UP தேர்தல்: பங்கீட்டில் வெடித்த கலகம் — காங்கிரஸின் சம பங்கு வியூகமும் அகிலேஷின் சவாலும்!
இந்திய அரசியலின் இதயப் பகுதியாகக் கருதப்படும் உத்திரப் பிரதேசத்தில் , 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தல் வர இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையிலேயே, இந்தியா கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டுப் பஞ்சாயத்து இப்போதே வெடித்துள்ளது.
சம பங்கீடு வேண்டும்
சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநில காங்கிரஸின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர பால் கௌதம், "வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு இணையாக காங்கிரஸுக்கும் சம பங்கீடு (Equal Partnership) வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதுமட்டுமன்றி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியைப் பாராட்டியும் பேசியுள்ளார் அவர். இக்கோரிக்கை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
150 Vs 80: தொகுதிப் பங்கீட்டில் முட்டுக்கட்டை
உள்ளூர் அரசியல் வட்டாரங்கள் அளிக்கும் தகவலின்படி, உத்திரப் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி தங்களுக்குக் குறைந்தது 150 இடங்கள் வேண்டும் எனப் பிடிவாதமாக டிமாண்ட் செய்கிறது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ, "காங்கிரஸின் வளர்ச்சியை மதிக்கிறோம்; ஆயினும் 70 முதல் 80 இடங்களுக்கு மேல் ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது" என கையை விரித்துள்ளது.
இதன் காரணமாக, இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் பெரும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இவ்வளவு பிடிவாதமாக 150 இடங்களைக் கேட்பதற்குப் பின்னால் இரு முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
2017 தேர்தல் கூட்டணிக் கணக்கு: 2017ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு காங்கிரஸுக்கு 114 இடங்களை ஒதுக்கியது (அதில் சில இடங்களில் நட்பு ரீதியிலான போட்டிகளும் நிலவின). காங்கிரஸ் அதில் 105 இடங்களில் போட்டியிட்டது. "அன்றைய சூழலிலேயே நூறு இடங்களுக்கு மேல் தந்த நிலையில், இன்று காங்கிரஸின் பலம் கூடியிருக்கும்போது ஏன் இடங்களைக் குறைக்க வேண்டும்?" என்பது காங்கிரஸின் முதல் வாதம்.
2024 மக்களவைத் தேர்தலின் கம்பேக்: இதுவே காங்கிரஸின் பிரதான ஆயுதம். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. தான் போட்டியிட்ட 17 தொகுதிகளில் 6 இடங்களைக் கைப்பற்றி 35% ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவு செய்தது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் தீவிரப் பிரச்சாரத்தால் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியே, தற்போது 150 இடங்கள் வேண்டி ஒற்றைக்காலில் நிற்கக் காரணமாகும்.
கடந்த கால ஃப்ளாஷ்பேக்: ஏற்ற இறக்கங்களின் வரலாறு
இந்தக் கூட்டணியின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, கடந்த ஒரு தசாப்த கால உத்திரப் பிரதேச அரசியலை நாம் உற்றுநோக்க வேண்டும்.
2017 சட்டமன்றத் தேர்தல்: அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் கைகோர்த்து UP-யின் இரு சிறுவர்கள்என்ற முழக்கத்துடன் களம் கண்டனர். சமாஜ்வாதி 311 இடங்களிலும், காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், வீசிய பயங்கரமான பாஜக அலையில் இக்கூட்டணி அடித்துச் செல்லப்பட்டு, பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தோல்விக்குப் பின் இரு கட்சிகளும் பிரிந்தன.
2019 மக்களவைத் தேர்தல்: சமாஜ்வாதி கட்சி காங்கிரஸைத் தவிர்த்து, மாயாவதியின் பிஎஸ்பி (BSP) மற்றும் ஆர்எல்டி (RLD) கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. சமாஜ்வாதி கட்சியால் தனது செல்வாக்கை சற்று உயர்த்திக் கொள்ள முடிந்தது என்றாலும் பாஜகவின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை.
2022 சட்டமன்றத் தேர்தல்: இரு கட்சிகளும் தனித்தனியாகவே மோதிக்கொண்டன. இத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியடைந்தாலும், முந்தைய தேர்தலை விட 64 இடங்கள் கூடுதலாகப் பெற்று, மொத்தமாக 111 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் தனது வாக்குச் சதவீதத்தை 10% உயர்த்தி, 32% வாக்குகளைப் பெற்றது. ஆனால், காங்கிரஸின் நிலைமையோ கவலைக்கிடமானது; வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றதுடன், போட்டியிட்ட 387 காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களின் வைப்புத்தொகையை இழந்தனர்.
சுழலும் அரசியல் சக்கரம்: 2024 திருப்புமுனை
2022-ல் அடிவாங்கிய காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வழியாக மீண்டும் சமாஜ்வாதியுடன் கைகோர்த்தது. இந்த முறை இக்கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சமாஜ்வாதி கட்சி யாரும் எதிர்பாராத வண்ணம் 37 எம்.பி இடங்களை வென்று பாஜகவிற்கு அதிர்ச்சியளித்தது; காங்கிரஸ் 6 இடங்களை வென்றது. பாஜகவின் தொடர் வெற்றிக் குதிரைக்கு முட்டுக்கட்டை போட்ட பெருமை இக்கூட்டணியைச் சாரும். இந்த வெற்றிதான் காங்கிரஸின் நம்பிக்கையை தற்போது அதிகரித்துள்ளது.
ஆயினும், தற்போதைய கள யதார்த்தத்தின்படி உத்திரப் பிரதேசத்தில் பாஜகவிற்கான முதன்மை எதிர்க்கட்சி சமாஜ்வாதிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அங்கு அவர்களுக்குத்தான் பலமான உள்கட்டமைப்பும் தொண்டர் படையும் உள்ளது.

காங்கிரஸின் புதிய பிரஷர் ஸ்ட்ராடஜி
தற்போது காங்கிரஸ் புதியதொரு அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. புதிய காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம், மாயாவதியைப் பாராட்டிப் பேசியிருப்பது தற்செயலானது அல்ல. அது அகிலேஷ் யாதவிற்குத் தரப்படும் ஒரு மறைமுக எச்சரிக்கை.
"எங்களுக்குச் சரியான இடங்களை நீங்கள் ஒதுக்கவில்லை எனில், எங்களுக்கு பிஎஸ்பி போன்ற மாற்று ஆப்ஷன்களும் உண்டு. நாங்கள் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தால் நஷ்டம் உங்களுக்கே" என்ற ஒரு அழுத்தத் தந்திரத்தைக் காங்கிரஸ் கையாள்கிறது. தமிழ்நாட்டில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை முன்னிறுத்தி திமுகவிற்கு அழுத்தம் கொடுத்த அதே பார்முலா.
காங்கிரஸின் இந்த சம பங்கு கோரிக்கையை அகிலேஷ் யாதவ் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஏனெனில், சமாஜ்வாதி கட்சி அம்மாநிலத்தில் எப்போதும் பெரிய அண்ணன் பாத்திரத்திலேயே நீடிக்க விரும்புகிறது. காங்கிரஸின் இந்த அதீத பிடிவாதம் இந்தியா கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தினால், அது பாஜகவிற்கே சாதகமாக முடியும். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்தால் பாஜக எளிதில் ஆட்சியைத் தக்கவைக்கும்.
இருப்பினும், இவையனைத்தும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தந்திரங்களாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் 150 இடங்களைக் கேட்டு, பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் 100 இடங்கள் வரை வந்து ஒப்பந்தத்தை முடிக்க காங்கிரஸ் திட்டமிட்டிருக்கலாம். வரும் மாதங்களில் அரங்கேறவிருக்கும் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைதான் உத்திரப் பிரதேச அரசியலின் திசையைத் தீர்மானிக்கப் போகிறது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


