தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே
சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் பெயர் மீண்டும் ஒருமுறை உலகக் கால்பந்து வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
2026 FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு எதிராக இரண்டாவது பாதியில் கோல் அடித்து அசத்திய எம்பாப்பே, இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் 30 வயதுக்கு முன்பாக 20 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தடுமாறின. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் தொடர் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது.
கேப்டன் எம்பாப்பே அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இது இந்த உலகக் கோப்பையில் அவரது 8-வது கோலாகும். இதன்மூலம், கோல்டன் பூட் பந்தயத்தில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியுடன் சமநிலைக்கு வந்துள்ளார்.
மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். அவருக்கு முன்னாள் 21 கோல்களுடன் மெஸ்ஸி மட்டுமே இந்த பட்டியலில் உள்ளார். ஆனால், 27 வயதிலேயே எம்பாப்பே இந்த சாதனையை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இந்த வரலாற்றுச் சாதனை அவ்வளவு எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. போட்டியின் முதல் பாதியிலேயே பெனால்டி வாய்ப்பு மூலம் கோல் அடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை எம்பாப்பே பெற்றார். மொராக்கோ வீரர் நௌசைர் மஸ்ரௌயி செய்த ஃபவுலால் இந்த பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால், 12 யார்டில் இருந்து எம்பாப்பே அடித்த பலவீனமான ஷாட்டை, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பௌனௌ அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இந்த பெனால்டி முடிவும்கூட சற்று சர்ச்சைக்குள்ளானது. ரீப்ளேக்களில், மஸ்ரௌயி தொடுவதற்கு முன்பாகவே எம்பாப்பே கீழே விழுந்தது போலத் தெரிந்தது.

அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!
பெனால்டியை தவறவிட்டாலும், தன் மீதான அழுத்தத்தை உதறித்தள்ளி, இரண்டாவது பாதியில் கோல் அடித்து அணிக்கு உயிர் கொடுத்தார் எம்பாப்பே. அதோடு அவர் நிற்கவில்லை. போட்டியின் இரண்டாவது கோலுக்கு அவர்தான் அசிஸ்ட் செய்தார். அவர் கொடுத்த பாஸை, பலோன் டிஓர் வென்ற சக வீரர் உஸ்மான் டெம்பேலே கோலாக மாற்ற, பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பை அரையிறுதியிலும் இதே மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில்தான் பிரான்ஸ் வீழ்த்தியது. தற்போது இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. டல்லாஸில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியை பிரான்ஸ் எதிர்கொள்ளும்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது. நீண்டகாலப் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதால், கோப்பையுடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்க பிரான்ஸ் வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
2018-ல் சாம்பியன், 2022-ல் ரன்னர்-அப் என அசத்திவரும் பிரான்ஸ், இந்த முறையும் எளிதாக அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. காயமடைந்த இஸ்மாயில் சைபாரி இல்லாததால், மொராக்கோ அணியின் தாக்குதல் பலவீனமாக இருந்தது பிரான்ஸ் அணிக்குச் சாதகமாக அமைந்தது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


