விடைபெறுகிறார் ஈரான் உச்சத் தலைவர் காமேனி: இறுதி ஊர்வலத்தின் முக்கிய தருணங்களின் தொகுப்பு!

பிப்ரவரி 28, 2026...

ஈரான் உச்சத் தலைவரான அயோதுல்லா அலி காமேனியின் மூச்சை நிறுத்தியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குண்டுகள்.

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக, ஈரானுக்கு, ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கு தலைமை பொறுப்பில் இருந்து வழிநடத்தியவர் இவர்.

பிப்ரவரி 28 அன்றே அவர் இறந்திருந்தாலும், தொடர் மோதல்கள் மற்றும் தாக்குதல்களால் அவரது இறுதி ஊர்வலம் நடத்தப்படவில்லை.

காமேனியின் இறுதி ஊர்வலம்

ஈரான், அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, போர் ஓரளவு முடிந்த பின், காமேனியின் இறுதி ஊர்வலம் கடந்த ஜூலை 4-ம் தேதி முதல் இன்று (ஜூலை 9-ம் தேதி) வரை நடக்கிறது.

இதுவரை காமேனியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்...

> இந்த இறுதி ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி மக்களுக்கும் மேலாக கலந்துகொண்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

> காமேனியின் இறுதிச்சடங்கில் அவருடன் உயிரிழந்த அவரது குடும்பத்தினர் அனைவரின் உடல்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதில் காமேனியின் 14 மாதப் பேத்தியின் சவப்பெட்டி இடம்பெற்றிருந்தது அனைவரையும் உலுக்கியது.

> அயோதுல்லா அலி காமேனிக்குப் பிறகு, ஈரானின் உச்சத் தலைவராக அவரது மகன் மொஜ்தபா காமேனி பொறுப்பேற்றுள்ளார். ஆனால், இதுவரை அவர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. அவரது உயிருக்கு உள்ள ஆபத்தே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

> காமேனியின் இறுதிச்சடங்கில் ஈரானின் அரசியல் தலைவர்கள், ராணுவ தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரிய மரியாதை செலுத்தினர்.

> அதே போல, இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட மக்கள் பலர் அழுதனர். இதை பார்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "காமேனியை எல்லோரும் வெறுத்தனர் என்று நினைத்தேன். பலர் அவருக்காக அழுகிறார்கள். அது போலிக் கண்ணீராக இருக்கும்.

காமேனியின் இறுதி ஊர்வலம்
காமேனியின் இறுதி ஊர்வலம்

காமேனியின் இறுதி ஊர்வலத்தில் ஈரானின் அனைத்து முக்கிய தலைவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். அங்கே ஒரு குண்டு போட்டால், அனைவரும் அழிந்துவிடுவார்கள்" என்று கமென்ட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

> இந்த இறுதி ஊர்வலத்தில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்திய அரசு சார்பாக வெளியுறவுத் துறைக்கான மத்திய இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா, பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சையத் அட்டா ஹஸ்னைன் கலந்துகொண்டனர். சையத் அட்டா ஹஸ்னைன் இந்தியாவில் பொதுப் பதவியை வகிக்கும் மிக மூத்த ஷியா முஸ்லிம் ஆவார்.

> இத்துடன் இந்தியாவில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சல்மான் குர்ஷித், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

> இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளுக்கும் ஈரான் அரசு குரானில் இருந்து சில வாசகங்களைக் குறிப்பிட்டது. அதில் ஈரான் போரில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய நாடுகளுக்கு வாசிக்கப்பட்ட குரான் வாசகங்கள் இதோ...

பாகிஸ்தான்

மேலும் கூறுங்கள்: "என் இறைவனே! என்னை (எந்த ஒரு காரியத்திலும்) கண்ணியமான முறையில் நுழையச் செய்வாயாக; கண்ணியமான முறையில் வெளியேறவும் செய்வாயாக. மேலும், உன்னிடமிருந்து எனக்குத் துணையாக விளங்கக்கூடிய ஒரு வலிமைமிக்க அதிகாரத்தை வழங்குவாயாக."

சீனா

"உங்களுக்கு ஒரு நற்செய்தியாக இருக்கவும், உங்களது உள்ளங்கள் அமைதியடைவதற்காகவும் மட்டுமே அல்லாஹ் இந்த ஆதரவை வழங்கினான். ஏனெனில், வெற்றி என்பது மிக உன்னதமானவனும், ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர வேறெங்கிருந்தும் வருவதில்லை."

காமேனியின் இறுதி ஊர்வலம்
காமேனியின் இறுதி ஊர்வலம்

ஆப்கானிஸ்தான்

"நிச்சயமாக நாம் உமக்கு (நபியே!) ஒரு தெளிவான வெற்றியைத் தந்துள்ளோம். இதன் மூலம் அல்லாஹ் உமது முந்தைய மற்றும் பிந்தைய பிழைகளை மன்னித்து, தன் அருட்கொடையை உம்மீது முழுமையாக்கி, உம்மை நேரான பாதையில் செலுத்துவான். மேலும், அல்லாஹ் உமக்கு ஒரு வலிமைமிக்க வெற்றியைக் கொண்டு துணையிருப்பான்."

கத்தார்

``அல்லாஹ் உங்களது பாவங்களை மன்னிப்பதற்காகவும்... தன் அருட்கொடையை உங்களுக்கு முழுமையாக்குவதற்காகவும், உங்களை நேர்வழியில் நடத்துவதற்காகவும் (இதனைச் செய்தான்)."

லெபனான்

"தங்களை உயிர்த்தியாகம் செய்யுமாறோ அல்லது தங்களின் வீடுகளை விட்டு வெளியேறுமாறோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தால், அவர்களில் சிலரைத் தவிர வேறு யாரும் அதற்குக் கீழ்ப்படிந்திருக்க மாட்டார்கள். தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி அவர்கள் செய்திருந்தால், அது அவர்களுக்கு மிகவும் நன்மையாகவும், (அவர்களது நம்பிக்கையை) மேலும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்."

ஹிஸ்புல்லா

"எனவே நீங்கள் பலவீனமடையாதீர்கள், கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்களே உயர்ந்தவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு ஒரு காயம் (பாதிப்பு) ஏற்பட்டிருந்தால், அதேபோன்ற ஒரு காயம் அவர்களுக்கு முன்பே ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கு இடையே இத்தகைய (வெற்றி, தோல்வி) நாள்களை நாம் மாற்றி மாற்றி வரச்செய்கிறோம்.

காமேனியின் இறுதி ஊர்வலம்
காமேனியின் இறுதி ஊர்வலம்

இதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்கள் யார் என்பதை அல்லாஹ் அறிந்துகொள்வதற்கும், உங்களில் சிலரைத் தியாகிகளாக (ஷஹீத்களாக) ஏற்றுக்கொள்வதற்கும் செய்கிறான்—அல்லாஹ் அநீதி இழைப்பவர்களை நேசிப்பதில்லை. மேலும், இதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களைத் தூய்மைப்படுத்தவும், நிராகரிப்பவர்களை அழிக்கவும் செய்கிறான்."

ஹமாஸ்

"இறை நம்பிக்கையாளர்களில் அத்தகைய மனிதர்களும் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் செய்த சத்தியத்தை உண்மையாக நிறைவேற்றினார்கள். அவர்களில் சிலர் தங்களது உயிரைக் கொடுத்து தங்களின் வாக்கை நிறைவேற்றிவிட்டனர், மற்றவர்கள் தங்களின் முறைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது உறுதியைச் சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை."

சவூதி அரேபியா

"போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அந்த இரண்டு படைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருந்தது. ஒரு படை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது, மற்றொன்றோ (இறைவனை) நிராகரிக்கும் படையாக இருந்தது. நம்பிக்கை கொண்டவர்கள் தங்களது எதிரிகளைத் தங்களை விட இரு மடங்கு அதிகமாகத் தங்கள் கண்கூடாகப் பார்த்தார்கள். ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் வெற்றியைக் கொண்டு துணையிருக்கிறான். நிச்சயமாக, அகக்கண் உடையவர்களுக்கு இதில் ஒரு பெரும் பாடம் இருக்கிறது."

> இந்தியாவிற்கு ஈரான் கொடுத்த வசனம்:

அவர்களிடம் சிலர், உங்களுக்கு எதிராக ஒரு பெரிய படை திரண்டு வந்துள்ளது, எனவே அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறினர். ஆனால், அது அவர்களது இறை நம்பிக்கையை (ஈமானை) இன்னும் அதிகமாக்கியது. மேலும் அவர்கள், எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவன் சிறந்த முறையில் காரியங்களை முடித்து வைப்பவன் என்று கூறினர்.

> ஈரான் தங்களது பிராந்திய சக்தியைக் காட்ட, காமேனியின் ஊர்வலம் ஈராக்கிற்கும் சென்றது.

> காமேனியின் ஊர்வலத்தில் ட்ரம்பிற்கு எதிராக பல குரல்கள் வெளிப்பட்டன. அதன் உச்சமாக ட்ரம்ப் கொல்லப்பட வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. சில பதாகைகளும் ஏந்தப்பட்டன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.