Jana Nayagan : 24 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்துக்கு A சான்றிதழ்; ரிலீசுக்குத் தயாராகும் ஜனநாயகன்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் "ஜனநாயகன்". இப்படம் கடந்த ஜனவரி 9-ம் தேதியே வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. இதனால் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது.

விஜய் - பூஜா ஹெக்டே| ஜனநாயகன்

நடிகர் விஜய்யின் கடைசிப் படம் என அறிவிக்கப்பட்ட இப்படம், தேர்தலுக்கு முன்பாகவே சென்சார் சான்றிதழ் பெற்று வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை. இதற்கிடையில் தேர்தல் முடிந்து, அதில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்று திரையுலகமே எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று (ஜூலை 9) ஒருவழியாக இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தணிக்கை வாரியம் "ஜனநாயகன்" படத்திற்கு இறுதியாக "ஏ" (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 24 ஆண்டுகள் கழித்து விஜய் நடிப்பில் ஏ சான்றிதழ் பெறும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் (3 மணி நேரம் 3 நிமிடங்கள்) என்றும் கூறப்படுகிறது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்க இத்தனை காலம் தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், தற்போது எந்தெந்த காட்சிகளை நீக்கியுள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஜனநாயகன் | விஜய்
ஜனநாயகன் | விஜய்

விஜய்க்கு 18 வயதுக்குக் கீழான சிறுவர், சிறுமியர் மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த "ஏ" சான்றிதழ் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற கவலை எழுந்துள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி "ஏ" சான்றிதழ் பெற்ற "கூலி" திரைப்படம் வசூலில் பின்னடைவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 24-ம் தேதி படத்தை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.