கச்சா எண்ணெய்: 26 ஆண்டுகளில் இல்லாத விலை குறைப்பு; சவுதியின் இந்த முடிவு இந்தியாவுக்கு குட் நியூஸா?

சவுதி அரேபியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கு குட் நியூஸ்.

சவுதி அரேபியா தன்னுடைய சொந்த எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவில் (Saudi Aramco) இருந்து அரப் லைட் (Arab Light) எனும் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த எண்ணெயின் விலையை தான் ஆகஸ்ட் மாதம் பேரலுக்கு 11 டாலர் குறைக்க உள்ளது சவுதி அரேபியா. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சவுதி அரேபியா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது.

சவுதி அரேபியா

இந்த விலை மற்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பிடும் போது, பேரலுக்கு 1.50 டாலர் தள்ளுபடி ஆகும்.

எதிர்பார்த்ததை விட...

ப்ளூம்பெர்க் அறிக்கையில், சவுதி அரேபியா கச்சா எண்ணெயின் விலையைப் பேரலுக்கு 8 டாலர்கள் குறைக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை விட, தற்போது விலை குறைந்துள்ளது.

ஏன் இந்த விலை குறைப்பு?

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது ஒரு பேரல் பிரன்ட் (Brent) எண்ணெய் பேரலுக்கு 115 டாலரை தாண்டியெல்லாம் விற்பனை ஆனது.

ஆனால், இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 72 டாலராக குறைந்துள்ளது.

போரும் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளன. இதனால், போட்டிகளை சமாளிக்க சவுதி அரேபியா விலை குறைப்பை செய்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

சமீபத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இனிமேல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

நாம் இன்று பெட்ரோல் பங்குகளில் வாங்கும் எரிபொருளானது, கிட்டத்தட்ட 6 வாரங்கள் அல்லது 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பே சர்வதேச சந்தையிலிருந்து வாங்கப்பட்ட கச்சா எண்ணெயாகும்.

அன்றைய தேதியில் கச்சா எண்ணெயின் விலை, காப்பீட்டுத் தொகை, கப்பல் போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகமாக இருந்தன.

அதன் பிறகுதான் சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் கலால் வரி, மாநில அரசின் வாட் வரி மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவை இதில் சேர்க்கப்படுகின்றன.

எனவே, சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் சரிந்திருந்தாலும், இந்த மலிவான விலையிலான எண்ணெய் இந்தியாவிற்கு வந்து சேர இன்னும் சில வாரங்கள் ஆகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இதனால், இந்த எண்ணெய் விலை ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்த உடன், அந்த எண்ணெய் இந்தியாவில் இறக்குமதி ஆகி, அதன் விநியோகம் நாட்டிற்குள் தொடங்கும் போது, பெட்ரோல், டீசல் விலை குறையலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.