Lamborghini ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்; சாவியைக் கொடுத்தனுப்பி, ஆட்டோ ஓட்டிய தொழிலதிபர் | Viral
பெங்களூருவில், போக்குவரத்து சிக்னலில் நடந்த ஒரு சாதாரண உரையாடல், மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது. தனது லம்போர்கினி காரை ஓட்ட ஆசைப்பட்ட ஆட்டோ ஓட்டுநரிடம், காரின் சாவியைக் கொடுத்துவிட்டு, அந்த ஆட்டோவை தொழிலதிபர் ஒருவர் ஓட்டிச் சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
ராகேஷ் கே.என்.வி என்ற அந்த தொழிலதிபர் பகிர்ந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி, அவரது பெருந்தன்மைக்கும், நம்பிக்கைக்கும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
லம்போர்கினி காரில் ராகேஷ் பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓர் ஆட்டோ ஓட்டுநர் அவருக்கு அருகில் வந்துள்ளார்.
ராகேஷை அவரது ஆன்லைன் வீடியோக்கள் மூலம் அடையாளம் கண்டுகொண்ட அந்த ஓட்டுநர், அவரின் நீண்டகால ரசிகர் என்றும், அவரது காரை மிகவும் ரசிப்பதாகவும் உற்சாகத்துடன் கூறியுள்ளார். மேலும், அந்த சொகுசு காரை ஒருமுறையாவது ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் ஆசையைக் கேட்ட ராகேஷ், அவரைப் பாராட்டிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கலாம். ஆனால், அதற்கு பதிலாக அந்த ஓட்டுநரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் ஒரு செயலைச் செய்தார்.
சாலையோரமாக வாகனத்தை நிறுத்தும்படி கூறி, தனது விலை உயர்ந்த லம்போர்கினி காரின் சாவியை அவரிடம் கொடுத்தார். இருவரும் தங்களது வாகனங்களை மாற்றிக்கொண்டனர். ஆட்டோ ஓட்டுநர் மிகுந்த கவனத்துடன் லம்போர்கினியின் ஓட்டுநர் இருக்கையில் அமர, ராகேஷ் புன்னகையுடன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தார்.
தொடர்ந்து, இருவரும் தத்தமது புதிய வாகனங்களில் அருகருகே பயணிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. ஆட்டோ ஓட்டுநருக்கு இது வாழ்நாள் கனவு நனவான தருணமாக இருந்தது. அதே சமயம், ராகேஷுக்கு அந்த ஆட்டோ பயணம் தனது கடந்த கால எளிய வாழ்க்கையை நினைவுபடுத்தியது. இந்த வீடியோவைப் பகிர்ந்த ராகேஷ், ஆட்டோவில் பயணித்தது தனது போராட்டக் காலங்களை நினைவுபடுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
"இந்த மறக்க முடியாத தருணத்திற்காக எனது லம்போர்கினியை பணயம் வைத்தேன்! அவரது ஆட்டோவை ஓட்டியது என்னை மிகவும் பாதித்தது. ஆட்டோ கட்டணம் கொடுப்பதே கடினமாக இருந்த என் போராட்ட நாள்களுக்கு அது என்னை நேராக அழைத்துச் சென்றது" என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நெகிழ்ச்சியான செயல் சமூக ஊடகப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் ராகேஷின் செயலைப் பாராட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


