`கடும் வேதனையளிக்கிறது; விசாரணையை நம்புகிறோம்! - அயோத்தி ராமர் கோயில் நன்கொடை கையாடல் குறித்து RSS

அயோத்தி ராமர் கோயிலில் நடந்துள்ள நன்கொடை கையாடல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கும் இந்தக் கோயிலில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு தற்போது தனது முதல் அதிகாரப்பூர்வ எதிர்வினையை ஆற்றியுள்ளது.

"கடும் வேதனையளிக்கிறது!"

இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே வெளியிட்டுள்ள அறிக்கையில், "அயோத்தி ராமர் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பணம் திருடப்பட்டிருக்கும் இந்த துரதிஷ்டவசமான சம்பவம், ஒட்டுமொத்த சமுதாயத்தின் மற்றும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்களின் உணர்வுகளையும் நம்பிக்கையையும் ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தால் நாம் அனைவரும் மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

மேலும் அவர், ``ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வேண்டுகோளின் பேரில், உத்தரப்பிரதேச அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்-ன் எதிர்பார்ப்பு என்ன?

அறக்கட்டளையின் நிர்வாகக் குளறுபடிகள் குறித்துப் பேசிய ஹோசபாலே, "இந்தக் கண்டனத்திற்குரிய சம்பவத்தை ஓர் அசாதாரணமான விஷயமாகக் கருதி, கோயில் நிர்வாகத்திலும் மேலாண்மையிலும் உள்ள அனைத்துக் குறைபாடுகளையும் களைய ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உரிய, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை தொடரும். தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்

"சதித் திட்டம்... பொறுமை அவசியம்!"

இதேவேளையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் மற்றும் மதரீதியான விமர்சனங்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய தத்தாத்ரேயா ஹோசபாலே, "இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தைப் பயன்படுத்தி, இந்து தர்மத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த இந்து எதிர்ப்பு மற்றும் தேச விரோத சக்திகள் முயன்று வருகின்றன. இந்தச் சதித் திட்டங்களை முறியடிக்க, இந்த இக்கட்டான தருணத்தில் ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் தேவையான பொறுமையையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

உண்டியல் பணம் கையாடல் விவகாரத்தில் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகி சம்பத் ராய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த அறிக்கை அயோத்தி விவகாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.