கரூர்: விறுவிறுப்பான ஏற்பாடுகள், பலத்த பாதுகாப்பு; முதல்வர் விஜய்யின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்! | Live
3 பள்ளிகளுக்கு விடுமுறை
முதலமைச்சர் விஜய், இன்று கரூர் செல்லும் நிலையில் மக்கள் சந்திப்பு நடக்க இருக்கும் இடத்தின் அருகே உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கரூர் செல்லும் முதல்வர் விஜய்!
2025 செப்டம்பர் 27 அன்று கரூரில் தவெக தலைவராக விஜய் மேற்கொண்ட பிரசாரப் பயணத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 நபர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளையும் வழங்குகிறார் எனச் செய்தி வெளியானதிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் கரூர் செல்வது தொடர்பாக தி.மு.க கேள்வி எழுப்பியிருந்தது.
மேலும், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், `இப்போது செல்லும் முதல்வர், அப்போதைய த.வெ.க தலைவராக இருக்கும்போதே சென்றிருக்கலாம். அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் ஆறுதலாக இருந்திருக்கும் என விமர்சித்திருந்தார்.
த.வெ.க அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள், `முதல்வர் ஆறுதல் தெரிவிப்பதோ, கருணை அடிப்படையில் உதவி செய்வதோ சரிதான். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருத்து தெரிவித்திருந்தன.
இதேபோல நாம் தமிழர் கட்சியின் சீமான், `திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணியா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில்தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்குத் தனது முதலாவது அதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணத்தை மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடையும் முதல்வருக்கு, கார் மூலம் கரூர் மாவட்ட எல்லைகளான மாயனூர் மற்றும் புலியூர் வரும்போது தவெக மற்றும் கூட்டணிக் கட்சியினர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள் மற்றும் தொண்டர்களைச் சந்திக்கும் வகையில் திறந்த வாகனத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவர் பிரமாண்ட ரோடுஷோ செல்கிறார்.
தொடர்ந்து, கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தால் முழு வீச்சில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் பொதுக்கூட்ட விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் விஜய் அரசுத் திட்டங்களை அறிவித்து சிறப்புரையாற்றுகிறார்.

முதலமைச்சரின் இந்த அதிரடிப் பயணத்தையொட்டி கரூரில் வரலாறு காணாத ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மத்திய மண்டல ஐஜி மற்றும் கரூர் மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையில், வெளிமாவட்ட போலீசார் உட்பட மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் ரோடு ஷோ மற்றும் கார் செல்லும் வழித்தடங்கள் அனைத்தும் போலீசாரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

