ஜாமீன் வேண்டாம்; நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்- போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி என்ன?
சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம் ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட மேட்டூர் மகளிர் காவல்துறையினர், கார்த்திக் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தனக்கும் இந்தப் புகாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென காவல்துறையினரிடம் திட்டவட்டமாகக் கூறி மறுத்து வந்திருக்கிறார் கார்த்திக்.
ஆனால், ஏற்க மறுத்த காவல்துறையினர், கார்த்திகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஜாமீனில் வெளியே வர விரும்பாத இளைஞர் கார்த்திக், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், கார்த்திக்கால் கர்ப்பமானதாகச் சொல்லப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவருக்கு பிறந்த குழந்தை, குற்றம்சாட்டப்பட்ட கார்த்திக் ஆகிய மூன்று பேரிடமும் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்கும் கார்த்திக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வு முடிவுகளில் நிரூபணமாகியிருக்கிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் கார்த்திகை குற்றமற்றவர் என விடுதலை செய்திருக்கிறது.
இது குறித்து தெரிவித்த இளைஞர் கார்த்திக், "இந்தக் குற்றத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லையென எவ்வளவோ சொன்னேன். ஆனால், காவல்துறையினர் கொஞ்சம் கூட கேட்கவில்லை. ஜாமீனில் வெளியே போனால் களங்கம் தீராது என்பதற்காகவே இரண்டு ஆண்டுகளாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தேன். கடையில் நீதி வென்றிருக்கிறது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

