வாடகை சக்திகளின் துணையில் ஆட்சி நடத்துகிறார் விஜய்! - அதிமுக எம்.பி இன்பதுரை காட்டம்

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதில் தவறு கிடையாது. சுமுகமான உறவுடன் செயல்பட்டு மக்களுக்குத் தேவையான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி தெரிவித்திருக்கிறார்.

நெல்லையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான ஐ.எஸ்.இன்பத்துரை செய்தியாளர்களிடம் பேசியபோது, ``அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பேசியிருக்கிறார். அவர் நினைத்தால் இப்போது கூட விவசாயியாக முடியும். ஆனால், அவர் விவசாயிகள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுகிறார். ஒட்டுமொத்த கடனையும் தள்ளுபடி செய்யாமல் நிபந்தனைகளை விதிக்கிறார்.

அதிமுக எம்.பி இன்பதுரை

ஆலங்குளம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மணிகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. `இந்த விபத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால்,அது மக்கள் பணம் அல்லவா? இந்தச் சம்பவத்தைத் தடுக்கத் தவறிய இந்த அரசு, மக்கள் பணத்தை வீணடிக்கும் வக்கில்லாத அரசாகச் செயல்படுகிறது. இந்த தீ விபத்துக்கு அரசே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் அணு உலைகள் அதிகமாகி வருகின்றன. ஆனால் அணு உலைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள 7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்தக் கட்டடங்களும் இருக்கக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், அப்பகுதியில் கல்குவாரிகள் செயல்பட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க அணு மின்நிலையத்திடம் தடையில்லாச் சான்று வாங்கப்பட்டுள்ளதா? அதை கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் 6 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. அதற்குக் காரணம் சட்டப் பேரவைத் தலைவரின் தவறான முடிவு. ஆறு தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த விதம் தவறானது. மீன்கடைப் பூனைகள், ஒரு கடையில் சாப்பிட்டு கொழுத்துவிட்டு, அந்தக்கடை மூடியதும் பக்கத்தில் திறக்கப்பட்ட புதிய கடைக்குச் சென்றுவிடும். அதுபோல சில எம்.எல்.ஏ-க்கள் செயல்பட்டுள்ளனர். அந்த மீன்கடைப் பூனைகளைப் பன்படுத்தி, சபாநாயகர் செயற்கையாகக் காலியிடங்களை உருவாக்கி விஜய் அரசு நீடிக்க உதவி செய்திருக்கிறார். நீதிமன்றமா, சட்டமன்றமா என்ற கேள்வி எழுந்தால், நீதித்துறைக்கே அதிக அதிகாரம் இருக்கிறது. சட்டமன்றத்தில் தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக சபாநாயகர், சட்டமன்றத்துக்குள் ஊஞ்சல் கட்டி ஆட முடியாது.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-கள் மீது கட்சித் தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போது, அதைப் புறக்கணித்துவிட்டு அவர்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். வரும் 13-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. நாங்கள் சபாநாயகர் மீது வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே எந்த சபாநாயகருக்கும் இதுபோன்று நோட்டீஸ் வழங்கப்பட்டதில்லை.

சபாநாயகர் ஆளும் கட்சிக்குத் துணை போவது போலவும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அருதிப் பெரும்பான்மை எண்ணிக்கை கிடைப்பதற்கு வசதி செய்து கொடுக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அதிமுக எம்.பி இன்பதுரை
அதிமுக எம்.பி இன்பதுரை

விஜய் சுயமாகப் பலம் பெற்று ஆட்சி நடத்த வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அவர் இரவல் சக்தி மற்றும் வாடகை சக்திகளை வைத்து ஆட்சி நடத்துகிறார். மக்கள் தங்களின் வாக்குகளை முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளிக்கவில்லை. அ.தி.மு.க வெறும் 45 லட்சம் வாக்குகள், தி.மு.க 10 அல்லது 15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே பின்தங்கியுள்ளது. அதனால் இந்த வெற்றி என்பது ஒரு தற்காலிக மாயை, இது நீண்ட காலம் நீடிக்காது. மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணிச் செயல்படுவதில் தவறில்லை. இணக்கமாகச் செயல்பட்டால் மக்களுக்கான பல நல்ல திட்டங்களைக் கொண்டு வர முடியும். அதே சமயம், தமிழ்நாட்டு மக்களின் கொள்கைகளை விட்டுக் கொடுத்து விடக் கூடாது" என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.