போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான்.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த சில மாதங்களாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஷபூர் ஜத்ரான்

1987-ல் ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் பிறந்த ஷபூர், போர் காரணமாக அகதிகள் முகாமிலேயே வளர்ந்தார். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வத்தின் மூலம், 2004-ஆம் ஆண்டு முதன்முதலாக ஆப்கானிஸ்தான் அணிக்காக களமிறங்கினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சர்வதேச அரங்கில் தனது முதல் அடிகளை எடுத்து வைத்த காலகட்டத்திலேயே அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த இவர், தனது இடதுகை வேகப்பந்து வீச்சாலும், ஆக்ரோஷமான அணுகுமுறையாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 2009 முதல் 2020 வரை ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் மற்றும் 36 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2010 முதல் 2016 வரை நடைபெற்ற நான்கு இருபது ஓவர் உலகக் கோப்பை தொடர்களிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடி, 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் தனது இடத்தை உறுதிப்படுத்திய ஆரம்பகட்டப் பயணத்தில் அவரது பங்களிப்பு முக்கியமானது.

2015 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யப் போராடிக் கொண்டிருந்தது.

ஷபூர் ஜத்ரான்
ஷபூர் ஜத்ரான்

கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய ஷபூர், அழுத்தமான சூழலில் ஒரு பவுண்டரி அடித்து அணியை வரலாற்று வெற்றி பெற வைத்தார். அன்றிலிருந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக திகழ்ந்தார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த இவர், தனது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, ஜூலை 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், "ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் அடித்தளத்தை அமைத்த வீரர்களில் ஒருவராக ஷபூர் ஜத்ரான் என்றும் நினைவுகூரப்படுவார்" என்று புகழாரம் சூட்டியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.