தலைமைச் செயலகம் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது - வானதி சீனிவாசன் காட்டம்
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்.
தவெக அரசு குறித்து வானதி சீனிவாசன், "இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், பிற கட்சிகளில் உள்ள நபர்களை எவ்வாறு ராஜினாமா செய்ய வைப்பது என்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தூய்மையான ஆட்சியைத் தருவதாகக் கூறிவிட்டு, மறைமுக பேரம் மற்றும் அழுத்தங்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் செய்து, பெரும்பான்மை பெறுவதற்காக இந்த அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தி வருகிறது.
மக்களின் தீர்ப்பை ஏற்று கூட்டணியுடன் ஆட்சி நடத்தினாலும், குறுக்கு வழியில் பெரும்பான்மை பெறுவதற்காகப் பண மற்றும் அதிகார பேரங்களில் இக்கட்சி ஈடுபடுகிறது.
இவர்களின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பிற்கும் ஜனநாயகத்திற்கும் உரிய மரியாதை அளிக்கிறதா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளன.
அதுமட்டுமின்றி, தலைமைச் செயலகம் அரசுப் பணிக்கான இடமாக இல்லாமல் கட்சி அலுவலகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சரின் தந்தை ஆய்வு செய்வதும், கட்சி நிர்வாகிகள் புதிய பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைப்பதும், மாநகராட்சி கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாத நபர்கள் தலையிடுவதும் தொடர்கிறது.
அரசு விவகாரங்களில் தகுதியற்ற நபர்கள் தலையிடுவதை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் இரட்டைக் கொலைகளும் அதிகரித்து வருகின்றன.
கடந்த இரண்டு மாத கால ஆட்சியில் ஆட்சியாளர்களின் முகம் மாறியுள்ளதே தவிர, பெண்களுக்குப் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

காவல்துறை சீருடை மாற்றத்தைத் தவிர வேறொரு மாற்றமும் நடக்கவில்லை; குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை என்பதுதான் தினசரி செய்திகள் மூலம் தெரிகிறது.
காவிரி அணை விவகாரத்தில், மத்திய அரசு தமிழகத்தின் அனுமதி இன்றி எதையும் செய்யக்கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளது. எனவே, கூட்டணியில் உள்ள அண்டை மாநில முதலமைச்சருடன் பேசி தமிழகத்தின் நீதியையும் உரிமையையும் நிலைநாட்ட வேண்டியது மாநில முதலமைச்சரின் பொறுப்பாகும்" என்று பேசியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

