ஏவுகணைகளை தாருங்கள்; கிடங்குகளில் இருப்பதால் பயன் இல்லை - உலக நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி கோரிக்கை
ரஷ்யா, உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இன்று (ஜூலை 6, 2026) காலை ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி, அந்தத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது...
"ரஷ்யா மீண்டும் ஒரு மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக உளவுத்துறைத் தகவல்கள் எச்சரிக்கின்றன.
அமெரிக்காவின் சுதந்திர தினம் முடிந்த உடனேயும், அங்காராவில் நடக்கவிருக்கும் நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்பாகவும் இதைச் செய்வது புதினின் வழக்கமான பாணிதான்.
ரஷ்யா மேலும் பல அழிவுகளைக் கொண்டு வரவும், அப்பாவி மக்களைக் கொல்லவும் துடிக்கிறது. தயவுசெய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் வந்தால் உடனே உஷாராகிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக, எங்களது நட்பு நாடுகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்: வான் பாதுகாப்புக்கான ஏவுகணைகளை - குறிப்பாகப் பேட்ரியாட் (Patriot) அமைப்புகளுக்கான ஏவுகணைகளை - எங்களுக்கு வழங்குவதில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும், பல உயிர்களின் இழப்பிற்கு வழிவகுக்கிறது.
அதோடு, போரைத் தொடர்ந்து நடத்த ரஷ்யாவிற்கு அது ஊக்கமளிக்கிறது. உலக நாடுகளிடம் வான் பாதுகாப்பிற்குத் தேவையான தரமான ஆயுதங்கள் போதுமான அளவில் இருக்கின்றன.
இப்போது தேவைப்படுவதெல்லாம் உக்ரைன் மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நீங்கள் எடுக்க வேண்டிய உறுதியான முடிவுகள் மட்டும்தான்.
குறிப்பாக, இவை அமெரிக்கா, ஐரோப்பாவின் வல்லரசு நாடுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள வலிமையான நாடுகள் எடுக்க வேண்டிய முடிவுகள் ஆகும்.

தயவுசெய்து உங்கள் முடிவுகளில் வேகம் காட்டி, மனித உயிர்களைக் காப்பாற்றுங்கள். பேட்ரியாட் ஏவுகணைகள் இப்போது உங்களது கிடங்குகளில் முடங்கிக் கிடப்பதில் எந்தப் பயனும் இல்லை. அவை இப்போது உக்ரைனில் உள்ள பேட்ரியாட் படைப்பிரிவுகளின் கைகளில் இருக்க வேண்டும்.
எங்களுக்கு உண்மையாகவே உதவி செய்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்."
ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணம், கடந்த மாதம் உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா - உக்ரைன் போர் நிலைமை இப்படி இருக்க, கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் போன்காலில் 90 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர்.
அது குறித்து அமெரிக்காவின் முன்னாள் ரஷ்ய தூதுவர் யூரி உஷாகோவ், "உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், இந்த நெருக்கடிக்கு அமைதியான தீர்வுகளைக் காண்பதற்கும் தான் தயாராக இருப்பதை அமெரிக்க அதிபர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அவருடைய சிறப்புப் பிரதிநிதிகளான டிக் விட்கோவ் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் தொடர்ந்து இதற்கான சமரச முயற்சிகளை மேற்கொள்வார்கள்... தங்களுக்கு ஏதுவான ஒரு நேரத்தில் அவர்கள் மாஸ்கோவிற்குப் பயணம் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
ரஷ்ய தரப்பிலிருந்து, தங்களின் அடிப்படை நிலைப்பாடுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே இதற்கு அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வு சாத்தியம் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
உக்ரைனும் அதன் ஐரோப்பிய ஆதரவு நாடுகளும் இந்தப் போரை மேலும் நீட்டிக்க அல்லது தீவிரப்படுத்தவே விரும்புகின்றன. போர்க்களத்தின் உண்மையான நிலவரத்தை ஐரோப்பா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
போர்க்களத்தின் தற்போதைய நிலவரத்தை விவரித்த அதிபர் புதின், ரஷ்யப் படைகள் மிகவும் நம்பிக்கையுடன் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார்" என்று கூறியிருக்கிறார்.
ட்ரம்ப் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறார். ஆனால், ரஷ்யாவும், உக்ரைனும் அதற்கு தயாராக இல்லை போலும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


