பஞ்சதந்திரம்: கதையை விடுங்க பாஸ், கிரேஸியின் ஆட்டம் இருக்கே... ஸ்ட்ரெஸ் பஸ்டர்! | `சினிஸ்கோப் 03

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினிஸ்கோப் தொடர்!

பஞ்சதந்திரம் என்றதுமே நம் நினைவுக்கு வரக்கூடிய காட்சிகள் பல. மதுவை அருந்திவிட்டு, ’மைதிலியை டைவர்ஸ் பண்ணிட்டு இன்னொரு வாட்டி மைதிலியை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணும்?’ என்று கேட்கும் ராம் மற்றும் நண்பர்களின் ரவுண்ட் டேபிள் விவாதம், ’முன்னாடி இருந்துச்சு அது பின்னாடி இல்ல’ என்று போலீசுடன் வாதாடும் கார் பயணம், நாகேஷின் ’ர்ர்ர்றேம், இன்ஸ்பெக்டரண்ணாவுக்கும் ஒரு ஐஸ்கோல்டு காஃபி ஊத்திக்கொடு’ எனும் சிபாரிசு, ஜெயராமின் ’பையனுக்கு ஹார்ட்ல ஓட்டா’ அட்டகாசங்கள், யூகிசேதுவின், ‘செல்போன் எங்கிட்டதான் இருக்கு, ஆனா அதுல வைரம்லாம் இல்லை’ எனும் உளறல்கள், மேகியின் ஆள்மாறாட்டம் என பல காட்சிகள் குறிப்பிடத்தக்கவை.

அதையெல்லாம் விட்டுவிட்டு கண்ணை மூடிக்கொண்டு ஒரு காட்சியை எடுத்துக்கொண்டால், கனடாவில் தொடங்கும் படத்தின் ஆரம்ப ஜோரெல்லாம் முடிந்தபின் வரும் முதல் காட்சியையேக்கூட எடுத்துக்கொள்வோம். அது ராம், மைதிலியின் (கமல், சிம்ரன்) கல்யாண ரிசப்ஷன்.

Panchathanthiram

கமல்: இவனுங்கதான் கல்யாணமானவனுக, நீ ஏண்டா பொண்டாட்டி பாட்டு பாடுற? கல்யாணம் ஆகாத கழுத…

ரமேஷ்: வீட்ல போர்ஸ் பண்ணாங்க, அத்தை பொண்ணைக் கட்டிகிட்டேன்.

கமல்: அப்ப நிர்மலாவுடைய கதி?

ஜெயராம்: அவளை விடு, உன் சம்ஷு கதி?

கமல்: இப்ப அவளை ஏண்டா இழுக்குற?

யூகி: நாங்க எங்க இழுத்தோம், அங்க பாரு அவளே வந்துகிட்டிருக்கா.

(சில நிமிடங்களில்)

கமல்: லுக் சம்ஷு, ஐ லவ் மைதிலி.

சம்ஷு: ஐ லவ் யூ. சரி உன்னை தொந்தரவு பண்ணாம போயிடுறேன். கடைசியா ஒரே ஒரு கிஸ் கொடு.

கமல்: பொது இடத்துலயா?

சம்ஷு: பொது இடத்துல இல்ல, என் கன்னத்துல.

(கோட்டை வைத்து மூடியபடி ராம் தரும் அந்த முத்தத்தை, முகத்தைத் திருப்பி உதட்டில் வாங்கிக்கொண்டு)

சம்ஷு: நைஸ் மசாலா! யாரு சமையல்?

(சற்று முன்னர்தான் சிம்ரன், கமலுக்கு நூடுல்ஸ் ஊட்டிவிட்டிருப்பார். அந்தக் காரம் கமலின் உதட்டில் இருந்திருக்கலாம்)

சிம்ரன்: ஹாங், நாந்தான்!

இந்தக் காட்சி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஆனால், படம் முழுக்க நமக்காகக் காத்திருப்பது நம்மைப் பதம் பார்க்கும் ஒரு பானை சோறு!

ராம் எனும் பைலட், மைதிலியைக் காதலித்துக் கரம் பிடிக்கிறான். ஒரு கட்டத்தில் சந்தேகத்தால் பிரிந்து சென்ற மைதிலியை மீண்டும் சேர வழி தேடிக் கொண்டிருக்கிறான். அவனது நான்கு நண்பர்கள் ஹனுமந்த், வேதாந்தம், ஐயப்பன் மற்றும் கணேஷ். நால்வரும் திருமணமானவர்கள். மனைவியைப் பிரிந்திருக்கும் ராம் கவலைகளை மறந்து, அவனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே மது, மாது எனக் களித்திருப்பது திட்டம்.

ராமின் குளறுபடியால் விலைமாதுவாக வரும் மேகி இறந்துவிட்டதாகக் கருதி அவளது பாடியை மறைக்க நால்வரும் திட்டமிடுகிறார்கள். ஆனால், மேகி இறக்கவில்லை. மாறாகக் காணாமல் போகும் அவளது வைரங்களுக்கு இவர்கள்தான் பொறுப்பு என்று அவள் இவர்களைத் துரத்துகிறாள். இறுதியில் என்னவாயிற்று என்பது கதை.

பஞ்சதந்திரம் | `சினி'ஸ்கோப் 03
பஞ்சதந்திரம் | `சினிஸ்கோப் 03

கதையையெல்லாம் விடுங்கள்.

கிரேஸி மோகனும், கமல்ஹாசனும் கைகோர்த்தால் ஒரு மேஜிக் நிகழும் என்பார்கள். அதைச் சிந்தாமல் சிதறாமல் நிகழ்த்திக்காட்டியது இந்தப்படம்.

இப்படி ஒரு கலகலப்பான டைமிங் காமெடிக் கோர்வையை ஈடு செய்ய இன்னொரு படம் கிடையாது. ஒரு ஜோக்குக்கு சிரிப்பதற்குக்கூட ஒரு சில விநாடிகள்தான் நமக்கான நேரம். அதற்குள் அடுத்த ஜோக்குக்குச் சிரிக்கத் தயாராகிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த காமெடி எக்ஸ்ப்ரஸ் நம்மை விட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கும்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், என்றைக்காவது நண்பர்களோடு ஓர் இரவுச் சந்திப்பை மேற்கொண்டால், பேச்சு சுவாரசியமற்றுப் போனால் கைகொடுப்பது பஞ்சதந்திரம்தான்.

ராமாக கமல்ஹாசன். கமல்ஹாசனுக்கு அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு கதாபாத்திரம். முதல் காட்சியில் சம்ஷுவுக்கு முத்தம் கொடுக்கும் போது அவரது முகபாவனையைப் பார்க்க வேண்டுமே!

மைதிலியாக சிம்ரன். ஒவ்வொருமுறையும் ராமை அவசரப்பட்டு சந்தேகப்பட்டு, பின் உணர்ந்து மீண்டும் கடுப்பாகி அவஸ்தைப்படும் பாத்திரத்தில் அட்டகாசமாகப் பொருந்திப்போயிருப்பார்.

மேகியாக ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணன் அழகின் உச்சத்தில் இருந்த சமயம் அது. அவருக்காகவே உருவாக்கப்பட்ட ’மேரி ஜான்’ பாடலில் அவரது நடனமும், காஸ்ட்யூமும் என்றென்றைக்கும் அவரை ஓர் ஓவியமாக நம் மனதில் நிலைத்து நிற்க வைத்திருக்கும்.

பஞ்சதந்திரம் | `சினி'ஸ்கோப் 03
பஞ்சதந்திரம் | `சினிஸ்கோப் 03

ஐயப்பனாக ஜெயராம். அவரது மனைவியாக ஊர்வசி. நாகேஷிடம், ரம்யாவையை கமலின் மனைவி என ஓர் இக்கட்டான ஒரு சூழலில் சொல்லி வைத்திருப்பார்கள். ஊர்வசியோ, கமலோடு சேர்த்துவைக்க சிம்ரனை உகாதி விழாவுக்கு அழைத்திருப்பார். விழாவில் நாகேஷ் இருப்பதால் சிம்ரன் வந்தால் குழப்பமாகிவிடும் என்பதால் கமல், யூகியிடம் உன் மாமனாரை காலி பண்ணிவிடு என்பார். அதாவது ’இடத்தைக் காலி செய்’ எனும் பொருளில் சொல்லுவார்.

பக்கத்தில் இருக்கும் ஜெயராம் அதைப் பொருளாக்கும் அழகு எப்படி இருக்கும் தெரியுமா? ‘ஆமாடா அவரையும் காலி பண்ணிடலாம், இவனாச்சும் கொஞ்சம் நிம்மதியா இருப்பான். `பாடியை மேகி பாடி மாதிரி பாலத்துக்கு அடியில போட்டுடலாம்’ என்று ஒரு சீரியல் கில்லர் மாதிரியே பேசும் காட்சி ஜெயராமின் அலப்பறைகளுக்கு ஓர் உதாரணம்.

கணேஷாக ரமேஷ் அரவிந்த். அவரது மனைவியாக சங்கவி. தேவயானியின் கதையைச் சொல்லி கமலிடம் உதவி கேட்கும்போது, பக்கத்தில் சிம்ரன் இருப்பதால், கமல் ’லேண்ட்லைனில் சரியாகக் கேட்கவில்லை, செல்போனில் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு மீண்டும் கூப்பிடுவார்.

அப்போதெல்லாம் பொதுவாக செல்போனில் சரியாகக் கேட்கவில்லை, லேண்ட்லைனில் வருகிறேன் என்று சொல்லிப் பேசுவது ரொம்ப சகஜமானது என்பது இங்கே கூடுதல் தகவல். அப்போது ரமேஷ், ’அலோ, யாருங்க, நீங்க நிர்மலா அப்பா இல்லைல்ல’ என்று பேச ஆரம்பிக்கும் அழகே அருமையாக இருக்கும்.

பஞ்சதந்திரம் | `சினி'ஸ்கோப் 03
பஞ்சதந்திரம் | `சினிஸ்கோப் 03

வேதாந்தமாக யூகிசேது. அவரது மனைவியாக ஐஸ்வர்யா. ரம்யாவுடன் செட் ஆகாமல், நண்பர்களின் அறைக்கு வந்துவிடும் கமலுடன் மற்ற மூவரும் விவாதித்துக் கொண்டிருக்க, யூகி மட்டும், ‘நீங்க எல்லோரும் இவனை சமாதானப்படுத்துங்கோ, அங்கே மேகி தனியா இருப்பா, நான் போய் அவளைச் சமாதானப்படுத்துறேன்’ என்று காரியத்தில் கண்ணாக, எழுந்து மேகியின் அறைக்குக் கிளம்பும் இடம் ரசமானது.

ஐவரும் மேகியின் பாடியை மறைப்பதற்குப் பதற்றமாக திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, காலிங் பெல் அடிக்கும். ’பாடியை நாங்கள் பேக் செய்கிறோம், நீ ஏதாவது சொல்லி சமாளி’ என்று சொன்னால் இவர் என்ன செய்வார் தெரியுமா? ‘எஸ், கமின்’ என்பார். அப்பேர்ப்பட்டவர் யூகி.

மாமனார் நாகேஷ் படுத்தும்பாடுகளைச் சமாளிப்பதற்குள் தலைகீழாக நின்று தண்ணிகுடிக்கும் யூகியால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிப்பதற்குள் திணறிப்போவார்கள் மற்ற நண்பர்கள். யூகிசேதுவையெல்லாம் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது துரதிருஷ்டமானது.

அனுமந்தாக ஸ்ரீமன். ஒவ்வொருவரும் செய்யும் குளறுபடிகளைப் பொய் சொல்லிச் சமாளித்துச் சமாளித்து ஒருகட்டத்தில் கமல் அதில் எக்ஸ்பர்ட்டாகவே ஆகியிருப்பார். உண்மை தெரிந்து கமலுடன் சமாதானமாவதற்காக நேரம் கெட்ட நேரத்தில் வரும் சிம்ரனிடம், ஸ்ரீமன் ’அவர்கள் நான்கு பேரும் எங்கள் நான்கு பேரின் மனைவிகள்’ என்று உளறிவைப்பார்.

கோபத்தில் கமல், ஸ்ரீமனைக் கன்னத்தில் அடித்துவிட்டு, அரை விநாடி நேரத்துக்குள் அவர் அடித்ததை மறைக்க வேண்டும் என்றுணர்ந்து, அந்தக் கையை அப்படியே காற்றில் கொண்டு போய் சிம்ரனை நோக்கிவைத்து, ‘இவர் என் மனைவி’ என்று அறிமுகம் செய்வதாக திருப்பிவிடுவார். அந்த இடத்தில் ஸ்ரீமனின் டைமிங்கும், அதிர்ந்து நிற்கும் பாவனையும் ரணகளமாக இருக்கும்.

இவர்கள் தவிரவும் யூகியின் மாமனாராக நாகேஷ், நிர்மலாவாக தேவயானி, ஸ்ரீமனின் மாமனாராக கைகலா சத்யநாராயணா, ஜெயராமின் மாமனாராக நீலு, ரமேஷ் கண்ணா, மணிவண்ணன், கோவை சரளா, சந்தானபாரதி என ஏராளமான நட்சத்திரங்கள் படமெங்கும் நிறைந்திருந்து படத்தை ஒரு கோலாகலமான அனுபவமாக மாற்றிக் கொடுத்திருந்தார்கள்.

படத்தொகுப்பு தணிகாச்சலம், ஒளிப்பதிவு ஆர்தர். ஏ. வில்சன், இசை தேவா. படத்துக்கான கதை கமல்ஹாசன், வசனம் கிரேஸி மோகன்.

திரைக்கதை எழுதி இயக்கியவர் கேஎஸ் ரவிக்குமார். படத்தை ஸ்ரீ ராஜ்லட்சுமி ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்காகத் தயாரித்தவர் பி.எல். தேனப்பன். களமும், சூழலும் தகைந்து வந்ததில் இத்தனை பேரிலும், தனித்துவமாய்த் தெரியும்படி நின்று அடித்து ஆடியிருப்பவர் கிரேஸி மோகன்.

ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இந்தப் படத்தில் நாம் தவறவிட்ட ஒரு காமெடியை நிச்சயமாகக் கவனிக்க முடியும். கிரேஸியின் ஏராளமான படங்களுள் தனித்துவமான அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், சின்ன வாத்தியார், அவ்வை சண்முகி போன்ற முக்கியமான படங்கள் வரிசையில் பஞ்சதந்திரத்தை சந்தேகத்துக்கிடமின்றி முதலாவது இடத்தில் வைக்கலாம்!

ரமேஷ் அரவிந்தின் காதலி தேவயானி காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். ஓடி வந்து அவரைத் தடுக்கிறார் கமல். அந்தக் காட்சியில், ஓரிடத்தில் அரைகுறை மாத்திரையின் பாதிப்பில் தேவயானி தரையில் படுத்துத் தூங்க முயல்கிறார். அவரைத் தூங்கவிடாமல் எழுப்புவதற்காக முதுகில் தட்டி எழுப்புகிறார் கமல்.

‘அப்படித்தான் நல்லாத் தட்டி ஒரு கதை சொல்லு ராம்’

‘கதையா? ஒரு ஊர்ல ராம்னு ஒரு கேனையன் இருந்தானாம்…’

‘காமெடி ஸ்டோரியா?’

‘ஆமா, ஊரே கைகொட்டி சிரிக்கும்’

சினிமாக்களின் இலக்கு கலாரசனையும், தத்துவார்த்தக் கதை சொல்லல் மட்டுமேயல்ல, கேளிக்கையும்தானே! அன்றாட வாழ்வின் அழுத்தங்களைச் சுமந்து வரும் பார்வையாளர்களை இரண்டு மணி நேரம் கவலை மறந்து சிரிக்க வைத்து லேசாக்கி அனுப்புவதும் சினிமாவின் வேலைதான். அப்படியான படங்களுக்கான பிரதிநிதியாகவும், எடுத்துக்காட்டாகவும் என்றும் இருந்துகொண்டிருக்கும் இந்த பஞ்சதந்திரம்!

(தொடரும்)

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.